எனது பெற்றோர்
எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.
'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு'
என்றார் திருவள்ளுவர்.
போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர், துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள் என் தாய்.
எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும் துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும் இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை சேர்த்தார்கள்.
எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன் படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.
இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமை இறைவனடி சேர்ந்தார்கள்.