செவ்வாய், 18 ஏப்ரல், 2023

மோன தவத்தில் இருக்கும் வண்ணத்துப்பூச்சி


மோன தவத்தில் இருக்கும் வண்ணத்துப்பூச்சி

அட்லாண்டாவில் மகள் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் மரத்தின் துளிர் இலையில் வந்து அமர்ந்த வண்ணத்துப்பூச்சி.
அதை பார்த்து படம் எடுத்தவுடன் என் மனதில் தோன்றியது இந்த பதிவு.



கருமமே கண்ணாக தவம் செய்கிறதோ!

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றலார் 
அவம் செய்வார் ஆசையுட் பட்டு

-திருக்குறள்


பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா !- நிந்தன் பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா! என்று நினைக்கிறதோ!


நிமிடங்கள் சென்றன , அது சிறகை விரிக்கவில்லை, சிறகை விரிக்கும் போது படம் எடுக்கலாம் என்று காத்து இருந்தேன். 

 

ஆடாமல், அசையாமல்  ஒரே நிலையில் அமர்ந்து இருந்தது, தவமாய் தவமிருந்து தானே கூட்டு புழுவாக இருந்த நீ  வண்ணத்து பூச்சியாக வந்தாய் ? இன்னும் என்ன தவம்? என்று மனம் கேட்டது வண்ணத்து பூச்சியிடம். 

கடைசி படம் எடுத்து முடித்து காமிரவை வேறு கோணத்தில் மாற்றும் போது பறந்து விட்டது.


செய்க தவம் !  செய்க தவம் ! நெஞ்சே !  தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் என்கிறார் பாரதியார். அதனால் விரும்பிதை அடைய தவம் செய்கிறதோ!




பராதியாரின் இந்த பாடல் எனக்கு  பிடிக்கும். பாடல் வரிகளுடன் இருக்கிறது. பொதிகை மலையின் அழகு,   அருவியின் அழகு, பறவைகள் பறத்தல்  என்று  இயற்கையை ரசித்து கொண்டே பாடலை  கேட்கலாம். பாரதியார் தவம் செய்யும் காட்சியும் வரும். அவரும் தவம் செய்த சித்தபுருஷர் தான்.  புதுச்சேரியில் இருந்த போது பல சித்தர்களுடன் பழகி  இருக்கிறார். 

மரக்கிளையில் இலையின் மேல்  வண்ணத்துப்பூச்சி ஒடுங்கி நின்ற கோலத்தைப்பார்த்தவுடன் நினைவுக்கு வந்த பாடல்


ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவத்தில்லை நமனுமங்கில்லை
         இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
     படும்பயன் இல்லை பற்று விட்டோர்க்கே

என்ற திருமூலர் திருமந்திர பாடல் நினைவுக்கு வந்தது.

பாட்டின் பொருள்:-

//உலக பொருள்கள் மேற்பரந்து செல்லுதலை யொழித்து இறைவனது திருவடிக்கீழே சென்று ஓடுங்கி நிலைபெற்ற உயர்ந்தோரது உள்ளங்கள் யாதொன்றற்கும் அஞ்சுதல் இல்லை;  அவர்கள்பால் கூற்றுவன் செல்லுதலும் இல்லை, எல்லாப்பற்றுக்களையும் முற்றும் விடுத்த அவர்கட்கு வரக்கடவொரு  துன்பமும் இல்லை;  இரவு பகல் முதலிய கால வேறுபாடுகள் இல்லை; உலகத்தில் விளைவதொரு பயனும் இல்லை.//

 பன்னிரு திருமுறை பாட்டு  தளத்தில் கொடுத்து இருந்த  விளக்கம்.

 

நான் தரிசனம் செய்த கோவில்கள்

 பதிவில் ஜீவி சாருக்கு நெல்லைத் தமிழன்  கொடுத்த பதில்

//இப்போதுதான் வீட்டிலிருந்து (குடும்பத்திலிருந்து) மனதளவில் விலகும் மனநிலை வர ஆரம்பித்திருக்கிறது.//

 இறை தரிசனம் செய்யும் போது இப்போதுதான் வீட்டு நினைவு ஏற்படாமல் வணங்க முடிகிறது என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

இந்த பதிலை படித்தவுடன் எனக்கும் இங்கு  இயற்கையை ரசிக்கும் போதும் வேறு எந்த நினைவுகளும் வராமல் இருக்கிறது  என்று தோன்றியது. இந்த ஒன்றுதல், ஒடுங்குதல் காரணமாக வேறு சிந்தனை வந்து வாட்டுவது இல்லை.


நானும் பற்றுக்களினின்று விடுபட்டு இறைவன் திருவடிக்கீழே ஒடுங்கி நிற்கும் முயற்சியை தொடங்க வேண்டும். காலத்தால் கை கூட வேண்டும் . அந்த ஞானம் வந்து விட்டால்  போதும். இயற்கையும் இறைவன் தான் அந்த வழிபாட்டில் மனதை  செலுத்தி வருகிறேன்.   

இயற்கையை ரசித்து படங்கள் மட்டுமே  எனக்கு தெரிந்த அளவில் எடுத்து பதிவில் போட முடியும்.   இயற்கையை  போற்றி  கவி பாட முடியாது, தெரியாது.   இயற்கையை  ரசித்து  ஆராதனை செய்து கொள்கிறேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

48 கருத்துகள்:

  1. வண்ணத்துப் பூச்சி ஒரே படமே வந்திருப்பதுபோலத் தோன்றுகிறது, ஒரே மோனத்தவத்தில் இருப்பதால்.

    அது தந்த சிந்தனையும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //வண்ணத்துப் பூச்சி ஒரே படமே வந்திருப்பதுபோலத் தோன்றுகிறது, ஒரே மோனத்தவத்தில் இருப்பதால்.//

      வண்ணத்துப்பூச்சி ஒரே கோணத்தில் இருந்தாலும் 6 வித்தியாசங்கள் கண்டு பிடிக்க முடியும் நான் எடுத்த படங்களில்.

      //அது தந்த சிந்தனையும் நன்று.//

      நன்றி.

      நீக்கு
  2. இறை தரிசனத்தில் மனம் ஒன்றுவதில்லை. சில நேரங்களில்தான் மனம் ஒன்றுகிறது.

    மனதளவில் விலகுவது...... பொறுப்பைத் தட்டிக்கழிப்பது போன்றது, எனவும் எனக்குத் தோன்றுகிறது. பணம் சம்பந்தமான, பசங்க படிப்பு, வேலை சம்பந்தமாக நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. மனைவிக்கு இதில் வேலை அதிகமென்றாலும், என்னைவிட அவளுக்கு இதில் பொறுமையும் அறிவும் (knowledge) உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இறை தரிசனத்தில் மனம் ஒன்றுவதில்லை. சில நேரங்களில்தான் மனம் ஒன்றுகிறது.//

      மனம் ஒன்றும் போது இறை தரிசனம் நன்றாக இருக்கும். அதை நினைந்து நினைந்து மனம் மகிழும்.

      //மனதளவில் விலகுவது...... பொறுப்பைத் தட்டிக்கழிப்பது போன்றது, எனவும் எனக்குத் தோன்றுகிறது.//

      ஆமாம். பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது.

      // பணம் சம்பந்தமான, பசங்க படிப்பு, வேலை சம்பந்தமாக நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. மனைவிக்கு இதில் வேலை அதிகமென்றாலும், என்னைவிட அவளுக்கு இதில் பொறுமையும் அறிவும் (knowledge) உண்டு.//

      அவர்கள் நீங்கள் வெளி நாட்டில் இருந்த போது இந்த கடமைகளை திறம்பட செய்து இருப்பார்கள், அதனால் அவர்களே செய்யட்டும் என்று விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
      புரிதல் இருக்கும் போது நல்லதுதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. என் அம்மா, போன் போட்டுத்தருவதற்கும் அப்பாவை எதிர்பார்ப்பார். அதுவே என் மனதில் பதிந்து, மனைவிக்கு எல்லாமே தெரியணும் என்ற ஐராக்கியம் வந்துவிட்டது. இப்போ பிரச்சனை, எனக்கு ஒன்றும் தெரியாது, மனைவி இல்லைனா டிக்கெட்கூட புக் கண்ணத் தெரியாது. ஹாஹாஹா

      நீக்கு
    3. //என் அம்மா, போன் போட்டுத்தருவதற்கும் அப்பாவை எதிர்பார்ப்பார். அதுவே என் மனதில் பதிந்து, மனைவிக்கு எல்லாமே தெரியணும் என்ற ஐராக்கியம் வந்துவிட்டது.//

      நானும் எல்லாமே கணவரை சார்ந்தே வாழ்ந்து விட்டேன். அவர்களும் நான் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள்.

      இப்போது குழந்தைகளை சார்ந்து இருக்கிறேன். கற்றுக் கொடுக்கிறார்கள் , கற்று வருகிறேன்.

      உங்கள் மனைவிக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம்.

      //இப்போ பிரச்சனை, எனக்கு ஒன்றும் தெரியாது, மனைவி இல்லைனா டிக்கெட்கூட புக் கண்ணத் தெரியாது. ஹாஹாஹா//

      அதையும் மகிழ்ச்சியாக செய்வார்கள் உங்கள் மனைவி. அவர்களை பாராட்டி அன்பு செலுத்தினால் போதும் எவ்வளவு பொறுப்புகள் இருந்தாலும் அத்தனையும் மகிழ்ச்சியாக செய்வார்கள். கொண்டவன் துணையிருந்தால் போதும்.

      வாழ்க வளமுடன்.

      நீக்கு
  3. வண்ணத்துப்பூச்சி அசையாமல் உங்களை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது!  நீங்கள் "ஆயுதத்தை" சற்றே அதன் திசையிலிருந்து விலக்கியதும் பறந்து விட்டது!  கூர்நோக்கு!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //வண்ணத்துப்பூச்சி அசையாமல் உங்களை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது! நீங்கள் "ஆயுதத்தை" சற்றே அதன் திசையிலிருந்து விலக்கியதும் பறந்து விட்டது! கூர்நோக்கு!!!//
      ஒரு நிமிடம் நிற்காது பறக்கும் குணம் அதற்கு உண்டு. நான் பால்கனி பக்கம் இருந்தேன், அது சற்று தள்ளி உள்ள உயரத்தில் உள்ள கிளையில் உள்ள இலையில் என்னை பார்க்க முடியாது, இருந்தாலும் நீங்கள் சொல்வது போல அதன் கூர் நோக்கு அருமை.

      நீக்கு
  4. நெல்லைத்தமிழன் பதிலை நான் வேறு விதமாக புரிந்து கொண்டேன்.  அதுதான் சரி என்று அவர் பதிலும் சொல்கிறது.  கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நெல்லைத்தமிழன் பதிலை நான் வேறு விதமாக புரிந்து கொண்டேன். அதுதான் சரி என்று அவர் பதிலும் சொல்கிறது. கிட்டத்தட்ட நானும் இப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இருக்கிறேன்!//

      தாமரை இலை தண்ணீர் போலவா?
      விறுப்பு வெறுப்பு அற்ற தன்மை. உயர்ந்த நிலைதான்.
      குடும்ப பொறுப்பை பாஸ் பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதியா?

      நீக்கு
    2. ​//குடும்ப பொறுப்பை பாஸ் பார்த்துக் கொள்வார் என்ற நிம்மதியா?//


      அப்படி சொல்ல வெட்கமாக இருக்கும்! ஆனால் வளர்ந்த குழந்தைகள் இருக்கும் இடத்தில் அவரவர்கள் அவரவர் பிரச்னையைப் பார்த்துக் கொள்வார்கள்.

      நீக்கு
    3. //வளர்ந்த குழந்தைகள் இருக்கும் இடத்தில் அவரவர்கள் அவரவர் பிரச்னையைப் பார்த்துக் கொள்வார்கள்.//

      ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்


      வளர்ந்த குழந்தைகள் அவரவர்கள் அவரவர் பிரச்னையைப் பார்த்துக் கொள்வார்கள் இருந்து விட்டால் நல்லதுதான்.



      . நெல்லைக்கும் இரண்டு பிள்ளைகளும் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்களா?

      அப்படியென்றால் கவலை இல்லை,

      நீக்கு
    4. வாழ்க்கையில் கவலை தொடர்ந்துகொண்டே இருக்கும். மகள் சிறப்பாகப் படித்து நல்ல வேலைக்குப் போகிறாள். திருமணக் கவலை எனக்கு. மகன் 1 1/2 வருடம் வேலைக்குச் சென்றுவிட்டு இன்னும் சில மாதங்களில் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்கிறான். அந்தக் கவலையும் சேர்ந்துகொண்டது. இரண்டும் சேர்ந்து புதிய கவலைகளை எழுப்புகிறது, மகள் வேலையும் இன்னும் சில கவலைகளையும் ஏற்படுத்துகிறது. என்ன செய்ய?

      நீக்கு
    5. //வாழ்க்கையில் கவலை தொடர்ந்துகொண்டே இருக்கும்//

      ஆமாம், ஒன்று முடிந்தால் இன்னொன்று என்று தொடரும் தான் கவலைகள்.

      மகரிஷி சொல்வார் கவலை மிகவும் மோசமானது, கவலைக்கு கவலை கொடுக்க வேண்டும். "கவலை ஒழித்தல் "
      பயிற்சி வைத்து இருக்கிறார் வாழ்க்கை பாடத்திட்டத்தில்.

      பொறுமை காட்ட வேண்டிய கவலை மகளின் திருமணம். பொறுமையாக கவலை படாமல் நல்லதாக தேர்வு செய்யுங்கள் வாழ்க்கை துணையை மகளுக்கு.

      //மகள் சிறப்பாகப் படித்து நல்ல வேலைக்குப் போகிறாள். திருமணக் கவலை எனக்கு. //

      குழந்தைகள் பெரியவர்கள் ஆகி விட்டால் இன்னும் பொறுப்பும் கடமையும் அதிகமாகிறது. நல்ல வரன் கிடைத்து மணவாழ்க்கை நல்லபடியாக இருக்க வாழ்த்துகிறேன்.

      //மகள் வேலையும் இன்னும் சில கவலைகளையும் ஏற்படுத்துகிறது. என்ன செய்ய?//

      ம்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கிறதா? இப்போது எல்லாம் பெண்கள் இரட்டை பாரம் சுமப்பது போலதான் இருக்கிறது, வேலை, குடும்பம் என்று.

      //இன்னும் சில மாதங்களில் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்கிறான். அந்தக் கவலையும் சேர்ந்துகொண்டது. இரண்டும் சேர்ந்து புதிய கவலைகளை எழுப்புகிறது,//

      மகன் நல்ல படியாக மேற்படிப்புக்கு வெளிநாடு சென்று படிக்க வாழ்த்துகள்.

      நம்மால் முடிந்தவைகளை நல்லபடியாக குழந்தைகளுக்கு செய்வோம் .
      இரண்டும் நல்லபடியாக நடக்க இறைவன் அருள்புரிவார்.

      பெற்றோர்களுக்கு ஏதாவது கவலைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.

      மகன் சொல்வான் உங்களை கவலை இல்லாமல் இருக்க வைக்க நினைக்கிறோம், நீங்கள் ஏதாவது கவலையை வலிய இழுத்து கொண்டு கவலை பட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்று.



      நீக்கு
  5. 'நிற்பதுவே நடப்பதுவே' மிக அருமையான பாடல்.  எனக்கும் மிகவும் பிடிக்கும்.  ஹரீஷ் ராகவேந்தர் குரல் என்று நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நிற்பதுவே நடப்பதுவே' மிக அருமையான பாடல். எனக்கும் மிகவும் பிடிக்கும். ஹரீஷ் ராகவேந்தர் குரல் என்று நினைவு.//

      ஆமாம், ஹரீஷ் ராகவேந்தர்தான். நன்றாக பாடி இருப்பார். நல்ல இசை.

      நீக்கு
  6. நீங்கள் தவம் என்ற அளவில் சென்று அது சம்பந்தமாக திருமூலர் பாடல் எல்லாம் சொல்கிறீர்கள்.  அதெல்லாம் நான் அறியேன்!  வண்ணத்துப்பூச்சி சம்பந்தமாக எனக்கு சில திரையிசைப் பாடல்கள் நினைவுக்கு வந்தன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் தவம் என்ற அளவில் சென்று அது சம்பந்தமாக திருமூலர் பாடல் எல்லாம் சொல்கிறீர்கள். அதெல்லாம் நான் அறியேன்! //

      தவம், தற்சோதனை பல காலம் செய்தேன். இப்போது தவத்தில் மனம் ஒன்றுவது இல்லை. கண்களை மூடி சம்மணம் போட்டு அமர முடியவில்லை.மனம் முட்டி வலியில் முட்டி தவம் செய்கிறது.

      நாற்காலியில் அமர்ந்து, அல்லது படுக்கையில் அமர்ந்து நான் படித்த முறையில் ஏதோ செய்து கொண்டு இருக்கிறேன்.
      மனம் ஒடுங்குதல் என்று நினைப்பு வந்த போது படித்த திருமந்திர பாடல் நினைவுக்கு வந்தது. பன்னிருதிருமுறை பாடல் ஞாயிறு தோறும் வார வழிபாட்டில் பாடுவோம்.
      வண்ணத்துப்பூச்சியின் மோனதவம் பார்த்து மனதில் பல பல சிந்தனைகள் அதுதான் இந்த பதிவு.

      பூபூவாய் பூத்து இருக்கும் பட்டு பூச்சி அக்கா, ஓ! பட்டர்பிளை பாடல்கள் உங்கள் நினைவுக்கு வந்து இருக்குமே!
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. தத்துவார்த்தமான பதிவு..

    இதற்கு மேல் என்ன சொல்வது?..

    இருப்பினும் இது குறித்து மனதில் தோன்றுவதைச் சொல்வேன்..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      தத்துவார்த்தமான பதிவு..

      இதற்கு மேல் என்ன சொல்வது?..

      இருப்பினும் இது குறித்து மனதில் தோன்றுவதைச் சொல்வேன்..//

      சொல்லுங்கள் உங்கள் மனதில் தோன்றியதை.
      நீங்கள் மனதில் தோன்றுவதை கவிதையாக்கி விடுகிறீகள்.நான்
      பதிவுக்கு ஏதோ படித்தவற்றை மேற்கோள் காட்டினேன்.அதோடு என் மனநிலையை சொன்னேன், அது தத்துவார்த்தமான பதிவாகி விட்டதா!

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.



      வண்ணத்துப்பூச்சி ஏற்படுத்திய தாக்கம். அந்த நேரம் மனம் நினைத்த பதிவு. அடுத்து ஏதையாவது பார்க்கும் போது எண்ணம் மாறும்.


      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      //வண்ணத்து பூச்சி அழகு..//

      நன்றி.

      நீக்கு
  9. சிறப்பான குறள்...

    ஒரே ஒரு முறை "ஆசை" என்று வரும் குறள்...

    "அவா" தொகுப்பில் இந்தக் குறளை சேர்க்காமல் விட்டால், கணக்கு சரிவராது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான குறள்...//

      ஆமாம்.

      ஒரே ஒரு முறை "ஆசை" என்று வரும் குறள்...//

      ஓ ! அப்படியா? தெரிந்து கொண்டேன், நன்றி.

      //"அவா" தொகுப்பில் இந்தக் குறளை சேர்க்காமல் விட்டால், கணக்கு சரிவராது..//

      ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நன்றாக சொல்லி விட்டார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி தன்பாலன்.

      நீக்கு
  10. அழகிய படங்கள் மிகவும் அருமை சகோ

    சிறப்பான பாடல்களை தேர்வு செய்து இருக்கிறீர்கள்.

    நானும் இப்பொழுதுதான் இறைவனை நினைத்து நெருங்குகிறேன்.

    இதம்பாடல் குலதெய்வ கோயிலில் தங்கி கும்பாபிஷேக வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

    வேலை செய்பவர்களுக்கு தங்கும் அறைகளை கொடுத்து விட்டு நான் மட்டும் கோயிலில் உறங்கிகிறேன்.

    நீண்ட காலத்திற்கு பிறகு நிம்மதியான உறக்கம் கிடைத்து இருக்கிறது.

    கும்பாபிஷேகம் மே 24 வைகாசி 10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைவிட ஒரு நல்ல செயல் கிடையாது கில்லர்ஜி (உண்டு....ஏதிலிகளுக்கு வயிற்றுக்கு உதவுவது, ஆதரவாக இருப்பது... ஏழைக்குக் கல்வி கொடுப்பது). அப்படியே தொடருங்கள். இறைவன் நம் நல்வழிக்குத் துணையாவான். அந்தப் புண்ணியமே உங்கள் சந்ததிகளையும் வழிநடத்தும்.

      நீக்கு
    2. @கில்லர்ஜி! நிம்மதியான உறக்கம் நீடித்து இருக்கட்டும். மனம் தெளிவு பெறட்டும்.

      நீக்கு
    3. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //அழகிய படங்கள் மிகவும் அருமை சகோ

      சிறப்பான பாடல்களை தேர்வு செய்து இருக்கிறீர்கள்.//

      நன்றி.

      //நானும் இப்பொழுதுதான் இறைவனை நினைத்து நெருங்குகிறேன்.

      இதம்பாடல் குலதெய்வ கோயிலில் தங்கி கும்பாபிஷேக வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.//

      நல்லது ஜி, கும்பாபிஷக வேலைகள் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
      இறைவனின் நினைவுடன் வேலைகளை சிறப்பாக செய்யுங்கள்.
      நாம் அவனை நோக்கி அடி எடுத்து வைக்கும் போது அவன் நம்மை நோக்கி தன் கையை பிடித்து கொள்ள நெருங்கி வருவார்.


      //வேலை செய்பவர்களுக்கு தங்கும் அறைகளை கொடுத்து விட்டு நான் மட்டும் கோயிலில் உறங்கிகிறேன்.//

      அவர்களுக்கு உறங்க நல்ல இடம் கொடுத்து இருக்கிறீர்கள் நிம்மதியாக தூங்கினால் தான் அவர்கள் மறுநாள் நல்லபடியாக வேலையை தொடர முடியும்.

      //நீண்ட காலத்திற்கு பிறகு நிம்மதியான உறக்கம் கிடைத்து இருக்கிறது.//
      அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வாழ்த்தி இருப்பார்கள், அதுதான் நல்ல தூக்கம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.

      நெல்லைத்தமிழன் அவர்கள் உங்களுக்கு பதில் கொடுத்து இருப்பது போல நல்லது செய்து கொண்டு இருக்கிறீர்கள், அல்லது தானாக மறைந்து மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும். உங்கள் எண்ணம் போல குழந்தைகளும் உங்களை புரிந்து கொள்வார்கள், அதற்கு குலதெய்வம் துணை வருவார்.

      //கும்பாபிஷேகம் மே 24 வைகாசி 10//

      குமபாபிஷேகம் இறைவன் அருளால் நல்லபடியாக நடக்கும்.

      நீக்கு
  11. வண்ணத்துப் பூச்சியின் மோனத்தவம் எத்தனை பேர்களிடம் எத்தனை எத்தனை நினைவலைகளையும் எண்ணங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது! படங்கள் எல்லாம் துல்லியம். நன்றாக இருக்கின்றன. படத்துக்கேற்பப் பொருத்தமான பாடல்களையும் தத்துவ ரீதியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இயற்கையை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்

      //வண்ணத்துப் பூச்சியின் மோனத்தவம் எத்தனை பேர்களிடம் எத்தனை எத்தனை நினைவலைகளையும் எண்ணங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது! //

      வணத்துப்பூச்சிக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல நிறைய நினைவலைகளை, எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வைத்து விட்டது.

      //படங்கள் எல்லாம் துல்லியம். நன்றாக இருக்கின்றன. படத்துக்கேற்பப் பொருத்தமான பாடல்களையும் தத்துவ ரீதியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். //

      நன்றி.

      //இயற்கையை ரசிக்க ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது.//

      ஆமாம், நேரம் போவதே தெரியாதுதான்.
      இருட்ட எட்டுமணிக்கு மேல் ஆகிறது. நேரம் காலமும் தெரிவது இல்லை. பற்வைகளின் சத்தம் இரவு 9 மணி வரை கேட்கும். அப்புறம் சுவற்று கோழியின் சத்தம் "கிரிக் கிரிக்" என்று கேட்டுக் கொண்டே இருக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. அக்கா படங்கள் அழகு, ஆமாம் வண்ணத்துப் பூச்சிகள் பல நேரங்களில் இப்படி அமர்ந்து அசையாமல் இருக்கும்.

    பார்க்கவே அழகாக இருக்கும்., முந்தைய வீட்டில் இப்படி வந்து அமர்ந்தவற்றை அதுவும் பூக்கள் உண்டே அந்த வீட்டில் இலைகள் பூக்கள் என்று அமரும். படங்கள் எடுத்துள்ளேன்.

    தலைப்பு அருமை!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா படங்கள் அழகு, ஆமாம் வண்ணத்துப் பூச்சிகள் பல நேரங்களில் இப்படி அமர்ந்து அசையாமல் இருக்கும்.

      பார்க்கவே அழகாக இருக்கும்., முந்தைய வீட்டில் இப்படி வந்து அமர்ந்தவற்றை அதுவும் பூக்கள் உண்டே அந்த வீட்டில் இலைகள் பூக்கள் என்று அமரும். படங்கள் எடுத்துள்ளேன்.//


      பூவில் தேன் உண்டு இப்படி மயங்கி இருக்கும் ஆனால் இலையில் இப்படி இருப்பதை பார்ப்பது முதல் தடவை.

      தலைப்பு அருமை!!/

      நன்றி கீதா


      நீக்கு
  13. ஆடாமல், அசையாமல் ஒரே நிலையில் அமர்ந்து இருந்தது, தவமாய் தவமிருந்து தானே கூட்டு புழுவாக இருந்த நீ வண்ணத்து பூச்சியாக வந்தாய் ? இன்னும் என்ன தவம்? என்று மனம் கேட்டது வண்ணத்து பூச்சியிடம். //

    ஆஹா தத்துவமான, கவித்துவமான வரிகள் கோமதிக்கா..

    நானும் யோசிப்பதுண்டு என்ன நினைத்துக் கொண்டு இப்படி ஆடாமல் அசையாமல் இருக்கும் என்று அதன் அசைவை காணொளி எடுக்கலாம் என்று காத்திருந்தால் அது பறந்து போய்விடும்!

    படத்திற்கான வரிகள் பாரதியின் பாடல் அருமை. ரொம்பப் பிடித்த பாடல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆஹா தத்துவமான, கவித்துவமான வரிகள் கோமதிக்கா..

      நானும் யோசிப்பதுண்டு என்ன நினைத்துக் கொண்டு இப்படி ஆடாமல் அசையாமல் இருக்கும் என்று அதன் அசைவை காணொளி எடுக்கலாம் என்று காத்திருந்தால் அது பறந்து போய்விடும்!//

      ஆமாம், பலமுறை ஏமாற்றி விடும். நிறைய படங்கள் வண்ணத்துப்பூச்சி பற்றி பதிவு போட்டு விட்டேன் கீதா. நியூஜெர்சியில் மகன் வீட்டுத்தோட்டத்தில் திரட்சை கொடியின் இலையில் வண்ணத்துப்பூச்சியின் நடனம் காணொளி போட்டு இருக்கிறேன்.

      //படத்திற்கான வரிகள் பாரதியின் பாடல் அருமை. ரொம்பப் பிடித்த பாடல்//

      மகிழ்ச்சி கீதா.

      நீக்கு
  14. பாரதியின் பாடலும் மிகவும் பிடிக்கும் நிற்பதுவே நடப்பதுவே அருமையான பாடல். நிஜமாகவே கோமதிக்கா இயற்கையோடு ஒன்றினாலே தவம் தான்.

    நானும் தங்கை மகளும் அடிக்கடி பேசிக் கொள்வது இயற்கையோடு ஒன்றினாலே ஆன்மீகம் என்று. தவம் என்று....ஒரே அலைவரிசை எங்கள் இருவருக்கும். இப்படித்தான் பேசுவோம்...

    ரசித்து வாசித்தேன் பதிவை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரதியின் பாடலும் மிகவும் பிடிக்கும் நிற்பதுவே நடப்பதுவே அருமையான பாடல். நிஜமாகவே கோமதிக்கா இயற்கையோடு ஒன்றினாலே தவம் தான்.//

      ஆமாம் கீதா.

      //நானும் தங்கை மகளும் அடிக்கடி பேசிக் கொள்வது இயற்கையோடு ஒன்றினாலே ஆன்மீகம் என்று. தவம் என்று....ஒரே அலைவரிசை எங்கள் இருவருக்கும். இப்படித்தான் பேசுவோம்...//

      தங்கை மகள் போல நாமும் அப்படித்தான் பேசிக் கொள்கிறோம். ஒத்த அலைவரிசையோடுதான் நட்பும் இணையும்.

      //ரசித்து வாசித்தேன் பதிவை//

      நன்றி.

      நீக்கு
  15. இந்த பதிலை படித்தவுடன் எனக்கும் இங்கு இயற்கையை ரசிக்கும் போதும் வேறு எந்த நினைவுகளும் வராமல் இருக்கிறது என்று தோன்றியது. இந்த ஒன்றுதல், ஒடுங்குதல் காரணமாக வேறு சிந்தனை வந்து வாட்டுவது இல்லை.//

    அக்கா ஹைஃபைவ்! கை கொடுங்க. நானும் இப்படித்தான். பறவைகளைப் பார்த்து, இயற்கையை பார்த்து ஒன்றும் போது எனக்கு வேறு நினைவுகள் எதுவும் வராது.

    பறவைகள் குஞ்சுகள் பொரித்து மகிழ்ச்சியாக ஏரியில் உலா வருகின்றன. பார்த்து மகிழ்ந்து பரவசமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சென்று எல்லாம் பத்திரமாக இருக்கா என்று பார்த்து கேட்டுவிட்டு வருவேன்!

    உங்களையும் நினைத்துக் கொள்வேன் கோமதிக்கா. இப்ப கோமதிக்கா என்னோடு இருந்தால் என்னைப் போல் மகிழ்ச்சியோடு ஒன்றிப் போய் பார்த்திருப்பாங்கன்னு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //அக்கா ஹைஃபைவ்! கை கொடுங்க. நானும் இப்படித்தான். பறவைகளைப் பார்த்து, இயற்கையை பார்த்து ஒன்றும் போது எனக்கு வேறு நினைவுகள் எதுவும் வராது.//

      கீதா ஹைஃபைவ்! நீங்களும் இயற்கை ஆர்வலர்தானே

      //பறவைகள் குஞ்சுகள் பொரித்து மகிழ்ச்சியாக ஏரியில் உலா வருகின்றன. பார்த்து மகிழ்ந்து பரவசமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சென்று எல்லாம் பத்திரமாக இருக்கா என்று பார்த்து கேட்டுவிட்டு வருவேன்!//

      ஓ ! அருமை. மகிழ்ச்சியாக இருக்கிறது கேட்க.

      //உங்களையும் நினைத்துக் கொள்வேன் கோமதிக்கா. இப்ப கோமதிக்கா என்னோடு இருந்தால் என்னைப் போல் மகிழ்ச்சியோடு ஒன்றிப் போய் பார்த்திருப்பாங்கன்னு//

      என்னை நினைத்துக் கொள்வது மகிழ்ச்சி. கண்டிப்பாய் மகிழ்ச்சியோடு உங்களுடன் உரையாடி மகிழ்ந்து இருப்பேன் என்பது உண்மை.

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. // இப்போது தான் வீட்டிலிருந்து (குடும்பத்திலிருந்து) மனதளவில் விலகும் மனநிலை வர ஆரம்பித்திருக்கிறது..//

    என்னதான் விலகினாலும் திரும்பவும் இந்த பந்தங்களுக்குள் தான் வந்தாக வேண்டும்..

    புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியனின் நினைவு வேண்டும் என்று கேட்கும் நம்மைப் புழுவாகப் பிறக்க வைப்பானோ இறைவன்..

    கருவாய்க் கிடந்தும் கழலே நினையும் கருத்துடையவனாகப் பிறக்க வைப்பானே பெருமான்..

    திருநாவுக்கரசர் திருவாக்கே சத்தியம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னதான் விலகினாலும் திரும்பவும் இந்த பந்தங்களுக்குள் தான் வந்தாக வேண்டும்..//
      ஆமாம். குடும்ப பந்தங்களை விட்டு எப்படி விலக முடியும்?

      //புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியனின் நினைவு வேண்டும் என்று கேட்கும் நம்மைப் புழுவாகப் பிறக்க வைப்பானோ இறைவன்..

      கருவாய்க் கிடந்தும் கழலே நினையும் கருத்துடையவனாகப் பிறக்க வைப்பானே பெருமான்..

      திருநாவுக்கரசர் திருவாக்கே சத்தியம்..//

      எப்போதும் அவன் நினைவுடன் இருப்பதும், ஒவ்வொரு காட்சியிலும் செயலிலும் அவன் இருப்பதை உணர்தலே இறைவழிபாடு.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வண்ணத்துப்பூச்சியின் மோன நிலை குறித்து அற்புதமாக ஒரு பதிவை எழுதி விட்டீர்கள். அதற்கு சான்றாக பல உவமானங்கள். எல்லாவற்றையும் ரசித்துப் படித்தேன். பாடல் அருமை. பாரதியார் படப்பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். காணொளியுடன் இன்றுதான் பார்த்து கேட்டேன்.

    இந்த மாதிரி வண்ணத்துப்பூச்சி ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பதை நானும் கவனித்திருக்கிறேன். தங்கள் சிந்தனைகளும் நன்று. திருமூலர் பாடலும் அதன் விளக்கமும் சிறப்பாக, பதிவுக்கு பொருத்தமாக அமைந்து விட்டது. இவ்வாறு தேர்ந்தெடுத்து பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்.

    இங்கு கடந்த மூன்று தினங்களாக குடும்பத்துடன் மைசூர் சென்று வந்தோம். அதனால் வலைப்பக்கம் வர இயலவில்லை. திங்கள் இரவுதான் வந்தோம். நேற்று முழுக்க வேலைகளுடன் ஒரே பயண களைப்பாக இருந்தது. இன்று பரவாயில்லை. அதனால்தான் பதிவுகளுக்கு தாமத வருகை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. வண்ணத்துப்பூச்சியின் மோன நிலை குறித்து அற்புதமாக ஒரு பதிவை எழுதி விட்டீர்கள். அதற்கு சான்றாக பல உவமானங்கள். எல்லாவற்றையும் ரசித்துப் படித்தேன். பாடல் அருமை. பாரதியார் படப்பாடலை அடிக்கடி கேட்டுள்ளேன். காணொளியுடன் இன்றுதான் பார்த்து கேட்டேன்.//

      ரசித்து படித்து காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //இந்த மாதிரி வண்ணத்துப்பூச்சி ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பதை நானும் கவனித்திருக்கிறேன். தங்கள் சிந்தனைகளும் நன்று. திருமூலர் பாடலும் அதன் விளக்கமும் சிறப்பாக, பதிவுக்கு பொருத்தமாக அமைந்து விட்டது. இவ்வாறு தேர்ந்தெடுத்து பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்.//

      பதிவுகளுக்காக் படித்தவைகளை மீண்டு நினைவு படுத்தி கொள்ள முடிகிறது , மீண்டும் படிக்க முடிகிறது. இங்கு கதை புத்தகங்கள் படித்து வருகிறேன் அதில் ஜெயகாந்தன் அவர்கள் கதை விழுதுகள் படித்த தாக்கமும் இந்த பதிவு. நிறைய சாமியார்கள் (உண்மையான சாமியார்கள்) உலகத்தை மறந்து மோனதவத்தில் இருப்பவர்கள் , தங்களுக்கு சக்திகள் இருக்கிறது, தாங்கள் சாமியார் என்றே தெரியாதவர்கள். சித்தத்தை சிவன் பாலில் வைத்தவர்கள் என்பது போல இருப்பவர்களை பற்றி படித்தேன். உண்மையான சித்தர்கள்.

      வண்ணத்துப்பூச்சியின் தவத்தை பார்த்தவுடன் இவை மனதில் வந்து போயின. எனக்கும் வயது ஆகி விட்டது, சும்மா இருக்கும் போது சிந்தனைகள் பல அதுவே இந்த பகிர்வு.
      அந்தக்காலத்தில் வயதானால் கிருஷ்ணா, ராமா என்று இரு, சிவனே என்று இரு என்பார்கள். அப்படி இருக்க தோன்றுகிறது.

      முன் காலத்தில் அரசர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பட்டம் கட்டி விட்டு பொறுப்பு, கடமை முடிந்து விட்டது என்று "வானபிரஸ்தம்" போய் விடுவார்கள். இயற்கையை ரசிக்க என்று நினைத்து கொள்வேன்.
      இங்கு எனக்கு பிள்ளைகள் வீட்டில் பொறுப்புகள், கடமைகள் குறைவு அதனால் இயற்கையை ரசித்து கொண்டு இருக்கிறேன். ஊருக்கு போனால் இருக்கவே இருக்கு .

      //இங்கு கடந்த மூன்று தினங்களாக குடும்பத்துடன் மைசூர் சென்று வந்தோம். அதனால் வலைப்பக்கம் வர இயலவில்லை. திங்கள் இரவுதான் வந்தோம். நேற்று முழுக்க வேலைகளுடன் ஒரே பயண களைப்பாக இருந்தது. இன்று பரவாயில்லை. அதனால்தான் பதிவுகளுக்கு தாமத வருகை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நினைத்தேன். இப்படி தவிர்க்க முடியாத காரணம் இல்லாமல் நீங்கள் வராமல் இருக்க மாட்டீர்கள் என்று.
      குழந்தைகளுடன் மைசூர் சென்று வந்ததை நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பதிவு எழுதி நாள் ஆச்சு!

      உங்கள் அன்பான விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      உடனே பதிவின் ஒரு கருத்துக்கு பதில் கருத்து தரும் தங்கள் பாங்கு எப்போதுமே என் மனதை கவர்ந்த ஒன்று. உங்களைப் போல நானும் இருக்க வேண்டுமென நினைப்பேன். ஆனால் முக்கால்வாசி நேரம் அப்படி உடன் கருத்து தர இயலாமல் போய் விடும். அப்போதெல்லாம் உங்களிடமிருந்து இந்த பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவா நிறைய வந்து போகும்
      அதற்கும் அந்த இறைவனருள் வேண்டுமல்லவா..? அந்த அருளுக்காக காத்திருக்கிறேன்.

      /முன் காலத்தில் அரசர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பட்டம் கட்டி விட்டு பொறுப்பு, கடமை முடிந்து விட்டது என்று "வானபிரஸ்தம்" போய் விடுவார்கள். இயற்கையை ரசிக்க என்று நினைத்து கொள்வேன்./

      உண்மை.. ஆனால், இந்தப்பற்று நம்மை விடமாட்டேன் என்கிறதே..! நாம் இருக்கும் வரை அவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கென உழைத்துக் கொண்டு, அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஒரு பிடிமானத்தை இறைவன் தந்து விட்டானே என நானும் சில சமயம் நினைப்பதுண்டு. நீங்கள் இப்படி இயற்கையை, மற்றும் பல ஜீவன்களை ரசித்து அந்த மகிழ்வை எனக்கும் சேர்த்து பதிவுகள் மூலமாக அளிப்பது என் மனதுக்கும் மகிழ்வாக உள்ளது. உங்கள் பதிவுகளை நான் மிக விரும்பி படித்து விடுவேன்.

      நானும் ஏதாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன். குழந்தைகளுடன் அவர்கள் விருப்பமாக செல்லும் இடங்களில் எழுத வேண்டுமென என் கைப்பேசியிலேயே சில படங்கள் எடுத்து வைத்துக் கொள்வேன். ஏதோ நேரம் அமையாமல் தட்டிப்போகிறது. உங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் என்னை மீண்டும் கண்டிப்பாக எழுத வைத்து விடும். அதற்கும் காத்திருக்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. உங்களைப் போல அன்பான பதிவரை எனக்கு நட்பாக தந்த அந்த இறைவனுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      /உடனேபதிவின் ஒரு கருத்துக்கு பதில் கருத்து தரும் தங்கள் பாங்கு எப்போதுமே என் மனதை கவர்ந்த ஒன்று.//
      இப்போது இங்கு நேரம் காலம் மாறுவதுதால் கொஞ்சம் தாமதமாக கொடுக்கிறேன் சில நேரம்.

      //உங்களைப் போல நானும் இருக்க வேண்டுமென நினைப்பேன். ஆனால் முக்கால்வாசி நேரம் அப்படி உடன் கருத்து தர இயலாமல் போய் விடும். அப்போதெல்லாம் உங்களிடமிருந்து இந்த பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவா நிறைய வந்து போகும்
      அதற்கும் அந்த இறைவனருள் வேண்டுமல்லவா..? அந்த அருளுக்காக காத்திருக்கிறேன்.//

      பொறுப்புகள், கடமைகள் உங்களுக்கு இருக்கும் போது இப்படி வந்து விரிவான பின்னூட்டம் கொடுப்பது நான் கற்றுக் கொள்ள வேண்டியது.

      //உண்மை.. ஆனால், இந்தப்பற்று நம்மை விடமாட்டேன் என்கிறதே..! நாம் இருக்கும் வரை அவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கென உழைத்துக் கொண்டு, அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஒரு பிடிமானத்தை இறைவன் தந்து விட்டானே என நானும் சில சமயம் நினைப்பதுண்டு. குழந்தைகளுக்கு உழைக்கும் போது அலுப்பும், சலிப்பும் ஏற்படாது. மகிழ்ச்சி தான் ஏற்படும். மேலும் சக்தி கிடைக்கிறது. உங்கள் பிடிமானம் அவர்களுக்கு அன்பும் , ஆதரவும் வழங்கும் எப்போதும்.


      நீங்கள் இப்படி இயற்கையை, மற்றும் பல ஜீவன்களை ரசித்து அந்த மகிழ்வை எனக்கும் சேர்த்து பதிவுகள் மூலமாக அளிப்பது என் மனதுக்கும் மகிழ்வாக உள்ளது. உங்கள் பதிவுகளை நான் மிக விரும்பி படித்து விடுவேன்.//
      எப்போதும் இயற்கையை ரசிக்க பிடிக்கும் . இப்போது நேரத்தை போக்க இன்னும் இயற்கை ரசிப்பு உதவியாக இருக்கிறது.

      //ஏதாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன். குழந்தைகளுடன் அவர்கள் விருப்பமாக செல்லும் இடங்களில் எழுத வேண்டுமென என் கைப்பேசியிலேயே சில படங்கள் எடுத்து வைத்துக் கொள்வேன். ஏதோ நேரம் அமையாமல் தட்டிப்போகிறது. உங்கள் ஊக்கம் நிறைந்த வார்த்தைகள் என்னை மீண்டும் கண்டிப்பாக எழுத வைத்து விடும். அதற்கும் காத்திருக்கிறேன். உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. உங்களைப் போல அன்பான பதிவரை எனக்கு நட்பாக தந்த அந்த இறைவனுக்கும் நன்றி.//

      நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து கொள்ளுங்கள்.. படங்களை இணைத்து விடுங்கள் ஒரு நாள். அப்புறம் போஸ்ட் போடுங்கள். நானும் அப்படித்தான் செய்கிறேன்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.








      நீக்கு
  18. வண்ணத்துப்பூச்சியை பொறுமையாகப் படமாக்கியுள்ளீர்கள். படங்களைப் பகிர்ந்த விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //வண்ணத்துப்பூச்சியை பொறுமையாகப் படமாக்கியுள்ளீர்கள். படங்களைப் பகிர்ந்த விதம் சிறப்பு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. உங்களின் புகைப்பட திறமை எப்போதுமே என்னை வியக்க வைக்கும். மோனதவத்தில் இருக்கும் வண்ணத்துப் பூச்சியை மிகத் திறமையாக படம் பிடித்திருகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி.

      நீக்கு