படித்த பதிவின் பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்த பதிவின் பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 செப்டம்பர், 2017

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.

'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை அவர்களின் பாடலை நினைவு படுத்தியது இந்த பதிவு.  படித்துப் பாருங்களேன்.

படிப்பு மட்டும் தான் அது கிடைக்கவில்லை என்றால் தற்கொலை வரை போகும் குழந்தைகளின் முடிவு கவலை அளிக்கிறது.
கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.

விளையாட்டு விபரீதம் ஆகாமல் இருக்க  கைவினை கற்றுக் கொண்டால்  ப்ளூவேல் தூரமாகும் . குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள், இந்தப் புத்தகத்தைப் பரிசளியுங்கள். என்று சொல்கிறார்கள் இவர்கள்.

காலத்துக்கு ஏற்ற பதிவு.

இன்று சனிக்கிழமை  'எங்கள் ப்ளாக் 'பாஸிடிவ் செய்தியிலும்
 இது போனற செய்தி இருக்கிறது.


குழந்தைகளை விளையாட விடுங்கள் கைவினை கற்றுக் கொடுங்கள்



//கைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு.  நம் பாட்டி-தாத்தாக்கள் கூடை முடைந்தும் பாய் பின்னியும் சும்மா இருந்த மனதை ஒருமுகப்படுத்தினார்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருளை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது தொழிற்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். நாம் எதையும் உருவாக்க தேவையில்லை என நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழிற்நுட்பங்களோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ளவோ, முயற்சித்து பார்க்கும் குழந்தைகள் மனம், தொழிற்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது.  படி, படி என சதா அவர்களை நச்சரிக்கிறோம். விளையாடவோ, அவர்களுடைய பொழுதை பயனுள்ள வகையில் கழிக்கவோ சொல்லித் தந்திருக்கிறோமா? ஒரு பொருளை உருவாக்கிப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறோமா?
தொலைக்காட்சிகளின் முன் மணிக்கணக்காக அமர்ந்து தாங்களாகவே தேவையில்லாத மனசிக்கலை உருவாக்கிக்கொள்ளும் பெரியவர்களுக்காகவும் குழந்தைகளின் கற்பனைத் திறனை படைப்பாற்றலை தூண்டவும் நாங்கள் எடுத்திருக்கும் சிறு முயற்சி ‘செய்து பாருங்கள்’ இதழ்! கைவினைப் பொருட்கள் செய்முறைக்கெனவும் நல்லதொரு வாழ்வியலை அறிமுகப்படுத்தவும் தமிழில் வெளிவரும் முதல் இதழ் இது. இதோ ‘செய்து பாருங்கள்’ இரண்டாம் இதழாக ஜுலை-செப்டம்பர் இதழ் வெளியாகியிருக்கிறது. பளபள தாளின் முழுவண்ணத்தில் தயாராகியிருக்கிறது.//
கீழே வருவது என்னுரை:-

முன்பு நம் கண் எதிரே குழந்தைகள் விளையாடினார்கள். இப்போது விஞ்ஞான வசதிகள் அதிகமாக , அதிகமாக நம்மை விட்டுத் தூரப்படுத்தப்பட்டு விட்டார்கள்.

நாள்தோறும்வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. விளையாட்டைப் பற்றி விரிவாகக்  கலந்துரையாடுகிறார்கள்.  எல்லா துறையைச்
சேர்ந்தவர்களும்.

தெரியாத குழந்தைகளும் அதில் அப்படி என்ன இருக்கு என்று விளையாட ஆவலை தூண்டுவது போல். தீங்கு விளைவிக்கும் என்றால் முற்றிலும் தடை செய்ய வேண்டியது தானே!

சின்ன குழந்தைகள் இந்த வீடியோ பார்த்தால் தான் சாப்பிடுவான் என்று குழந்தை கையில் செல்லை கொடுத்து விட்டு உணவு  ஊட்டுகிறார்கள்.
அந்த குழந்தை அம்மாவின் அன்பையும்  உணவூட்டும் அழகையும் ரசிக்கவில்லை, உணவின் ருசியையும் அறியவில்லை.

சில குழந்தைகள் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளின் செல்லை எடுத்து பார்க்கிறது டச் ஸ்கிரீன் இல்லையா? கேம் இல்லையா?  தான் பார்க்கும் கார்ட்டூன் படம் இல்லையா ? என்று கேட்டு தூக்கிப் போட்டு விடுகிறது.

உறவினர் வீட்டுக் குழந்தை உடைத்த செல்கள் எத்தனை? அவர்கள் அதைப் பெருமையாகப் பேசுகிறார்கள் அவன் பார்க்கும் வீடியோ வரவில்லை கோபத்தில் விட்டு ஏறிந்து விட்டான், உடைந்து விட்டது ரிப்பேர் செய்யக் கொடுத்து இருக்கிறோம் என்கிறார்கள்., அந்தப் பொருளின் விலையைப் பற்றிக் கவலைபடாமல்.

குழந்தை எப்படி முக்கியமோ அது போல் நாம் உழைத்துக் கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்களும் முக்கியம்.  அழும் குழந்தையின் வாயை அடைக்க என்று தற்காலியத்திற்கு கொடுக்கிறோம் என்கிறார்கள்.

ஆசிரியர், பள்ளிகளில் முன்பு பாடங்களைச் சொல்லிக் கொடுத்து  வீட்டுப் பாடங்களைக் கொடுத்தார்கள், அதைத் திருத்தும்   பணி ஆசிரியர்களுக்கும் உண்டு, இப்போது  ஆசிரியர்கள் கணினியில் வேலை கொடுக்கிறார்கள் அதைத் தேடிப்  பாடக்குறிப்புகளைத்  தயார் செய்து மாணவன்  ஜெராக்ஸ் எடுத்துப் போக வேண்டும். பிரிண்ட் செய்து கொண்டு போக வேண்டும்.

 அதனால் மாணவன் வீட்டில் பெற்றோர்களிடம்,
 "படி! படி!  என்று சொல்கிறீர்கள், வேண்டிய வசதி செய்து தாருங்கள்" என்கிறார்கள். கணினி, பிரிண்டர், எல்லாம் வாங்கித் தரச் சொல்லிக் குழந்தைகள் பெற்றோரை நச்சரித்து வாங்குகிறார்கள்.. பெற்றோர்களும் கஷ்டப்பட்டு வாங்கித் தருகிறார்கள், சிலர் கஷ்டப்படாமல் கேட்டதும் வாங்கித் தந்து விடுவார்கள். பெருமையாக எல்லோரிடமும் பாடங்களைக் கணினியில் செய்கிறான் என்று பெருமையாகச் சொல்லி மகிழ்வார்கள்.

பள்ளியில் விழா என்றால் முன்பு ஆசிரியர்தான் நடனம் சொல்லித் தருவார்.
இப்போது ஏதாவது சினிமாப் பாடலைச் சொல்லி நீங்களே வீடியோ போட்டுப் பார்த்து அதே போல ஆடப் பழகி வாருங்கள் என்கிறார்கள்.

முன்பு கல்விஅதிகாரி வரும் போது , சுதந்திரதினம், குடியரசு தினம் , 11வது மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா , ஆண்டு விழா என்று  எவ்வளவு நிகழச்சிகள்!  அத்தனைக்கும் ஆசிரியர் மேற்பார்வையுடன் தான் ஆடல் பாடல்கள் நடந்தன. பள்ளியில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர்கள் என்று பாதுகாவலர்கள் போற்றுபவர்கள் இருந்தார்கள்.

'அப்பாவுக்காக"     என்ற சினிமாவில்    சமுத்திரகனி  அவர்கள் அழகாய்ச்  சொல்லி இருப்பார்.

பள்ளியில் தாஜ்மஹால் செய்து கொண்டு வரும் வேலை குழந்தைக்குக் கொடுத்தால் எல்லோரும் கடையில் செய்து விற்பதை வாங்கிக் கொடுப்பார்கள் ஆசிரியர் குழுவும் கடையில் வாங்கி வந்து  கொடுத்ததில்  எது அழகோ அதற்குப் பரிசு அளிப்பார்கள். அதைக் கண்டித்து ஆசிரிய நிர்வாக குழுவிடம் கேள்வி கேட்பார் அதனால் உங்கள் குழந்தைக்கு இங்கு  இடம் இல்லை என்பார்கள்  வேண்டாம் உங்கள் பள்ளி என்று அழைத்து வந்து விடுவார் குழந்தையை .  அதன் பின் மனைவி,  அக்கம் பக்கத்தில் மற்றும்
உறவில்   அவர் சந்திக்கும் பிரச்சனைகள்  பின் அவருக்கு குழந்தையை வளர்ப்பில் கிடைக்கும் வெற்றியைச் சொல்லும் கதை.

குழந்தைக்குக் கொடுத்த வேலையை, குழந்தை, பெற்றோர், தாத்தா, பாட்டி, சகோதரர்கள் உதவியுடன் அவனே செய்து கொண்டு போனால் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் பெருமிதமும்  மகிழ்ச்சியும் கிடைக்கும், அவனே செய்து இருப்பதை ஆசிரியர் பாராட்டும் போது  மாணவனின் மகிழ்ச்சிக்கு  ஈடு இணை இல்லை.

விஞ்ஞானத்தால் நன்மையும், தீமையும் உண்டு. நன்மையை எடுத்துக் கொள்வோம், தீமையை விலக்குவோம்.

                                                          வாழ்க வளமுடன்.