வெள்ளி, 27 மார்ச், 2020

பெயர்க் காரணம்

என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்

பெயர்க் காரணம் சொல்லும் தொடர் பதிவுக்கு (சுயதம்பட்டம்) வல்லி அக்கா அழைத்து இருந்தார்கள். சரி என்று நானும் எழுதி விட்டேன். படியுங்கள் தொடர்ந்து.


இப்போது போல் நட்சத்திரப்படி ,எண் கணிதப்படி எல்லாம் அப்போது பெயர் வைப்பது இல்லை. முன்னோர்கள் பெயர், கடவுள் பெயர், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள்பெயர், என்று அப்போது வைப்பார்கள். இப்போது தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் பெயர், நடிகர், நடிகை பெயர்கள் எல்லாம் வைக்கிறார்கள். தமிழ்ப் பெயர் வேண்டுமா? சமஸ்கிருத பெயர் வேண்டுமா ? எல்லாவற்றிற்கும் இப்போது வசதி உள்ளது. எத்தனை எத்தனை பெயர்கள் அழகான, அறிவு பூர்வமான பெயர்கள் என்று தேடித் தேடி தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள்.

முன்னோர்கள் சிலர் இறைவன் பெயரையே குழந்தைகளுக்கு வைப்பார்கள், எப்போதும் இறைவனை நினைத்துக் கொள்ள. நடராஜன் என்று வைத்து விட்டு ,நட்டு என்றும், கிருஷ்ணசாமி என்று வைத்துவிட்டு, கிட்டு என்றும் பட்டாபிராமனை, பட்டா என்றும், சுப்பிரமணியனை, சுப்பா, சுப்பு என்றும், நாராயணாவை ,நாணா ஜானகியை ஜான் என்றும், பத்மாவை பத்து என்றும், மீனாட்சியை மீனுகுட்டி என்றும் காமாட்சி காமு என்றும் பார்வதி பாரு என்றும் - லட்சுமியை லட்சா என்றும் எதற்கு பேர் வைக்கப்பட்டதோ அந்த நோக்கம் அறியாமல் இப்படிக் கூப்பிடுவதால் பயனில்லாமல் போய் விடுகிறது என்று சொல்பவர்கள் உண்டு. சிலர் பெரியோர்கள் வைத்த பெயரை மாற்றுங்கள் அந்த பெயரினால் கஷ்டபடுகிறீர்கள் என்று பெயர் மாற்றம் செய்து தருகிறேன் அந்தப்புது பெயரை தினம் இத்தனை தடவை எழுதுங்கள் உங்கள் தலைஎழுத்தே மாறிவிடும் என்று சொல்லி பொருள் சம்பாதிக்கிறார்கள். பெயருக்கு அப்படி ஒரு மவுசு.

எங்கள் குடும்பங்களில் முதல் நான்கு குழந்தைகளுக்கு பேர் வைப்பதில் எந்த குழப்பமும் கஷ்டமும் இருக்காது. முதல் குழந்தை ஆணாக இருந்தால்
அப்பாவின் அப்பா பேர். பெண்ணாக இருந்தால் அப்பாவின் அம்மா பேர். இது வழக்கம். பிறகு மூன்றாவது குழந்தை ஆணாய் இருந்தால் அம்மாவின் அப்பா
பேர். பெண்ணாய் இருந்தால் அம்மாவின் அம்மா பேர். இது தான் வழக்கம். பெரும்பாலும் இதைத்தான் எங்கள் பக்கம் கடைப்பிடிப்பார்கள். அதற்கு மேல் பிறந்தால்தான் வேறு பெயர் வைப்பார்கள்.
இந்த பாட்டில் வருவது போல் என்ன பேரு வைக்கலாம் என்று குழம்பவில்லை.

’என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்? சின்ன சின்னக் கண்ணைக் காட்டிச் சிரிக்கும் எங்கள் பாப்பாவிற்கு ’என்று யாரும் குழம்பவில்லை, நான் பிறந்த போது.

நான் திருவனந்தபுரத்தில் என் தாத்தாவின் பெயர் கொண்ட ’மார்த்தாண்டபவனத்தில் ’ பிறந்தேன். தாத்தா தன் 16 வயதில் திருவனந்தபுரம் வந்து நகைக் கடை வைத்து, வீடு வாசல் வாங்கி இருந்தார்கள். ஆரியசாலையும் பழைய சாலையும் இணைக்கும் பெரிய வீட்டில்( ஆரியசாலை முன் பகுதி ; பழையசாலை பின் பகுதி) பின்பகுதியில் 40 தென்னைமரமும், நடுவில் வீடும், முன் பகுதியில் கார் செட்டும், மாட்டு வண்டிக் கொட்டகையும் இருக்கும் அப்போது . இப்போது ஆரிய சாலை முன் பகுதி இல்லை .பழையசாலை சிறிய பகுதி தாத்தா வீடு அழகாய் வேறு அவதாரம் எடுத்து இருக்கு. தென்னை மரங்கள் 40லிருந்து 20 ஆகி இருக்கிறது. சுயதம்பட்டம் அடிக்க வாருங்கள் என்று அழைத்தார்கள் வல்லி அக்கா, அப்புறம் தம்பட்டம் அடிக்க வில்லை என்றால் எப்படி?

இப்போது சின்ன மாமா அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

எனக்கு பெயர் வைக்க எந்த கஷ்டமும் இல்லை. எனக்கு முன் பிறந்த அக்காவிற்கு என் அப்பாவின் அம்மா பேர். அண்ணனுக்கு என் அப்பாவின் அப்பா பேர். அப்புறம் எனக்கு என்ன பேர் வைத்து இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும், முன் பத்தியை படித்தவர்களுக்கு. எனக்கு என் அம்மாவின் அம்மா பேர் - கோமதி - என்று வைக்கப்பட்டது. கோலாகலமாய் .

நல்ல சுருட்டை முடியும், நல்ல கரு வண்டு கண்ணுமாய் செக்க சேவேல் என்று இருந்தேனாம். இது கதைகள் ,சினிமாவிற்கு வசனங்கள் என்று எழுதும் என் சின்னமாமாவின் வருணிப்பு. அவர்களுக்கு தன் அம்மாவின் பெயரை வைத்து இருப்பதால் அலாதி பிரியம் என் மேல். தன் பெண்ணிற்கும் தன் அம்மாவின் பெயரை வைத்து இருக்கிறார்கள் அவள் பெயர் கோமதி பிரபா.

என் அம்மா ,அப்பா, வாய் நிறைய கோமு என்றும், என் ஆச்சி கோமா என்றும், என்றும் அழைப்பார்கள் . உறவினர்களும் கோமு என்று தான் அழைத்தார்கள். பள்ளியில், கல்லூரியில் எல்லாம் கோமதி என்று அழைத்தார்கள்.


திருமணத்திற்கு பின் என் பேர் என் கணவரின் வேலையைக் கருத்திற்கொண்டும் இனிஷியலைக்கருத்திற்கொண்டும் ‘ட்யூட்டர் சார் ஒய்ப்’,’A.T சார் ஒய்ப்’, ’புரபஸர் சார் ஒய்ப்’ என்று பல பேர்களில் அழைப்பார்கள் .

 கணவர் என்னைக் கோமதி, கோமு என்று எல்லாம் அழைக்க மாட்டேன், மதி என்று அழைப்பேன் என்றார்கள். அப்படி அவர்கள் என்னை அழைத்த நேரத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். பேர் சொல்லி அழைத்ததே இல்லை. அது எனக்கு பெரிய குறை தான்.

 ஒரு முறை வளைகாப்புக்கு என்னை ரயிலில் ஊருக்கு அழைத்து போகும் போது இருவருக்கும் ரயிலில் ஒரே பெட்டியில் இடம் கிடைக்கவில்லை. நான் மகளிர் பெட்டியில் இருந்தேன் கோவைக்குப் போக அதில் ஏறி இருந்தோம். ஈரோடு ரயில் நிலையத்தில் என் பெட்டியில் மிகவும் கூட்டம் இருந்ததால் நான் எங்கு இருக்கிறேன் எனத் தெரியாமல் ’ மதி மதி ’என்று இரண்டு முறை’ நீ எங்கு இருக்கிறாய் ’என்று கேட்டார்கள் அவர்கள் மதி என்று கூப்பிட்ட உடன் மகிழ்ச்சியில் தலை கால் தெரியவில்லை.உட்கார இடம் கிடைக்காமல் சூட்கேஸ் மேல் உட்கார்ந்து இருந்த நான் வேகமாய் எழுந்த போது பக்கத்தில் நின்றவர்கள் ,மெள்ள மெள்ள பிள்ளைதாச்சி இப்படியா அவசரமாய் எழுந்து கொள்வது ’என்று கடிந்து கொண்டார்கள். அநத அற்புத தருணத்தை என்னால் மறக்க முடியாது.


பின் என் மகள் பிறந்தபின் என் பெயர் ’கயல் அம்மா’ ஆயிற்று. பிறகு மகன் பிறந்தபின் சிலருக்கு ’காசி அம்மா’ ஆனேன். என் பெண் இருக்கும் ஊருக்கு போனால் என் பேத்தி, பேரன் நண்பர், தோழிகளுக்கு நான், நானிம்மா. மகனது ஊருக்கு போனால் அங்கு இருக்கும் என் பேரனிடம் உன் கிராண்ட்மா வந்து இருக்கிறார்களா என்பார்கள். இப்படிப் பல பல பெயர்கள்.

இது தான் என் பெயர் வரலாறு. எங்கள் அப்பாவிற்கு நெல்லை (பாளையங்கோட்டை) சொந்த ஊர் . எங்கள் பக்கம் கோமதி, கோமதி நாயகம் என்ற பெயர்கள் இருக்கும்.

சங்கரன் கோவில் அம்மன் பேர் கோமதி அம்மன். என் பெயரை வைத்து நிறைய பேர் நீங்கள் நெல்லையா? என்று கேட்ப்பார்கள் உங்களுக்கு அந்த அம்மன் பெயர் வைத்து இருக்கிறார்களா என்று கேட்பார்கள் . நான் எனக்கு என் ஆச்சியின் பெயர் என்று சொல்வேன்.

இப்போது பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல் வலைத் தளத்திற்கு அரசு என்ற பூவை கோமதி என்ற நாரில் கட்டிக் கொண்டேன். கணவர் பெயர் சேர்த்து கோமதிஅரசு என்று வைத்துக் கொண்டேன்.


பின் குறிப்பு :- வல்லி அக்கா தன் பெயர் காரணப் பதிவை மீள் பதிவு செய்தார்கள் அதை படித்தவுடன் நான் அவர்கள் அழைப்பை ஏற்று எழுதிய பதிவை  மீண்டும் போட ஆசை வந்து விட்டது.

                           வாழ்க வையகம் !  வாழ்க வையகம்   !  வாழ்க வளமுடன்.

60 கருத்துகள்:

  1. பேர் வைப்பதில் சண்டை வந்து என் சின்ன பெண்ணின் பெயரை நானும், என் அம்மாவும், அப்பாவும் கூப்பிடுவதே இல்லை. செல்லமா லட்டுமாதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராஜி , வாழ்க வளமுடன்
      உங்களுக்கு எல்லாம் பிடிக்காத பேரா?
      லட்டுமா நன்றாக இருக்கிறது, உங்கள் எல்லோருக்கும் இனிமையை தரட்டும் லட்டுமா.
      வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. பெயர்காரணம் நல்லாத்தான் இருக்கு. நெல்லைல, கோமதிசங்கர் என ஆண்கள் பெயர் வைத்துக்கொள்வார்கள்.

    உங்களுக்கும் திருவனந்தபுரம் கனெக்‌ஷன் இருக்கா?

    'மதி ...மதி' நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு பார்த்த தேவர் மகன் படத்தை நினைவுபடுத்தியது. ஹா ஹா ஹா. அதில் கமல் கூப்பிட்டவுடன் ரேவதி இந்த மாதிரித்தான் விதிர்விதிர்த்துவிடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல் பெண்களுக்கு கோமதி சங்கரி, கோமதி சங்கர் ஆண்களுக்கு வைப்பது உண்டு.

      //உங்களுக்கும் திருவனந்தபுரம் கனெக்‌ஷன் இருக்கா?//

      உண்டு உண்டு , நான் பிறந்த ஊர், என் அம்மா பிறந்த ஊர்.

      //கமல் கூப்பிட்டவுடன் ரேவதி இந்த மாதிரித்தான் விதிர்விதிர்த்துவிடுவார்.//

      ஆமாம், அப்படித்தான் என் மனநிலை இருந்தது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. பெயர்க் காரணம் - பதிவு இனிமை...

    மலரும் நினைவுகளைப் பதிவிடுவதில்
    தங்களுக்கு நிகர் இல்லை...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

    மலரும் நினைவுகளை பதிய வைத்த வல்லி அக்காவிற்கு என் நன்றி.
    2011 ல் மார்சு மாதம் 29 ம் தேதி எழுதிய பதிவு அப்போது அவ்வளவாக படம் போட மாட்டேன், காணொளி பதிய தெரியாது.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோ
    பதிவு வெகு சுவாரஸ்யமாக இருந்தது தங்களது வாழ்வில் நடந்த விடயங்களையே வைத்து பதிவை அழகாக நகர்த்திச் சென்றது அருமை.

    இந்தக் காணொளிப் பாடல் இதுவரை கேட்டதாக நினைவு இல்லை இப்பாடலில் இறுதியாக தேர்வு செய்த தமிழ்ச்செல்வி எங்கள் வீட்டில் இருவர் உண்டு.

    மேலும் தமிழ்வாணன், தமிழ்மாறனும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்
      பெயர்காரணத்தை சொல்லச் சொல்லி அக்கா அழைத்ததால் எனக்கு வாழ்வில் நடந்த விடயங்களை சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. சுவாரஸ்யமாக இருந்தது என்று சொன்னதற்கு நன்றி.

      இது மிகவும் பழைய பாடல் நான் சின்னவளாக இருக்கும் போது வந்து இருக்கும்.
      பாடலில் வரும் பெயர் தமிழ்செல்வி, தமிழ்வாணன், தமிழ்மாறன் எல்லாம் உங்கள் பதிவில் படித்து இருக்கிறேன், உங்கள் குழந்தைகள், உங்கள் சகோதரி மகன் பெயர்கள் இல்லையா?

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  6. சங்கரன் கோயில் கோமதி அம்மனின் பெயரை தங்களுக்கு வைத்திருப்பார்கள் என்று நான் எண்ணிக் கொண்டதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

      //சங்கரன் கோவில் அம்மன் பேர் கோமதி அம்மன். என் பெயரை வைத்து நிறைய பேர் நீங்கள் நெல்லையா என்று கேட்ப்பார்கள் உங்களுக்கு அந்த அம்மன் பெயர் வைத்து இருக்கிறார்களா
      என்று கேட்பார்கள்.//

      உங்கள் பெயர் பார்த்து நானும் அப்படித் தான் நினைத்திருந்தேன்.
      பெற்றோர் சூட்டிய பெயர்கள் எவ்வளவு மாறுதலுக்குள்ளாகிறது என்பதை ரொம்ப அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

      பழைய பதிவில் நீங்கள் சொன்ன கருத்து சார்.

      உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
  7. பெயர்க்காரணம் சுவாரஸ்யம்.  வீட்டின் மூத்தோர் பெயரை மாற்றி மாற்றி வைப்பது நிறைய இடங்களில் நிகழ்வது.  திரிசூலம் படத்தில் வி கே ஆருக்கும் சிவாஜிக்கும் இது சம்பந்தமாய் ஒரு நகைச்சுவை (என்கிற பெயரில்) ஒரு உரையாடல் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      சுவாரஸ்யமாக இருந்ததா? நன்றி.
      திரிசூலம் படம் பார்த்து இருக்கிறேன், ஆனால் நகைச்சுவை நினைவு இல்லை.

      நீக்கு
  8. கணவர் பெயர் சொல்லி அழைப்பதில் உள்ள உற்சாகத்தை எழுதி இருந்தீர்கள்.  ஆச்சர்யமாக இருந்தது.  இப்படி எல்லாம் கூட உணர்வுகள் இருக்குமா என்றும் தோன்றியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மாவை என் அப்பா அன்பாய் லட்சுமி என்று அழைத்து பார்த்தே பழகியவள்
      இவர்கள் என் பெயரை அழைக்காமல் பேசுவது மிகவும் விசித்திரமாய் இருக்கும். அப்புறம் என் மாமனார் மாமியாரை பெயர் சொல்லி அழைப்பது இல்லை என்பதை தெரிந்து கொண்டேன் . அதுதான் இவர்களும் அழைக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன்.

      பெயர் சொல்லாமல் இருந்து விட்டு திடீர் என்று அழைத்தால் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்க முடியாது ஸ்ரீராம்.

      நீக்கு
    2. //இப்படி எல்லாம் கூட உணர்வுகள் இருக்குமா என்றும் தோன்றியது!// - என்ன ஸ்ரீராம் இப்படிச் சொல்லிட்டீங்க? பாரதிமணி ஐயா, அவரது தளத்தில் எழுதியபோது, தன் மாமனார் க.நா.சு அவர்கள், தன்னை வாய் நிறைய 'மாப்பிள்ளை' என்று அழைக்காதது தனக்கு எப்போதும் ஒரு குறையாக இருக்கிறது என்று எழுதியிருந்தாரே.

      நீக்கு
    3. சரியாக சொன்னீர்கள் நெல்லை. என் அப்பா வாய் நிறைய அழைப்பார்கள் என் அம்மாவை பேர் சொல்லி. அதனால் வந்த எதிர்ப்பார்ப்பு.

      நீக்கு
  9. உயர்ந்த மனிதன் படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி சௌகாரை அறைந்து விடுவார்.  நியாயமாக சௌகார் கோபப்பட வேண்டும்.  ஆனால் அவர் மகிழ்ந்து போவார்.  தோழிகளுக்கெல்லாம் தொலைபேசி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்ந்த மனிதன் படத்தில் செளகாருக்கு ஊடலும், கூடலும் வேண்டும் என்று தோழியின் போதனை செய்வார்.
      அதை அனுபவமாய் உணர்ந்த செளகார் பகிர்ந்து கொள்வார் தோழியிடம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. அன்பு கோமதி மா. எனக்குப் பழையது நினைவே இல்லை. இத்தனை விவரம் எழுதி இருக்கிறீர்களே.மிக அற்புதம்.
    நான் உங்களுக்கு நாகர்கோயில் பக்கம் என்றே நினைத்திருந்தேன்.
    அருமை மிக அருமை.
    ரயில் நிலையத்தில் மதி ந்னு அவர் அழைத்தது,அதை நீங்கள்
    விவரிக்கும் அழகு அச்சோ என்றேன்றும் நிலைத்திருக்கும் அன்பு.
    எப்பொழுதும் வளமுடன் இருக்கணும் கோமதி அரசு வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லி அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்
      பழைய பதிவுக்கு நீங்கள் கொடுத்த பின்னூட்டம்.
      படித்து பாருங்கள்.

      நாகர் கோவிலில் இரண்டு ஆண்டு இருந்து இருக்கிறேன் அப்பாவுடன்.

      ஆரம்ப காலத்தில் பதிவுகளுக்கு கருத்து மட்டும் போடுவேன், நானானி தங்கை கோமாவும், நீங்களும் தான் நெல்லைப் பற்றி எழுதுங்கள் பதிவு போடுங்கள் என்று அழைத்து கொண்டே இருப்பீர்கள்.
      அப்படித்தான் நான் வலைஉலகம் வந்தே. வந்தவுடன் நிறைய தொடர் அழைப்புகளை என்னை நம்பி அழைத்தீர்கள் நானும் எழுதினேன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

      அன்பு கோமதி, திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து மாயவரம் வரும் வரைக்கும் நிகழ்ச்சிகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில எழுதிட்டீங்களே.!!

      மதியும் அழகு கோமதியும் அழகுதான்.
      உங்கவீட்டுக்காரர் பேரும் உங்களோட இணைஞ்சிருக்கே.
      அரசு அவர்களின் மனைவி அரசுமதி.
      கோமதி. படு பொருத்தம்.
      ரொம்ப ரொம்ப நன்றிமா. அழகாக் கோர்வையா சுவையாவும் எழுதி இருக்கீங்க. ரசித்து ருசித்தேன்.:0)

      நீக்கு
  11. பள்ளியிலும் தொடர்ந்து கல்லூரியிலும் (கடலூரில்) என்னுடன் படித்த நண்பன்  (தூத்துக்குடியை சார்ந்தவர்) பெயர் கோமதி என்பதாகும். நாங்கள் அவனை பெண் என்று கேலி செய்ய படிப்பு முடித்தவுடன் கெஸட் வழியாக தன பெயரை கோமதி நாயகம் என்று மாற்றிக் கொண்டார். 

     பிறந்தது கடலூர் என்றாலும், நான் கடந்த அரை நூற்றாண்டுகளாக திருவனந்தபுரத்தில் தான் வசிக்கிறேன். தாங்கள் தற்போது எங்கு வசிக்கிறீர்கள்? திருவனந்தபுரத்திலா? 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      உங்கள் நண்பரின் பெயர் கோமதி என்பது போல், பெண்களுக்கு ஆறுமுகம் என்ற பெயர் உண்டு.

      நான் இப்போது மதுரை. நான் பிறந்த ஊர்தான் திருவனந்தபுரம்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. இனிய நினைவுகள். பதிவுலகில் அப்போது இது மாதிரி நிறைய தொடர் பதிவுகள் வந்து கொண்டே இருக்கும். எத்தனை பதிவுகள் இது போல! சில தொடர் பதிவுகள் 100-150 பேருக்கு மேல் எழுதி இருப்போம்! இனிய நாட்கள் அவை. கொஞ்சம் கொஞ்சமாக அவை எல்லாம் மாறிப் போய், பதிவுலகில் இருப்பவர்களே ரொம்பவும் குறைவுதான் இப்போது. கிட்டத்தட்ட 12 தொடர் பதிவுகளை என் பக்கத்தில் எழுதி இருக்கிறேன்.

    அனைவரும் பெயர்க்காரணம் பதிவு எழுதுகையில் நான் எழுதிய பதிவினை இன்றைக்கு மீண்டும் படித்துப் பார்த்தேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது போல் தொடர் பதிவுகள் வந்து கொண்டே இருந்தன.
      இனிய நாட்கள்தான் அவை. நானும் நிறைய தொடர் பதிவு எழுதி இருக்கிறேன்.
      உங்கள் பெயர்காரணம் சுட்டி கொடுத்து இருக்கலாம் மீண்டும் படித்து பார்க்கலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. கொடுக்க நினைத்தேன் - தேட வேண்டும் என்பதால் தரவில்லை. இதோ தேடி விட்டேன். கீழே இரண்டு சுட்டிகள்...

      http://venkatnagaraj.blogspot.com/2011/03/blog-post.html

      http://kovai2delhi.blogspot.com/2011/03/blog-post.html

      நான் எழுதியதும், ஆதி எழுதியதும்...

      நீக்கு
    3. //கருத்திட்டமைக்கு நன்றிம்மா! அது என்ன பாடல்? உங்களுக்கு முழுதும் தெரிந்தால் தெரிவியுங்களேன். நான் கேட்ட/படித்ததில்லை. தெரிந்து கொள்ள ஆசை.//
      அன்று கேட்டதற்கு இன்று கொடுத்து இருக்கிறேன் பாட்டு போலும் வெங்கட்.

      ஆதியோட பதிவையும் என் பின்னூட்டத்தையும் படித்தேன்.
      நன்றி சுட்டி கொடுத்ததற்கு வெங்கட்.

      நீக்கு
  13. தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

    தற்போது, தங்களது பெயர்க் காரணம் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> சொல்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
    உங்கள் தளத்தில் என் பதிவை இணைத்தது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஹை கோமதிக்கா உங்களுக்கும் திருவனந்தபுர வாசனை உண்டா!!!..அதுவும் ஆரிய சாலை...இப்பல்லாம் அதெல்லாம் மாறிவிட்டது கோமதிக்கா. ரொம்பவே மாறியிருக்கிறது. எனக்குப் பழைய திருவனந்தபுரம் நாங்கள் இருந்தப்ப இருந்தது மிகவும் பிடித்திருந்தது. நல்ல நினைவுகள்!! இனிமையான நினைவுகள் இல்லையா...

    ஓ தொடர் பதிவா முகநூலில்?!!!

    ஆமாம் எங்கள் பிறந்தவிட்டிலும் பெயர்கள் அப்பா வழி அம்மா பெண் குழந்தை என்றால் அல்லது ஆண் குழந்தை என்றால் அப்பா வழி தாத்தாவின் பெயர். அல்லது அப்பாவின் தாத்தா பெயர் கூட வைப்பதுண்டு. இப்படிப் பெரியவர்களின் பெயர் அப்புறம் இறைவனின் பெயர் என்று வைப்பது வழக்கம்..

    என் கணவர் வீட்டு சைடில் பெரியவர்கள் பெயரை வைப்பது அவர்கள் இருக்கும் போது வைப்பதில்லை.

    என்னையும் என் மகனின் நண்பர்களின் பெற்றோர் பரத்தம்மா என்று தான் அழைப்பார்கள். நண்பர்கள் அம்மா என்றே அழைப்பார்கள்.

    பாண்டிச்சேரியில் இருந்தப்ப நான் எல்லோருக்கும் மாமி!!!

    என் பிறந்த வீட்டில் என்னைச் செல்லமாக கீதே, கீது கீத்ஸ் என்று கூப்பிடுவார்கள் அப்போதைய விருப்பபடி.

    என் மகனும் சில சமயம் ஹேய் கீதா என்று என்னை கூப்பிட்டதுண்டு. என் மகன் வயதில் இருக்கும் என் தங்கையின் குழந்தைகள் இருவருமே என்னை கீது, கீதுக்குட்டி!!! என்றுதான் அழைப்பார்கள். என்னை பெரியமா என்று அழைத்ததே இல்லை. அத்தனை தோழமை!

    நான் பிறந்த நேரத்தில் என் அப்பா வழி தாத்தா கீதை படித்துக் கொண்டிருந்தாராம் அதனால் என் பெயர் கீதா என்று பெயரிட்டு கூடவே என் அப்பாவழி அம்மாவின் பெயரையும் வைத்தனர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      திருவனந்தபுரம் நான் பிறந்தஊர் என்று பலமுறை பல இடங்களில் சொல்லி இருக்கிறேன் கீதா.

      மூன்று வருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் போய் வந்தேன் மாமாவின் இறப்புக்கு மாறிதான் போய் விட்டது . காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

      இது முகநூல் தொடர் பதிவு இல்லை கீதா . வலைத்தளத்தில் எழுதிய தொடர் பதிவு. யுகாதி அன்று பழைய பதிவை வல்லி அக்கா பகிர்ந்து இருந்தார்கள். அதை படித்தவுடன் நான் எழுதிய பதிவு நினைவுக்கு வந்து மீண்டும் போட்ட மீள் பதிவு.

      உங்கள் பெயர் காரணம் அருமை.

      //என் கணவர் வீட்டு சைடில் பெரியவர்கள் பெயரை வைப்பது அவர்கள் இருக்கும் போது வைப்பதில்லை.//

      நீங்கள் சொல்வது போல் அப்படி சிலர் வீட்டில் வைக்கமாட்டார்கள் பெரியவர்கள் இருக்கும் போது.

      என் அம்மா அக்காவை பட்டபெயர் வைத்துதான் கூப்பிடுவார்கள் அக்காவிற்கு அம்மாவின் மாமியார் பேர் (அப்பாபாட்டி பேர்) என் பேர் அவர்கள் அம்மா பேர் என்பதால் கூப்பிடுவார்கள்.

      உங்களை மாமி என்று கூப்பிடுவது போல் மதுரையில் எல்லோரும் அக்கம் பக்கம் கோவிலில் மாமி என்று என்னை கூப்பிடுகிறார்கள், நான் மாமி இல்லை என்றாலும் அப்படித்தான் கூப்பிடுகிறார்கள்.

      //என் தங்கையின் குழந்தைகள் இருவருமே என்னை கீது, கீதுக்குட்டி!!! என்றுதான் அழைப்பார்கள். என்னை பெரியமா என்று அழைத்ததே இல்லை. அத்தனை தோழமை!//

      தோழமை மகிழ்ச்சியை தருகிறது.

      //என் அப்பா வழி தாத்தா கீதை படித்துக் கொண்டிருந்தாராம் அதனால் என் பெயர் கீதா என்று பெயரிட்டு கூடவே என் அப்பாவழி அம்மாவின் பெயரையும் வைத்தனர்.//

      பெயர் காரணம் அருமை.

      உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.


      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்கள் பெயர் காரண தொடர் பதிவை ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து நன்றாக எழுதியுள்ளீர்கள்.

    நானும் தங்கள் பெயர் கோமதி என்றவுடன் பிறந்த ஊர் நெல்லை என்றுதான் நினைத்தேன். நீங்களும் ஒவ்வொரு நிலையிலும் உங்கள் பெயர் மாறிய விபரங்களை அழகாக சொல்லியுள்ளீர்கள். அந்த காலத்தில் எங்கள் வீட்டிலும் தாத்தா, பாட்டி பெயர்கள்தாம் நீங்கள் கூறிய முறையில் தொடர்ந்து வரும். அவ்விதமே எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா) பெயர் என்னுடையது. தாத்தா பெயர் (அப்பாவின் அப்பா) எங்கள் அண்ணாவுக்கு. எங்கள் பிறந்த வீட்டில் நாங்கள் இருவர்தான். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு அவர்கள் இஸ்டபடியோ, இல்லை, ஜோஸியரிடம் கேட்டோ பெயர் வைக்கிறார்கள்.

    உங்கள் கணவர் உங்கள் பெயரைச் சொல்லி அழைக்கவில்லையே என்ற குறையை அழகாக கூறியிருக்கிறீர்கள். அவர் அப்படி அழைத்தவுடன் அந்த சமயத்தில் உங்களுக்குள் எழுந்த உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி எழுதியுள்ளீர்கள். என் உறவுகள் வீட்டில் என்னையொத்த பெண்களை அவரவர்கள் கணவர்மார்கள் பெயர் சொல்லி அழைக்கும் போது என் மனதிலும் இந்த மாதிரி குறைகள் நிறைய வரும். ஆனால் நாங்கள் இருந்த வீடுகள் அனேகமாக மிகவும் (ஒரு ஹால், ஒரு கிச்சன்) சின்னவைதான். அதில் பெயர் சொல்லி அழைத்துப் பேச வேண்டிய சூழல் இல்லையென நானே சமாதானபடுத்திக் கொள்வேன். ஹா. ஹா.

    இப்போது அனைவரும் சமம் என்ற எண்ணத்தில் கணவரையே "டா" போட்டு நீ, வா, போ, என அழைப்பது நாகரீகமாகப் போய் விட்டது. மாறி வரும் காலங்களை ஒன்றும் சொல்வதற்கில்லை.

    காளொளி பாட்டு கேட்டேன். நன்றாக உள்ளது. ஒரு பாட்டின் முடிவிலேயே நல்ல பெயர் கிடைத்து விட்டது. பதிவு நன்றாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      நாம் சொந்த ஊர் எது என்று கேட்டால் அப்பாவின் ஊரைத்தான் சொல்வோம் அப்படி பார்த்தால் நெல்லைக்காரிதான். அம்மா ஊர் திருவனந்தபுரம்.

      //எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா) பெயர் என்னுடையது. தாத்தா பெயர் (அப்பாவின் அப்பா) எங்கள் அண்ணாவுக்கு//

      என் அக்காவிற்கும் பாட்டி பெயர்( அப்பாவின் அம்மா ) அண்ணாவிற்கும் தாத்தா பெயர்(அப்பாவின் அப்பா) எனக்கு அம்மாவின் அம்மா பெயர் .

      //இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு அவர்கள் இஸ்டபடியோ, இல்லை, ஜோஸியரிடம் கேட்டோ பெயர் வைக்கிறார்கள்.//

      ஆமாம் , அப்படித்தான் வைக்கிறார்கள்.

      //பெயர் சொல்லி அழைத்துப் பேச வேண்டிய சூழல் இல்லையென நானே சமாதானபடுத்திக் கொள்வேன். ஹா. ஹா.//

      சமாதானபடுத்திக் கொள்ள வேண்டியதுதான் வேறு வழி!

      //இப்போது அனைவரும் சமம் என்ற எண்ணத்தில் கணவரையே "டா" போட்டு நீ, வா, போ, என அழைப்பது நாகரீகமாகப் போய் விட்டது. மாறி வரும் காலங்களை ஒன்றும் சொல்வதற்கில்லை.//

      ஆமாம், நீங்கள் சொல்வது போல் தான் இப்போது. காலம் மாறி வருகிறது.

      பாட்டின் முடிவில் வரும் பேர்தான் குழந்தைக்கு.

      உங்கள் அழகான விரிவான கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  17. வழக்கமான உங்கள் நடையிலிருந்து மாறுபட்டு, ஒரு குழந்தையின் குதூகலத்தோடு வெளியாகியிருக்கிறது. சுவாரஸ்யம்! நான் உங்கள் பெயரை வைத்து திருநெல்வேலிக்காரர் என்று யூகித்தேன். அதைப் போல முன்பெல்லாம் பெயரை வைத்தே எந்த ஊர் என்று சொல்லி விட முடியும். இப்போதெல்லாம் என்னென்னவோ பெயர்கள்..  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      நான் தத்தி தவழந்து தளர் நடை போட்டு பதிவுகள் எழுதி கொண்டு இருந்த காலத்தில் எழுதிய பதிவு அது.அது தான் குழந்தையின் குதூகலம் போலும்.
      (2009 ல் எழுத ஆரம்பித்தேன். 2011ல் இந்த பதிவு எழுதினேன்.)

      பெயரை வைத்து, பேசுவதை வைத்து கண்டு பிடித்து விடலாம்தான்.
      இப்போது ஊர் மாறி , பேர் மாறி உரு மாறி போய் விட்டது.
      வாயில் நுழையா பேர் எல்லாம் வந்து விட்டது.

      குழந்தைகளுக்கு இறைவன் பெயரை வைத்து வாய் நிறைய அழைப்பது நல்லது என்பார்கள்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.



      நீக்கு
  18. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அருமை அம்மா...

    தங்களின் குடும்பத்தில் கடைப்பிடிப்பதும் சிறப்பு...

    காணொளி பாடல்... ஆகா...! அருமையான பாடல்... மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      இப்போதும் பெரியவர்கள் பேர் வைக்கிறார்கள் ஆனால் பள்ளிக்கு வேறு பெயர் கொடுக்கிறார்கள், கல்யாண பத்திரிக்கையில் மட்டும் பெரியவர்கள் பேரையும் அவர்கள் வைத்து இருக்கும் பேரையும் சேர்த்து அடிக்கிறார்கள்.
      வரும் காலம் எப்படி இருக்குமோ தெரியாது.

      காணொளி பாடல் ரசித்து கேட்டது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. எங்கள் வீட்டிலும்பெரும்பாலும் பெற்றோரின் பெயர்தான் என் பெயரனுக்கு பெயர் சின்னதாக அழகாகைருக்க வேண்டி என் மனைவி அவனுக்கு விபு என்று பெயர் வைத்தாள் நாராயணீயத்தில்கடவுளை விபுவே என்று அழைப்பதாக்க் காரணம் கூறினாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      உங்கள் வீட்டிலும் பெற்றோர்களின் பெயர்தானா மகிழ்ச்சி.
      உங்கள் மனைவி நாராயணியம் படிப்பவர்கள் அவர்கள் வைத்த பேர் விபு அழகாய் இருக்கிறது.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. பெயர் வைத்ததிலும், அதனை கூப்பிடுவதிலும், அதில் எப்படிக் கூப்பிடுவது என்பதிலும் பல பல பிரச்சனைகள் விருப்பங்கள்.. அழகாக சொல்லிட்டீங்க கோமதி அக்கா, நான் இங்கு வரத்தான் லேட்டாகிவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      பெயர் வைப்பதில் அதை கூப்பிடுவதில் பல பிரச்சனைகள் இருக்கிறது.
      உங்கள் வரவை ஆவலுடன் எதிர்ப்பார்த்தேன், முடிந்த போது படித்து கருத்துக்கள் சொன்னது மகிழ்ச்சி.

      நீக்கு
  22. //எங்கள் குடும்பங்களில் முதல் நான்கு குழந்தைகளுக்கு பேர் வைப்பதில் எந்த குழப்பமும் கஷ்டமும் இருக்காது. முதல் குழந்தை ஆணாக இருந்தால்
    அப்பாவின் அப்பா பேர். பெண்ணாக இருந்தால் அப்பாவின் அம்மா பேர். இது வழக்கம். பிறகு மூன்றாவது குழந்தை ஆணாய் இருந்தால் அம்மாவின் அப்பா
    பேர். பெண்ணாய் இருந்தால் அம்மாவின் அம்மா பேர். இது தான் வழக்கம்.//

    ஆஆஆஆஆஆஆ இப்படியும் ஒன்றிருக்குதோ.. அப்போ நமக்குப் பிடிச்ச பெயரை வைக்க முடியாதோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆஆஆஆஆஆஆ இப்படியும் ஒன்றிருக்குதோ.. அப்போ நமக்குப் பிடிச்ச பெயரை வைக்க முடியாதோ..//

      வைக்கலாம் நமக்கு பிடித்த பேரை, கூப்பிடும் பேராக. இப்போது உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்த பேரை வைக்கிறார்கள்.

      நீக்கு
  23. //சுயதம்பட்டம் அடிக்க வாருங்கள் என்று அழைத்தார்கள் வல்லி அக்கா, அப்புறம் தம்பட்டம் அடிக்க வில்லை என்றால் எப்படி?//

    ஹா ஹா ஹா அதானே:)).. இது எல்லாம் உண்மையோ என, இந்தக் கொரொனா நேரத்தில அதிரா ரிக்கெட் போட்டு வந்து செக் பண்ணவா போகிறா?:))... எனும் தெகிறியம் கோமதி அக்காவுக்கு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹா ஹா ஹா அதானே:)).. இது எல்லாம் உண்மையோ என, இந்தக் கொரொனா நேரத்தில அதிரா ரிக்கெட் போட்டு வந்து செக் பண்ணவா போகிறா?:))... எனும் தெகிறியம் கோமதி அக்காவுக்கு:))//
      கொரானா என்ற கொடிய அரக்கன் வரும் முன் போட்ட பதிவு.நம்ம கீதா இப்போது கூட திருவனந்தபுரம் போய் வந்தார், அவரிடம் என் மாமாவீட்டுக்கு போய் வாருங்கள் என்றால் போய் பார்த்து வந்து விடுவார் அடுத்த முறை ஊருக்கு போகும் போது.

      விரைவில் கொரானா உலகத்தை விட்டு போகட்டும் அப்புறம் நீங்கள் வந்தாலும் அழைத்து போகலாம்.

      நீக்கு
  24. //நல்ல சுருட்டை முடியும், நல்ல கரு வண்டு கண்ணுமாய் செக்க சேவேல் என்று இருந்தேனாம்.//

    ஆவ்வ்வ்வ்வ் உண்மைதான், இப்போதைய படங்களைப் பார்த்தாலே தெரிகிறதே.. ஆனா அதிரா நம்புமளவுக்கு, மாமா நம்புவாரோ என்பதே என் ஜந்தேகம்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆவ்வ்வ்வ்வ் உண்மைதான், இப்போதைய படங்களைப் பார்த்தாலே தெரிகிறதே.. ஆனா அதிரா நம்புமளவுக்கு, மாமா நம்புவாரோ என்பதே என் ஜந்தேகம்:)) ஹா ஹா ஹா..//

      மாமாவிற்கு என்னை என் 13 வயதிலிருந்தே தெரியும் அதிரா. மாமா நம்புவார்கள்.

      நீக்கு
  25. //அவர்களுக்கு தன் அம்மாவின் பெயரை வைத்து இருப்பதால் அலாதி பிரியம் என் மேல். தன் பெண்ணிற்கும் தன் அம்மாவின் பெயரை வைத்து இருக்கிறார்கள் அவள் பெயர் கோமதி பிரபா.//

    இப்படி இருப்பதற்காகவே இந்த முறைகள் முற்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம், எதுக்கும் ஒரு உள் காரணம் இருந்திருக்கும்.. ஒருவேளை பெற்றோர் தவறிட்டால், இவர்கள் குழந்தையை ஆசையாக வளர்ப்பினம் எனும் உள்நோக்கமாக இருந்திருக்குமோ என எண்ணத் தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒருவேளை பெற்றோர் தவறிட்டால், இவர்கள் குழந்தையை ஆசையாக வளர்ப்பினம் எனும் உள்நோக்கமாக இருந்திருக்குமோ என எண்ணத் தோணுது.//

      இருக்கலாம் அதிரா. பெயர் விளங்க வேண்டும் என்ற காரணமாயும் இருக்கும்.

      நீக்கு
  26. //பேர் சொல்லி அழைத்ததே இல்லை. அது எனக்கு பெரிய குறை தான்.//

    இப்போ ஒன்றும் காலம் போய்விடவில்லை, மாமாவை அழைக்கச் சொல்லுங்கோ கோமதி அக்கா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போ ஒன்றும் காலம் போய்விடவில்லை, மாமாவை அழைக்கச் சொல்லுங்கோ கோமதி அக்கா..//

      சொல்லலாம், அதிரா அழைக்கச் சொன்னார் என்று கூட சொல்லாம்.

      நீக்கு
  27. // அநத அற்புத தருணத்தை என்னால் மறக்க முடியாது.//

    ஹா ஹா ஹா வாழ்க்கையில் மறக்க முடியாத தருனங்கள் பல இருக்கும்.. அதில் இது ஒன்று சந்தோச தருணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹா ஹா ஹா வாழ்க்கையில் மறக்க முடியாத தருனங்கள் பல இருக்கும்.. அதில் இது ஒன்று சந்தோச தருணம்..//

      இது மறக்க முடியாத சந்தோஷ தருணம் தான் அதிரா .
      நிறைய இருக்கிறது அற்புத தருணங்கள்.

      நீக்கு
  28. சொல்ல மறந்திட்டேன், வீடியோப் பாடல் இதுவரை கேட்டதில்லை...
    பாட்டு அழகு, குழந்தை இப்பூடி வளர்ந்த பின்புதான் பெயர் வைப்பினம்போலும்.

    இங்கு மகன் பிறந்த உடனேயே பெயர் கேட்டார்கள் சொன்னோம், உடனேயே எழுதியாச்சு அங்கேயே... நாம் ரெடியாக இருந்தமையால்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, எங்கள் வீட்டில் முதன் முதலில் என் அண்ணன் தொலைக்காட்சி வாங்கிய போது இலங்கை தொலைக்காட்சியில்(ரூப வாஹினியில்) இந்த படம் சிங்களத்தில் பார்த்தேன், என் அண்ணனிடம் இதே போல் தமிழ் படம் இருக்கிறது என்று சொன்னேன்.

      எங்கள் குடும்பத்தில் 16ம் நாள் வீடு தொடும் நாள் அன்று பேர் வைப்போம்.

      //இங்கு மகன் பிறந்த உடனேயே பெயர் கேட்டார்கள் சொன்னோம், உடனேயே எழுதியாச்சு அங்கேயே... நாம் ரெடியாக இருந்தமையால்:))//

      இப்போது பிறப்பு சான்றிதழுக்கு மூன்றாம் நாளே பேர் கொடுக்க வேண்டும் அதனால் முன்பே முடிவு செய்து கொடுத்து விடுகிறார்கள்.

      என் காலம் பழைய காலம் அல்லவோ!

      பாடலை ரசித்து, பதிவை ரசித்து படித்து பல பின்னூட்டங்கள் கொடுத்த அதிராவிற்கு நன்றிகள் பல.

      நீக்கு
  29. பதில்கள்
    1. வணக்கம் ஜலீலா, வாழ்க வளமுடன்
      நான் நலம் ஜலீலா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
      உங்கள் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  30. மன்னிக்கவும் அக்கா.
    எங்க அண்ணா,ஒரு அக்காவுக்கு அப்பாவின் அப்பா,அம்மா பெயர்தான் வைத்திருக்கிறார்கள். எனக்கு என் பெயர் என் சித்தப்பா கொழும்பு போய்கொண்டிருக்கும்போது மாகோ எனும் இடத்தில் இந்த பெயரை வைக்கும்படி தந்தி அடித்தார். அப்பெயரே வைத்தாயிற்று. உங்க பெயர் அழகுதானே. சின்ன பெயர். சாரின் மலரும் நினைவுகள் அருமை. அத்தருணம் மிக உணர்வுபூர்வமா இருந்திருக்கும். எங்க ஊரிலே கணவர் மனைவியை அம்மா எனவே கூடுதலாக அழைப்பினம். என் கனவரும் வீட்டில் விருந்தினர் வருகை எனில் அழைப்பார்.மற்றபடி அழைத்தது குறைவுதான். நான் தான் அவர் கண்ணெதிரே நிற்பேனே.ஹா..ஹா..ஹா
    பாடல் நான் கேட்காதது. நன்றாக இருக்கு.
    அருமையான மலரும்நினைவு பதிவு.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
    உங்கள் பெயர் சித்தப்பா தேர்வு செய்து கொடுத்த பேரா? நன்றாக இருக்கிறது.

    மலரும் நினைவுகளை ரசித்தமைக்கு நன்றி அம்மு.
    விருந்தினர் வருகையின் போதும் பக்கத்தில் வந்து செய்திகள் கேட்டு பேசுவார்கள், அழைப்பார்கள். பேரை கூப்பிட மாட்டார்கள்.
    //நான் தான் அவர் கண்ணெதிரே நிற்பேனே.ஹா..ஹா..ஹா//

    நீங்கள் சொல்வது போல் நாம் தான் அவர்கள் கண்ணெதிரே நிற்கிறோம் அப்புறம் எதற்கு பேரை சொல்லி அழைப்பது!
    பாடல்கேட்டு பதிவை படித்து வேலைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி, மகிழ்ச்சி அம்மு.






    பதிலளிநீக்கு