திங்கள், 16 நவம்பர், 2020

மாமாவும் கந்த சஷ்டி விழா நினைவுகளும்





கந்தர் சஷ்டி விழா நேற்று ஆரம்பம். அப்போது தனது தந்தையின் நினைவுகளை என் கணவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.  1951ல்  மாமா அவர்கள் கோவை ஆர்.எஸ்.புரம் அருள்மிகு இரத்தினவிநாயகர் திருக்கோயிலில் கந்தசஷ்டித் திருவிழா சமயம் கந்தபுராணத் தொடர் சொற்பொழிவு செய்து இருக்கிறார்கள். அந்த விழா அழைப்பிதழைக் காட்டினார்கள்.


                                                            முன்பக்கம்

                                                                    பின் பக்கம்


 நேற்று முருகனின் நட்சத்திரம் விசாகத்தில் பிறந்த என் மாமா அவர்களுக்குப் பிறந்த நாள் (111).

அவர்கள் நினைவுகளைப் போற்றும் வகையில் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு தீபாவளிக்கு ஊருக்குப் போகும்போதும் மாமாஅவர்களின்  பிறந்த நாள் விழாவிலும் கலந்து வருவோம். தீபாவளி முடிந்த இரண்டொரு  நாளில் வரும். அதற்கு இருந்து விட்டுத் தான் வருவோம். ஒவ்வொரு வருடப் பிறந்த நாளுக்கும் ஒவ்வொரு கோவிலுக்குப் போவோம். இறைவனைக் கும்பிட்டு மாமா அவர்களின் ஆசியைப் பெற்று வருவோம்.

  


ஊருக்குப் போய் வருகிறோம் என்று விடை பெறும்போது விபூதி பூசி விடுவார்கள்.


என்றும் உங்கள் ஆசிகள் எங்களுடன் இருக்க விரும்புகிறோம்.




என் கணவரும் திருவிடைமருதூர் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் "கந்தவேள் வழிபாட்டு மன்றம்" நடத்தும் 8- ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவில் ஆறாம் நாள்" சேவலும் மயிலும்" என்ற தலைப்பில்  கந்தபுராணம் சொற்பொழிவு செய்தார்கள்.



                   

இன்று சோமவாரம் . ஒவ்வொரு சோமவாரத்திற்கும் மயிலாடுதுறையில்  அருள்மிகு புனுகீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் 1008 சங்காபிஷேகத்திற்கு போய் விடுவோம். அப்போது எடுத்த படங்கள்.


இந்தப் படத்தில் முதல் வலம்புரிச் சங்கு தீர்த்தம் அபிஷேகம் செய்தபின்  தீபாராதனை தெரியும்  கொஞ்சம். அலைபேசியில் தூரத்திலிருந்து எடுத்த படம்.


அருள்மிகு புனுகீஸ்வரர்

                                    
                                                         அருள்மிகு சாந்தநாயகி

இந்தக் கோயிலுக்குத்தான் தினம் போய்க்கொண்டு இருந்தேன். கோயில் அருகில்  ஒரு வீட்டில் குடியிருந்த போது , அப்புறம் பிரதோஷம் , மற்றும் அனைத்து விழாக்களுக்கும்  இந்தக் கோயிலுக்குத்தான் போவோம்..
 
 ஆடி, வெள்ளி தைவெள்ளிக்கு அன்னைக்கு சந்தனக்காப்பு மிக அழகாய் செய்வார் குருக்கள். இன்று அங்கு நடக்கும் முதல் சோமாவார சங்காபிஷேகம்.  அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன்.

பழமுதிர்சோலைக்குப் போன சூரசம்ஹாரத்திற்குப் போனபோது முருகனுக்குப் பால் அபிஷேகக் காட்சி.


இன்று கந்தசஷ்டி இரண்டாவது நாள்.  நான் கந்தபுராணம் படித்து வருகிறேன். அதில் இன்று  வேதியராக வந்த வேதமுதல்வன் தொண்டு கிழவராகப் பார்வதி தேவியுடன் திருவிளையாடல் செய்யும் காட்சி.

வாழ்க வையகம்  ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------------------------


46 கருத்துகள்:

  1. உங்கள் மலரும் நினைவுகள் அருமை.

    ஆசி பெறுவதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளணும் என்று தோன்றியிருக்கிறதே. நானும் முக்கியமான நிகழ்வுகள் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துவிடுவேன் (சொல்லி அல்லது சொல்லாமலேயே). என்னிடம்தான் பழைய நினைவுப் பொக்கிஷங்கள் இருக்கா என்று பலர் கேட்பார்கள்.

    சங்காபிஷேகப் படங்கள் அருமை. முருகன் பாலாபிஷேகம் அழகு. முருகன் திருவுருவம் மிகவும் அழகு

    சார்..எல்லாவற்றையும் (அழைப்பிதழை) பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறாரே.

    உங்கள் மாமாவின் குரலையும் இங்கு பதிவுசெய்திருக்கலாம் (தேவாரம் ஓதுவதை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே... பாடல் கேட்டேன். இவையெல்லாம் நினைவுப் பொக்கிஷங்கள். நிச்சயம் சார் உரைகளையும் இதுபோல எடுத்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மிக்க நன்றி

      நீக்கு
    2. வாங்க நெல்லை , வாழ்க வளமுடன்
      பாடலை கேட்டீர்களா? மகிழ்ச்சி.
      நினைவு பொக்கிஷங்கள்தான்.மாமா இளமையில் பாடிய போது எடுத்துவைத்துக் கொள்ள முடியவில்லை அந்த வருத்தம் உண்டு.

      சார் உரைகளை சில எடுத்து வைத்து இருக்கிறோம்.
      உங்களுக்கும் நன்றி நீங்கள் கேட்டதால் பாடல் இங்கு பகிர்ந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  2. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

    ஆசி பெறுவதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டது மகிழ்ச்சி தரும் விஷயம். புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது என் அப்பா, என் மாமனார் இருவருக்கும் பிடிக்கும்.
    அது எங்களுக்கும் பழக்கம் ஆகி விட்டது. என் மகனும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் படம் எடுத்து வைத்துக் கொள்வான், அவனிடம் எல்லோரும் உங்களிடம் கேட்பது போல் அவனிடம் கேட்பார்கள்.

    சங்காபிஷேகம் படங்களை, பாலாபிஷேக படங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

    //சார்..எல்லாவற்றையும் (அழைப்பிதழை) பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறாரே.//

    ஆமாம், பத்திரமாக வைத்து இருப்பார்கள்.

    //உங்கள் மாமாவின் குரலையும் இங்கு பதிவுசெய்திருக்கலாம் (தேவாரம் ஓதுவதை)//

    இதோ வலை ஏற்றி விடுகிறேன், வந்து கேளுங்கள். இந்த அமாவாசைக்கு சாரின் தம்பி அனுப்பியது.

    உங்கள் கருத்துக்கு நன்றி .


    பதிலளிநீக்கு
  3. மாமாவின் குரலைக் கேட்டேன்.  அவரின் பெருமையை மறுபடி படித்தேன்.  சங்காபிஷேகம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      மாமாவின் பாடலை கேட்டீர்களா மகிழ்ச்சி. நெல்லை கேட்டார்.
      இங்கு மழை விடாது பெய்கிறது. சங்காபிஷேகம் காணொளியில் பார்த்தேன் யூ-டியூப்பில் பார்த்தோம். மாயவரம் கோவில் நினைவுகளை தேடிபார்த்து கொண்டு இருந்தேன். அப்படியே பகிர்வு.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. மாமாவைப்பற்றி இந்த செய்தி புதுசு முன்பு பதியவில்லை ஸ்ரீராம்.

      நீக்கு
    3. முன்பே அவர் பற்றி அறிந்த நினைவு.  அதுதான் சொன்னேன்.

      நீக்கு
    4. முன்பு அவர்கள்ப்பற்றி நிறைய பதிவு போட்டு இருக்கிறேன் அவை எல்லாம் வேறு வேறு செய்திகள்.
      பிறந்தநாள் விழா, நூற்றாண்டு விழா, அவர்கள் மறைந்தபின் அவர்கள் நினைவுகள் என்று பகிர்ந்து இருக்கிறேன்.

      நீக்கு
  4. சிறப்பான தரிசனம்...

    பொக்கிசமாக சேமித்து வைத்துள்ளீர்கள்... அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி தன்பாலன்.

      நீக்கு
  5. அன்பு கோமதிமா,
    பெற்றோரைப் போற்றுவதுதான் மகிமை.
    அதை நீங்களும் சாரும் சிறப்பாகச் செய்கிறீர்கள்.

    இதே ஐப்பசி விசாகம் தான் எங்கள் பெரியவனும்.
    உங்கள் மாமனாரின் ஆசியுடன் அவனும் நீடூழி வாழப் பிரார்த்தனைகள்.

    சங்கடங்கள் தீர்க்கும் கந்த புராணம் நீங்கள் படிப்பது மிக மகிழ்ச்சி.
    வந்திருக்கும் தொல்லை எல்லாம் கந்தன் போக்கிவிடுவான்.

    அத்தனை படங்களும், அழைப்பிதழ்களும் இன்னும்
    ஒரு பொக்கிஷம்.
    என்றும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      பெற்றோர்கள் நம்மை அன்றும், இன்றும், என்றும் காக்கும் தெய்வங்கள். அவர்கள் போற்றப்பட வேண்டிய தெய்வங்கள்.

      உங்கள் மகனுக்கு உங்கள் பதிவில் வாழ்த்து சொன்னேன், இங்கேயும் சொல்லிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.


      நீங்கள் சொன்னது போல் கந்தன் கவலைகளை போக்குவான் கருணை மிகுந்தவன்.

      பொக்கிஷமாகத்தான் சார் வைத்து இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  6. பழமையான விடயங்களை இப்பொழுது யாரும் பாதுகாப்பதில்லை.

    தங்களுக்கு வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      அவர்களுக்கு பிடித்தம் இருந்தால் பாதுகாப்பார்கள் ஜி.

      உங்கக் கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    தீபாவளி சிறப்பாக நடைபெற்றதா? தங்களது மலரும் நினைவுகள் பதிவு சிறப்பாக உள்ளது. எனக்கு இரண்டொரு நாட்களாக வலைத்தளம் வர இயலவில்லை. நேற்று இரவு உங்கள் பதிவைக் கண்டேன். அசதியாக இருந்ததால் உடன் பதிலளிக்க இயலவில்லை. மிகவும் நன்றாக நினைவுகளை பத்திரமாக சேமித்து பாதுகாத்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    தங்கள் மாமனாரிடம் ஆசி வாங்கி அவர் வீபூதி பூசிவிடும் போட்டோக்கள் அழகாக உள்ளது. அவரது பழைய நினைவுகளையும், அவர் அந்த காலத்தில் உபன்யாசத்தில் பங்கு பெற்ற அழைப்பிதழ்களையும் பத்திரமாக பாதுகாத்து வருவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    உங்கள் கணவரின் ஆன்மிக தொண்டுகளும், உங்கள் குடும்பத்தின் இறை பக்தியும் மனதை நிறைவடைய செய்கின்றன. உங்கள் கணவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ஆத்ம பலம், தெய்வ பலம் என்பார்கள். தெய்வபலந்தான் நம் உடலை சோர்வடையாமல், நல்ல எண்ணங்களுடன் வைத்திருக்கும் தன்மை கொண்டது.

    சங்காபிஷேகம் படங்கள், ஈஸ்வரர் அம்பாள் படங்கள் அனைத்துமே அழகாக இருக்கிறது. இறைவனையும், இறைவியையும் தரிசித்துக் கொண்டேன். பழமுதிர்சோலை பால குமரனையும் மனமாற தரிசித்து பிரார்த்தித்துக் கொண்டேன். பதிவு நன்றாக உள்ளது. கந்தன் தீயவற்றை களைந்து அனைத்து வளங்களையும் உலக மக்களுக்கு தரவேண்டுமாய் நானும் உங்களோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      தீபாவளி இறைவன் அருளால் சிறப்பாக கழிந்தது.
      பதிவு போட்டேன் அன்றே . தீபாவளி வாழ்த்து பதிவு நீங்கள் படிக்கவில்லை, வேலை அதிகமாய் இருந்து இருக்கும். வேலைகளை பகிர்ந்து அளியுங்கள் தனியாக செய்யாதீர்கள் . உதவிக்கு யாராவது வேலைக்கு வைத்து இருக்கிறீகளா?

      அசதி என்றால் சிறிது ஓய்வு எடுத்து விட்டு வேலையை தொடருங்கள், உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.


      //கந்தன் தீயவற்றை களைந்து அனைத்து வளங்களையும் உலக மக்களுக்கு தரவேண்டுமாய் நானும் உங்களோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

      பிரார்த்திப்போம் அதுதான் வேண்டும்.

      பதிவில் அனைத்தையும் ரசித்து படித்து விரிவான கருத்து வழங்கியதற்கு நன்றி நன்றி கமலா.

      நீக்கு
  8. கோமதிக்கா உங்கள் மாமாவைப் பற்றிய நினைவுகள் செம! உங்கள் மாமாவின் படம் அதில் ஆதீனம் போல இருக்கிறார்கள். அவர் குரல் என்ன இனிமை. ரொம்ப நன்றாகப் பாடியிருக்கிறார்கள். மிகவும் ரசித்தேன்.

    பொக்கிஷமான சேமிப்புக் கிடங்கு! இவை எல்லாம் தான் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி தரும் அசை போடும் போது.

    அருமை கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      மாமா நாள்தோறும் செய்யும் சிவபூஜை படம்.
      பாட்டை கேட்டது அறிந்து மகிழ்ச்சி.
      வயதானல் இது போல பழையதை நினைத்து அசை போடுவது (மகிழ்வது) வாடிக்கைதானே!
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  9. உங்கள் நினைவுகள் மற்றும் கந்தசஷ்டி விவரணங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது. உங்கள் மாமா ஆன்மீகச் சொற்பொழிவு எல்லாம் ஆற்றியிருப்பது மற்றும் பாடல் பாடியதை பதிந்து வைத்திருப்பது எல்லாமே சிறப்பாக இருக்கிறது. முதல் படத்தில் முருக பக்தர் ஸ்வாமி என்று நினைத்தேன் அப்புறம் அது உங்கள் மாமா என்பதை அறிந்து கொண்டேன். நல்ல விஷயங்கள் அடுத்த தலைமுறை வரை வந்திருப்பது மகிழ்வான விஷயம்.

    நல்ல நினைவுகள். நல்லதே நடக்கட்டும் சகோதரி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      அவர்கள் ஆசிரியர் தொழில் பார்த்துக் கொண்டு , தேவாரம் சொல்லிக் கொடுத்தார்கள். இது போல சொற்பொழிவுகளும் செய்வார்கள்.

      மாமா நாள்தோறும் செய்யும் சிவபூஜை படம். தலையில் உத்திராட்சம் அணிந்து இருக்கிறார்கள்.

      நல்ல விஷயங்களை அவர்கள் சொல்லி தந்தார்கள். அவர்கள் போற்றும் வண்ணம் அவர்கள் நினைவுகள் நம் சேமிப்பில்.

      //நல்லதே நடக்கட்டும் சகோதரி//

      உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ.


      நீக்கு
  10. நன்னாட்களில் பெரியவர்களிடம் ஆசி வாங்குவது மிகவும் முக்கியமாகும். நான் எங்கள் ஆத்தா, தாத்தா தொடங்கி பெரியவர்களிடம் அவ்வாறாக ஆசி பெற்றுள்ளேன். அவர்கள் விபூதி பூசிவிடுவார்கள். இப்போது அதனை எங்கள் இல்லத்தில் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்

      நன்னாட்களில் பெரியவர்களிடம் ஆசி வாங்குவது மிகவும் முக்கியமாகும். //

      காலம் காலமாக நம் குடும்பங்களில் கடை பிடிப்பது தான்.

      நம் வீடுகளில் நல்ல நாள், பரீட்சை நாள் , ஊருக்கு போகும் போது , அப்புறம் யார் வீட்டுக்காவது சென்றால் அவர்கள் நம்மைவிட பெரியவர்கள் என்றால் அவர்களிடம் ஆசி வாங்கி கொள்வது எல்லாம் வழக்கம். பழக்கம் வழக்கமாகி விட்டது.

      தொடர்வது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. தங்கள் மாமாவைப் பற்றிய மலரும் நினைவுகளும், புனுகீஸ்வரர் ஆலயப் படங்களும் பகிர்வும் நன்று. அரசு sir அவர்கள் சொற்பொழிவு ஆற்றும் தகவல் அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      மாமாவைப் பற்றிய மலரும் நினைவுகள் கந்தசஷ்டியை விழாவைப்பற்றியது என்பதாலும் சார், சொற்பொழிவு செய்ததது கந்தசஷ்டி விழா என்பதாலும் இந்த சமயத்தில்(கந்தசஷ்டி விழா சமயம்) பகிர்ந்து கொண்டேன் ராமலக்ஷ்மி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      ஆமாம், நினைவுகள் இனிமைதான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

      நீக்கு
  13. உங்கள் பேரன் அமெரிக்காவில் வசித்த போதும், அழகாக தமிழில் உரையாற்றியதை கேட்ட பொழுது வியப்பாக இருந்தது. அந்த திறமை ஜீனிலேயே இருக்கிறது என்பது பூரிகிறது. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      இந்த வருடம் தமிழ்ச்சங்கம் நடத்தும் தீபாவளி விழாவில் கதை போட்டியில் கலந்து கொண்டு கதை எழுதி இருக்கிறான்.

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  14. நேற்று இந்தப் பதிவின் சுட்டியே கண்களில் படவில்லை. அருமையான பொக்கிஷப் பகிர்வு. உங்கள் மாமா அவர்களின் படங்கள்/அவருடைய சொற்பொழிவு விழா அழைப்பிதழ் அனைத்தும் குடும்ப பொக்கிஷம். உங்கள் கணவரும் சொற்பொழிவு செய்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் மாமாவின் குரலை ஏற்கெனவே பதிவில் போட்டிருப்பதாக நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

      என் கணவர் நிறைய சொற்பொழிவுகள் செய்து இருக்கிறார்கள், இதில் மாமாவும், இவர்களும் கந்த சஷ்டி விழாவில் பங்கு பெற்றதை குறிப்பிட்டு இருக்கிறேன்.
      மாமா அவர்களின் பாடல் முன்பு போட்டது வேறு, இந்த பாடல் வேறு.
      நெல்லை பாடலையும் பதிவு செய்து இருக்கலாம் என்று சொன்னார், அதனால் புது பாடல் பதிவு செய்து இருக்கிறேன்.

      நீக்கு
  15. பாடலைக் கேட்டேன். மிக அருமையாகப் பாடி இருக்கிறார்கள். புனுகீஸ்வரர் கோயில் சங்காபிஷேஹமும் பார்த்தேன். நான் மதுரையில் இருந்தப்போச் சின்ன வயசில் இதெல்லாம் பார்த்தது. பின்னர் நான் இருந்த இடங்களில் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இப்போது போக இயலாது. மனக்கண்ணால் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். நண்பர்கள் யூ ட்யூப் மூலம் அனுப்புகிறார்கள். உறவினர்களோடான வாட்சப் குழுமம் மூலமும் வரும். அவற்றைப் பார்த்து மகிழ்ந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலை கேட்டது மகிழ்ச்சி. புனுகீஸ்வரர் கோயிலில் வார வாரம் நடக்கும். முதலில் 108 சங்கு அப்புறம் அன்பர்கள் எல்லோரும் பணௌதவி செய்து 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம். மதுரையில் அம்மா வீட்டுக்கருகில் உள்ள கோகர்ணஸ்வரர் கோயிலில் பார்த்து இருக்கிறேன். மற்ற கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றூ போவது இல்லை. யூட்யூபில் நேரலையில் நானும் பார்க்கிறேன்.

      நீக்கு
  16. சிறப்பான படங்களுடனும் தகவல்களுடனும் கூடிய பதிவுக்கு நன்றி எல்லாப் படங்களும் சேமிக்கக் கூடிய அளவுக்கு பொக்கிஷம். ஊருக்குக் கிளம்புகையில் விபூதி பூசும் வழக்கம் எங்கள் குடும்பத்திலும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஊருக்குக் கிளம்புகையில் விபூதி பூசும் வழக்கம் எங்கள் குடும்பத்திலும் உண்டு.//

      நம் வழக்கம் தானே!

      நம் நாட்டில், வீடுகளில் எல்லா நாளும் பெரியவர்களை வணங்கும் நாள்தானே!
      மற்ற நாடுகளில்தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தினம் வைத்து இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  17. பெரியோர்களை நினைப்பதே பேறு.. எனும் போது கண்ணாரக் காண்பது பெரும்பேறு..

    நானும் வணங்கிக் கொண்டேன்...

    அந்த முதல் படத்தில் தான் எத்தனை தேஜஸ்!...

    சித்தத்தை சிவன்பால்
    வைத்தார்க்கும் அடியேன்!..

    ஓம் நம சிவாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //பெரியோர்களை நினைப்பதே பேறு.. எனும் போது கண்ணாரக் காண்பது பெரும்பேறு..//

      ஆமாம், உண்மைதான்.

      //நானும் வணங்கிக் கொண்டேன்...//

      நன்றி சகோ

      //அந்த முதல் படத்தில் தான் எத்தனை தேஜஸ்!...

      சித்தத்தை சிவன்பால்
      வைத்தார்க்கும் அடியேன்!..

      ஓம் நம சிவாய..//

      ஓம் நம சிவாய


      நீக்கு
  18. நேற்றே தங்களது பதிவை வாசித்து விட்டேன்..

    உடன் கருத்துரைக்க இயலவில்லை..

    12 மணி நேரம் சமையற் கூடத்தில் இங்கும் அங்குமாக நடப்பதும் சமயத்தில் பண்ட பாத்திரங்களைத் தூக்குவதுமாக கடுமையான வேலை..

    இடுப்பிலும் முழங்காலிலும் வலி...
    மாலை தரித்து விட்டதால் - பொது உணவகத்தில் எதையுமே சாப்பிடுவதில்லை.

    வெறும் ரொட்டியும் கிரீமும் எவ்வளவு நேரத்துக்குத் தாங்கும்!..

    ஐயன் தாங்கிக் கொள்வான்!..
    - என்ற நம்பிக்கையுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைத்தேன் வேலை பளு என்று.
      //12 மணி நேரம் சமையற் கூடத்தில் இங்கும் அங்குமாக நடப்பதும் சமயத்தில் பண்ட பாத்திரங்களைத் தூக்குவதுமாக கடுமையான வேலை..//

      உதவிக்கு யாராவது சேர்த்துக் கொள்ளுங்கள் தனியாக பெரிய பாத்திரங்களை தூக்க முடியாது அல்லாவா?

      உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள், பழங்கள், பால் சாப்பிடுங்கள்.
      மாலை போட்டு இருக்கிறீர்களா? 48 நாட்கள் விரதமா?
      சாஸ்தா பலம் தருவார்.
      சாமியே சரணம் ஐயப்பா!

      நீக்கு
    2. பொதுவாக குறைகளை வெளியில் செல்வதில்லை... என்றாலும் இந்த ஆறுதல் மொழிகளுக்காகத் தான் காத்திருந்தேன்...

      களக்குடி ஐயன்
      கை கொடுப்பான்..
      கலங்காதே மனம்
      வருந்தாதே!..

      நீக்கு
    3. கீழ்நிலைப் பணியாளர் நிறைய பேர் இருந்தபோதும் மேற்பார்வையாளர் என்ற தோரணையில் நின்று கொண்டிருக்க மாட்டேன்...

      உழைத்து வளர்ந்த உடம்பல்லவா!...

      களத்தில் இறங்கி அவர்களுடன் தோளுக்குத் தோள் வேலை செய்வேன்...

      அதை நிர்வாகம் பயன்படுத்திக் கொள்கிறது.. அதுதான் பிரச்னை..
      அதிக ஆட்களைக் கொடுப்பதில்லை..

      தங்கள் அன்புக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. //மேற்பார்வையாளர் என்ற தோரணையில் நின்று கொண்டிருக்க மாட்டேன்...//

      உதவலாம், ஆனால் சக்தி மீறி உதவ உடல் இடம் கொடுக்க வேண்டும் அல்லவா?
      வேலை நன்றாக செய்வார்கள் என்றால் அவர்களை நிறைய வேலை வாங்கி கொள்ளும் நிர்வாகம்.

      //களக்குடி ஐயன்
      கை கொடுப்பான்..
      கலங்காதே மனம்
      வருந்தாதே!..//

      கலங்கி நிற்கும் போதெல்லாம் நாம் மனதில் நினைத்து வணங்கி கொள்ள வேண்டும் இந்த பாடலை பாடி.

      உங்கள் மீள் வருகைக்கு நன்றி.
      வாழ்க வளமுடன்,வாழ்க நலமுடன் ஐயன் அருளால்.


      நீக்கு
  19. பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  20. ஆஹா மாமாவும் பெரியமாமாவும்[அதிரா முறையில சொல்லியிருக்கிறேன்:))][மாமாவின் அப்பாவை].. சொற்பொழிவாளர்களோ அருமை... ஊரில் கேட்ட சொற்பொழிவுக்குப் பின் இப்போ யூ ரியூப்பில்தான் கேட்க முடிகிறது.. எங்கள் அப்பாவும் திருவிழாக் காலத்தில் அவர் வேர்க் பண்ணிய இடத்துக் கோயிலில் அப்பப்ப சொற்பொழிவு நடத்துவார் மேடையில்...

    அனைத்தும் அருமை. சங்காபிசேகம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      மாமாவும், மாமாவின் அப்பாவும் சொற்பொழிவு செய்வார்கள்.
      உங்கள் அப்பாவும் கோயிலில் சொற்பொழிவும் செய்வது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      பழைய பதிவை படித்து கருத்து சொன்னது மிகவும் மகிழ்ச்சி, நன்றி அதிரா.

      நீக்கு