செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

முள்ளங்கித் துவையல்


இன்று காலை தோசைக்கு  முள்ளங்கித்   துவையல்  செய்தேன்.


உங்களுக்கு எல்லாம் இந்த துவையல்  தெரிந்து இருக்கலாம். 



 முள்ளங்கி துவையல்     செய்முறையை இந்த சுட்டியில் போய்ப் பார்க்கலாம்.
"சாவித்திரி சமையல்" என்று   யூ-டியூப்பில்    சமையல் குறிப்பு கொடுத்து இருந்தார்கள்.

தினம் காலை டிபனுக்கு  என்ன சட்னி, துவையல் செய்யலாம் என்று யோசிக்கும் போது  யூ-டியூப் பார்த்து செய்வது   ஒரு மாறுதல்.  அலுப்புத் தட்டும்போது இப்படி ஏதாவது செய்து அலுப்பைப் போக்க  வேண்டும்.

தேவையான பொருட்கள் :-
வெள்ளை முள்ளங்கி (முற்றல் இல்லாமல்- பிஞ்சு முள்ளங்கி)
கடலைப்பருப்பு
வெள்ளை உளுந்து
மிளகாய் வற்றல், சிறிது புளி, உப்பு.
தாளிக்க நல்லெண்ணெய்,  கடுகு, உளுத்தப்பருப்பு, கருவேப்பிலை


ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து வைத்துக் கொள்ளலாம், நான் வெள்ளை முழு உளுந்து  எடுத்துக் கொண்டேன். 5 மிளகாய் வற்றல் நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.  அதனுடன் கடைசியில் உப்பையும் போட்டு வறுத்துக் கொண்டேன்.

 சிறிது  புளி. முள்ளங்கியைத் தோல் சீவிக் கொண்டு சின்னச் சின்னதாக வெட்டிக் கொண்டு   பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும்.   எல்லாப் பொருட்களும்  நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டும். கொஞ்சம் பிறு பிறு என்று அரைக்க வேண்டும்.  கடுகு, உளுந்து  கருவேப்பிலை போட்டுத் தாளித்து க்கொள்ள வேண்டும்.

 பூண்டு ஐந்து பல் போட்டு இருக்கிறது நான் போடவில்லை.  பொருட்களை  தனித் தனியாக வறுத்துக் கொண்டேன்.  சாவித்திரி  ஒன்றன் பின் ஒன்றாகப்  போட்டு   எல்லாம் சேர்த்து வறுத்தார்கள்.


தோசையைத் திருப்பிப் போடாமல் மூடி போட்டு செய்த மெத்தென்ற பஞ்சு போன்ற தோசைக்கு இந்த துவையல் நன்றாக இருந்தது.

சாவித்திரி அவர்கள் தோசை, இட்லி, சப்பாத்திக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்கிறார்கள்.



திருப்பிப் போட்ட ஆவி பறக்கும் தோசையும் இருக்கு .

நம் அதிரா, ஏஞ்சல் எல்லாம்  சமையல் குறிப்பு போட்டவுடன்  எனக்கும் பதிவு போட்டு  நாள் ஆச்சே! பதிவு போடலாம்  என்று ஆசை வந்து விட்டது போட்டு விட்டேன்.

                                                                 வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

52 கருத்துகள்:

  1. எனது மகள் விதவிதமாக சட்னி, துவையல் செய்யும் ஆனால் இப்படி செய்ததில்லை இனியொருமுறை இதை செய்யச் சொல்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்
      இந்தக் கால குழந்தைகள் வித விதமாய் சமையல் செய்து அசத்துவார்கள், கேட்டுப் பாருங்கள் தெரிந்து இருக்கும் உங்கள் மகளுக்கு.

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

      நீக்கு
  2. செய்து பார்த்ததில்லை..முள்ளங்கி என்றாலேகுழம்புக்கு எனப்பழகிப்போச்சு..நிச்சயம் செய்து பார்த்துவிடுவோம்..பகிர்வுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்
      முள்ளங்கி சப்பாத்தி, முள்ளங்கி துவரம்,(பொரியல்) முள்ளங்கி வடை எல்லாம் செய்வேன்.
      துவையல் இப்போதுதான் முதன் முதலில் செய்தேன். நன்றாக இருந்தது.

      உங்கள் வாழ்த்துக்களுக்கும் , கருத்துக்கும் நன்றி சார்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    அருமையான முள்ளங்கி துவையலுடன் தோசையும் அற்புதமாக இருந்தது. இரவு எங்கள் வீட்டில் சாதந்தான். அதனுடன் தொட்டுக்கொள்ள உங்கள் துவையலையும், தோசையையும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். நன்றி.

    எப்போதும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடும் போது நமக்கு இந்த மாதிரி துவையல்கள் ஒரு மாறுதலாக நன்றாக இருக்கும்.

    பூண்டு, வெங்காயம் சேர்க்கும் போது அதன் வாசனைதான் மிகுதியாக முன்னிலை வகுக்கும். சேர்க்கும் காயின் இயல்பான வாசனை அடிபட்டு போகும். பதிவில் படங்கள் செய்முறை விளக்கங்கள் நன்றாக உள்ளது.ஒரு பக்கம் மட்டும் வெந்த தோசை பார்க்கவே அழகாக உள்ளது. ஆவி பறக்கும் தோசை காணோளியும் நன்றாக உள்ளது. தாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த சுட்டிக்கும் சென்று பார்க்கிறேன்.

    நான் அடிக்கடி முள்ளங்கி, பிற காய்கறிகளை வைத்து துவையல் செய்வேன். இன்று மதியம் சாதத்திற்கு நான் புடலங்காய் துவையல் செய்தேன். உடன் தொட்டுக் கொள்ள வெள்ளரி தயிர் பச்சடி. எப்போதும் சாம்பார் ரசம் செய்து போரடிக்கிறது. அதனால் அடிக்கடி இப்படி சில மாற்றங்கள். அனைத்தும் நன்றாக உள்ளது.ரசித்தேன் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

      //எங்கள் வீட்டில் சாதந்தான். அதனுடன் தொட்டுக்கொள்ள உங்கள் துவையலையும், தோசையையும் கொஞ்சம் எடுத்துக் கொண்டேன். நன்றி.//

      நன்றி மகிழ்ச்சி.

      //எப்போதும் தேங்காய் சட்னியுடன் சாப்பிடும் போது நமக்கு இந்த மாதிரி துவையல்கள் ஒரு மாறுதலாக நன்றாக இருக்கும்.//

      நானும் தேங்காய் இல்லை என்று தான் தேங்காய் இல்லா சட்னி அரைக்க யூ-டியூப் பார்த்தேன். அவர்கள் தேங்காய் பூவும் வைக்கலாம் என்று சொன்னார்கள்.

      //பூண்டு, வெங்காயம் சேர்க்கும் போது அதன் வாசனைதான் மிகுதியாக முன்னிலை வகுக்கும். //

      பூண்டு வைத்து ஒரு நாள் அரைக்க வேண்டும்.

      காணொளி பார்த்தது மகிழ்ச்சி.

      புடலைங்காய் உள் பகுதியை துவையலாக அரைத்தீர்களா புடலையை வதக்கி துவையல் அரைத்தீர்களா?

      தினம் தினம் ஏதாவது சமையலில் மாற்றம் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.



      நீக்கு
    2. அட.. கமலா அக்கா புடலங்காய் துவையல் ஆ...

      புதுசா இருக்கே..😊😊

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      புடலங்காய் உள் பகுதி முத்தலில்லாமல் இருந்தால் அதையும், கொஞ்சம் கூடவே புடலையையும் பொடிதாக அரிந்து வேக வைத்து நார்மலாக துவையலுக்கு வறுப்பனவற்றையும், சேர்த்து துவையல் செய்வேன். இது சாதத்துடன் சேர்த்தும், பிற டிபன் வகைக்கும் தொட்டுக் கொள்ளலாம். நன்றி.

      நீக்கு
    4. ஆமாம் சகோதரி அனு. புடலையில் மட்டுமல்ல. கோஸ், காரட், பரங்கி வெண்பூசணி, முதலிய எல்லா காய்களிலும் துவையல் பண்ணலாம். சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். விரும்புகிறவர்கள் அதனுடன் வெங்காயம், பூண்டு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். விபரத்தை கேட்டதற்கு நன்றி சகோதரி.

      நீக்கு
    5. மீண்டும் வந்து நான் கேட்ட கேள்விக்கும், அனுவிற்கும் பதில் சொன்னது அருமை.
      எனக்கும் இந்த துவையல்கள் எல்லாம் பிடிக்கும் குழம்புகளை விட.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    6. நான் சொல்ல நினைத்ததைக் கமலா சொல்லி விட்டார்கள். முள்ளங்கி மட்டுமில்லாமல் முட்டைக்கோஸ், சௌசௌ, புடலை, பறங்கிக்காய் போன்றவற்றிலும் துவையல் செய்வோம். புடலை, பறங்கியின் உள் விழுதை மட்டும் தனியாக எடுத்தும் தேங்காய்த் துருவல் கொஞ்சம் போல் வைத்துத் துவையல் செய்வோம். இதே போல் பீர்க்கங்காய்த் தோலுடனும் தேங்காய்த் துருவல் வைத்துச் செய்யலாம்.

      நீக்கு
    7. நானும் பீர்க்கங்காய்த் தோல் துவையல், செளசெள துவையல், புடலை துவையல் எல்லாம் செய்வேன். கமலாவிடம் புடலையின் உள் பக்கம் மட்டுமா என்று கேட்டேன்.
      அனுவிற்கு புடலை துவையல் புதுசு என்றார்.

      நீக்கு
  4. முள்ளங்கியில் சப்பாத்திக்கான ட்ரை சப்ஜி கூட செய்வதுண்டு - வேர்க்கடலை பொடித்துப் போட்டு செய்தால் நன்றாக இருக்கும்மா... துவையல் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன். சுவையான குறிப்பு தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      வட நாட்டில் முள்ளங்கியில் வித விதமாய் செய்வார்களே!
      நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன்.
      துவையல் செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அடடே...    அதிரா ஏஞ்சல் தந்த இன்ஸ்பிரேஷனில் நீங்களும் பதிவு போட்டு விட்டீர்கள்.  சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      ஆமாம், சமையல் குறிப்பு எழுத அவர்களும் காரணம் தான்.

      நீக்கு
    2. அதுதான் இந்த வாரம் சமையல் வாரம் என அறிவிச்சேன் ஸ்ரீராம்:))

      நீக்கு
    3. இந்த வாரம் சமையல் வாரமாகதான் மலர்ந்து இருக்கு அதிரா.

      நீக்கு
  6. முள்ளங்கித் துவையல் கேள்விப்படாததாய் இருக்கிறது.    நிறையபேர் முள்ளங்கியை விரும்புவதில்லை.   எனக்குப் பிடிக்கும்.  சமயங்களில் உப்பு தொட்டுக்கொண்டு பச்சையாகவே சாப்பிடுவேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முள்ளங்கி வாடையே இல்லை வதக்கியவுடன்.
      குடைமிளகாய் துவையல் போல்தான் இருக்கும்.
      வட நாட்டில் வெள்ளை முள்ளங்கி வெட்டி விற்பார்கள். பச்சையாக மிளகாய்த்தூள், உப்புத்தூள் எல்லாம் போட்டு சாப்பிடுவார்கள்.
      நீங்களும் சாப்பிடுவீர்களா? இளம் பிஞ்சு முள்ளங்கி நன்றாக இருக்கும் சாப்பிட.

      நீக்கு
  7. இது மாதிரி ஒருமுறை செய்து பார்க்கவேண்டும்.  இப்படிச் செய்து பார்க்கவேண்டிய லிஸ்ட் நீளமாய்க்காத்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், செய்து பார்க்க வேண்டும் என்று அந்த நேரம் சொல்வோம். செய்யதான் முடிவது இல்லை. நீங்கள் சொல்வது போல் நிறைய லிஸ்ட் என்னிடமும் இருக்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. ரொம்ப நல்லா இருக்கு மா...
    😋😋😋


    என் சினேகிதி செய்வாங்க...நான் செஞ்சது இல்ல...

    அடுத்த வாரம் செஞ்சு பார்க்கிறேன்... பார்க்க வே அட்டகாசமா இருக்கு.....💪💪


    ..


    ...நம் அதிரா, ஏஞ்சல் எல்லாம் சமையல் குறிப்பு போட்டவுடன் எனக்கும் பதிவு போட்டு நாள் ஆச்சே! பதிவு போடலாம் என்று ஆசை வந்து விட்டது போட்டு விட்டேன்....

    சூப்பர் மா...எனக்கும் சமையல் குறிப்பு போட சொல்லி கை நம நமங்குது...😂😂😂😃💐💐

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் சினேகிதி செய்வார்களா , நீங்கள் செய்து விடுவீர்கள்.
    நீங்கள் தான் அழகாய் சமையல் குறிப்பு பதிவுகள் போடூவீர்களே!

    //சூப்பர் மா...எனக்கும் சமையல் குறிப்பு போட சொல்லி கை நம நமங்குது..//

    போடுங்க ! போடுங்க! படிக்க காத்து இருக்கோம்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அன்பு கோமதி, முள்ளங்கி,
    பார்த்ததும் அம்மா நினைவு.
    அவர்தாம் அழகாகச் சமைப்பார் முள்ளங்கியை.
    நீங்கள் செய்யும் தோசை என்ன மெத் மெத்னு இருக்கு.
    பஞ்சு மாதிரி.
    காணொளியும் அமைப்பா இருந்தது.
    பழைய ரிசியிலிருந்து புது ருசியை நாக்கு
    கேட்கிறது.
    முள்ளங்கித் துகையல் வண்ணமும் அருமை.
    நான் ராத்திரிக்குத் தொட்டுக் கொள்கிறேன்,.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      மாயவரத்தில் இருக்கும் போது பசேல் என இலைகளுடன் முள்ளங்கி புதிதாக கொண்டு வருவார்கள். நன்றாக இருக்கும். அதன் இலையை பொரியல் செய்யலாம்.
      தோசை காணொளி மற்றும் துவையலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

      நீக்கு
  11. ஆஹா சூப்பரா இருக்கு கோமதி அக்கா .எனக்கு அந்த பஞ்சு தோசையும் பிடிச்சிருக்கு .நேத்து உங்க பின்னூட்டத்தில் //நீங்களும் ரெசிப்பி போடுங்கனு //ரிப்லையா கொடுக்க மனசில் நினைச்சேன் அது அப்படியே உங்களுக்கு கேட்டுடுச்சே :)இன்னும் நிறைய பகிருங்கக்கா ஆசையா இருக்கு புது சுவையில் சமைத்து பார்க்க 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      நீங்கள் நினைத்தவுடன் அக்கா போட்டு விட்டேன்.
      தோசை பிடித்து இருக்கா நன்றி.
      முடிந்த் போது பகிர்கிறேன் ஏஞ்சல்.
      உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு நன்றி.


      நீக்கு
  12. ஆஹா கோமதி அக்காவும் சமையல் குறிப்புப் போட்டுவிட்டாஆஆஆஆஆ... நான் அடிக்கடி நினைப்பேன், இந்த திங்கள்கூட நினைச்சேன் ஏன் கோமதி அக்கா மட்டும் சமையல் குறிப்பு போடுவதில்லை என... இப்போ போட்டிட்டீங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      நீங்களும் நினைத்தீர்களா! திங்கள் கிழமை.
      அதுதான் அக்காவை சமையல் குறிப்பு போட வைத்து இருக்கு எண்ணத்திற்கு ஆற்றல் அதிகம் தான்.

      நீக்கு
    2. உண்மை, சத்தியமாக நினைச்சேன்.. அது நடந்துவிட்டது.. பல சமய்ங்களில் இப்படி மனதில் நினைப்பது நடக்கும்போது, கேட்டிருக்குமோ நான் நினைச்சது என நினைப்பேன் ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. நல்ல மனசு நினைப்பது நடக்கும் தான் அதிரா. என் அப்பா அப்படித்தான் "நான் நினைத்தேன் நடந்து விட்டது" என்பார்கள், அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என் அம்மா நல்லதாக நினையுங்களேன் நீங்கள் நினைப்பது நடக்கிறதே! என்பார்கள்.

      நான் நினைத்தை சொல்ல நினைத்து சொல்லவில்லை என்றால் வேறு யாராவது அதை சொல்லி விடுவார்கள். அப்படி ஒரு ராசி எனக்கு

      நீக்கு
  13. முள்லங்கித் துவையல் நன்றாக வந்திருக்குது, நானும் ரெசிப்பி போட்டேன் கோமதி அக்கா... இதில் முக்கியமானது என்னவெனில் முள்ளங்கியை நன்கு, நீண்ட நேரம் வதக்க வேண்டும்...
    என் ரெசிப்பி இங்கிருக்கு... கீழே போடுகிறேன் இது மொபைல் கொமெண்ட் என்பதால் இப்போ போட முடியவில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு தெரிந்த துவையலா மகிழ்ச்சி.
      முள்ளங்கி மிகவும் இளசு , வதக்கியதும் வாசம் போய் விட்டது.

      அப்புறம் முடிந்த போது போடுங்கள்.

      நீக்கு
  14. https://gokisha.blogspot.com/2018/03/radish.html?m=1

    —————
    உங்கள் தோசையும் நல்ல வெள்ளையாக மெத்து மெத்தென வந்திருக்குது... கோமதி அக்காவொன் தோசை வீடியோவும் பார்த்திட்டேன்ன்ன்ன் அடுத்து யூ ரியூப் ஆரம்பிக்க வேண்டியதுதான்.....
    நாங்கள் புளொக்கேர்ஸ் எல்லோரும் சேர்ந்து ஒரு யூ ரியூப் ஷனல் தொடங்கலாம் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, நீங்கள் முள்ளங்கி துவையல் பதிவு 2018ல் போட்டு இருக்கிறீர்கள்.

      நானும் பின்னூட்டம் போட்டு இருக்கிறேன்.


      உங்களுக்கு எல்லாம் இந்த துவையல் தெரிந்து இருக்கலாம். என்று முதலில் போட்டு விட்டேன் பாருங்கள்.
      நீங்கள் தேங்காய் பூ, சின்ன வெங்காயம் எல்லாம் போட்டு முள்ளங்கியை துருவி வதக்கி போட்டு தண்ணீர் விட்டு இருக்கிறீர்கள். நான் தண்ணீர் விடவில்லை.
      அடுத்த முறை உங்கள் துவையல் போல் செய்து பார்க்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  15. இதே போல் செய்து பார்த்து விடுவோம்... நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
    மிகவும் எளிதாக செய்யக் கூடியதுதான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ஓரே சமையல் குறிப்புகளாக இருக்கு என் டைம்லைனில் என்று பார்த்தால் கோமதி அக்காவும் சமையல் போஸ்ட். உட்னே உங்களது முதலா பார்ப்போம் என வந்தேன். அதுவும் நல்லதுதான். மாற்றமாக இருக்கும். உங்க ரகசியங்களையும் (சமையலில்) தெரிஞ்சுக்குவோம் எங்களுக்கு உதவுமே. எங்களுக்கு முள்ளங்கி பிடிக்கும்.சாம்பார்தான் செய்வது. இப்போ இலையில் பொரியல் செய்யும் போது இதிலும் கொஞ்சம் துருவி,பிழிந்து போட்டுவேன். இப்போ உங்க ரெசிப்பியையும் செய்து பார்க்கலாம். முதல் படம் பார்க்க பீர்க்கங்காய் துவையல் மாதிரி இருக்கு.
    ஆ... மெத்தென தோசை. அழகா இருக்கே. இன்று தோசைதான். புதினா,மல்லி சட்னி,பீர்க்கை சட்னி, இட்லிபொடி. வாரம் தோசை இருக்கும். நெக்ஸ்ட் வீக் வாங்கி செய்கிறேன் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு வாழ்க வளமுடன்
      இது சமையல் வாரம் போல !
      ஏல்லோரும் சமைத்து அசத்துகிறார்கள்.
      நீங்கள் போடவில்லையா? பயணக்கட்டுரை தொடரவில்லையே!
      என் ரகசியங்கள் ஒன்றும் இல்லை அம்மு. சாவித்திரியின் ரகசியம் தான் அதில் கொஞ்சம் சொல்லவில்லை. அவர்கள் பூண்டு போடச் சொன்னார்கள் நான் போடவில்லை.
      முள்ளங்கி இல்லையோடு நல்ல பசுமையாக கிடைக்கும் இல்லையா? பொறியல் செய்யும் போது முள்ளங்கியை துருவி போடுவீர்களா? நானும் அப்படி செய்து பார்க்கிறேன்.

      உங்கள் சட்னிகள் இட்லி பொடி தோசை என்று கேட்கும் போதே நன்றாக இருக்கிறது.
      நம்ம அதிராவும் முன்பு செய்து இருக்கிறார்கள்.நானும் முன்பு செய்து இருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு மாதப்பத்திரிக்கையில் வந்ததை பார்த்து மறந்து விட்டேன். அதிராவின் சுட்டிப் பார்த்தபின் அவருக்கு நான் அளித்த பின்னூட்டம் பார்த்த பின் தான் முன்பு செய்தது நினைவுக்கு வந்தது.

      உங்கள் கருத்துக்கு ந்னறி அம்மு.

      நீக்கு
  18. இங்கே கொஞ்ச நாட்களாகத் துவையல்கள் செய்து கொண்டிருக்கேன். பெண்ணுக்குத் துவையல்கள் செய்து வைக்கச் சொன்னாள். தேங்காய், பறங்கிக்காய், கொத்துமல்லி, பீர்க்கங்காய் எனச் செய்து வைத்திருக்கேன். ஃப்ரீஸரில் வைத்துக்கொண்டு தேவையானப்போ எடுத்துச் சூடாக்கிக் கொள்வார்களாம். இங்கே வந்து பார்த்தால் நீங்களும் சமையல் குறிப்புப் போட்டிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      பெண்ணுக்கு எல்லா துவையலும் அரைத்து வைத்து விட்டு வருகிறீர்களா. இப்போது பெண் வீட்டிலா?

      ஆமாம், எல்லோருக்கும் இப்போது சமையல் குறிப்பு போடும் யோகம் வந்து விட்டது.

      துவையல் இருந்தால் போதும் எனக்கு.

      நீக்கு
  19. முள்ளங்கி இலையில் பாசிப்பருப்பு+தேங்காய் சேர்த்து வேக வைத்துக் கறியும் பண்ணலாம். தேங்காய் அரைத்துவிட்டுக் கூட்டும் பண்ணலாம். பருப்புசிலிக்கு அரைத்துக்கொண்டு அதோடு முள்ளங்கி இலையையும் சேர்த்து நறுக்கிப் போட்டுச் சேர்த்துக்கொண்டு ஆவியில் வேக வைத்துப் பருப்பு உசிலி பண்ணலாம். பஜியா எனப்படும் வடநாட்டுத் தூள் பஜ்ஜி போடும்போது முள்ளங்கி இலை, பாலக், வெந்தயக்கீரை,புதினா, கொத்துமல்லி, கருகப்பிலை எல்லாம் சேர்த்துக்கொண்டு போடலாம். இலைகளை நறுக்கிக் கொண்டு பஜ்ஜி மாவு போல் கரைத்த கடலைமாவுக்கலவையில் இலைகளைச் சேர்த்து எண்ணெயில் போட்டு எடுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு தான் நிறைய தெரியுமே! ஏகப்பட்ட சமையல் குறிப்புகள் கிடைத்து இருக்கு.
      எல்லோரும் முள்ளங்கியில் நளபாகம் செய்துவிடுவார்கள்.
      வடநாட்டில் இருந்தவர்கள் அங்கு உள்ள முள்ளங்கி பக்குவம் எல்லாம் தெரியும் தானே!
      நானும் இதில் முள்ளங்கி இலையுடன் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.
      உங்கள் சமையல் குறிப்புகளுக்கு நன்றி.

      நீக்கு
  20. மிக நல்ல குறிப்பு கோமதி அரசு. நானும் இதை யுடியூப் ல் பார்த்திருக்கிறேன். என் மாமியார் வற்றல் மிளகாய் மூன்றை எடுத்து அம்மியில் விழுதாக அரைத்து அத்துடன் 2 முள்ளங்கித்துண்டுகள், உப்பு சேர்த்து நசுக்கி துவையல் செய்வார்கள். என் கணவருக்கும் அவரின் சகோதர்கள் அனைவருக்கும் இன்று வரை மிகவும் பிடித்த துவையல் இது. தோசைக்கு மட்டுமே மிகப்பொருத்தமாக சுவையாக இருக்கும். ஒரு கை முள்ளங்கித்துண்டுகள், ஒரு கை தேங்காய் துருவல், வறுத்த உளுத்தம்பருப்பு 4 மேசைக்கரண்டி, பச்சை மிளகாய், சிறிது புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தாளிதம் பண்ணினால் யாருமே இது முள்ளங்கித்துவையல் என்று கண்டு பிடிக்க முடியாது. அத்தனை சுவையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன்
      நீங்கள் சொன்னது போல் செய்கிறேன் ஒரு நாள். என் கண்வருக்கு மிள்காய் வற்றலை விட பச்சை மிளகாய் துவையல்தான் மிகவும் பிடிக்கும். நேற்று தேங்காய் இல்லை அதனால் அதில் தேங்காய் பூ சேர்க்கவில்லை.

      உங்கள் மாமியார் செய்த மாதிரியும் ஒரு நாள் செய்கிறேன்.
      உங்கள் வரவுக்கும். உங்கள் சமையல் குறிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  21. எளிமையான அருமையான குறிப்பு...

    பிஞ்சு முள்ளங்கியைத் துண்டுகளாக்கி சற்றே அவித்து விட்டு
    இதே முறையில் செய்திருக்கிறேன்...

    சமையலறை கைவிட்டுப் போன பிறகு எதையும் முயற்சிப்பதில்லை..

    பெரும்பாலும் கடைச் சாப்பாடு என்றாகி விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      நீங்களும் செய்து இருக்கிறீர்களா?
      இப்போது சமைக்க முடியவில்லையா/ கடைச் சாப்பாடு நன்றாக இருக்குமா?

      சமையலறை உள்ளது போல் வீடு கிடைக்காதா?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. முள்ளங்கித் துவையல், கடலைப் பருப்பு இல்லாமல் செய்வதுண்டு. அடுத்த முறை சேர்த்துப் பார்க்கிறேன்.

    ஆவி பறக்கும் தோசையின் காணொளி பசியைத் தூண்டுகிறது :). அருமை.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ராமலக்ஷ்க்ஷ்மி, வாழ்க வளமுடன்
    முள்ளங்கித் துவையலை, தோசையை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. அருமை. நான் தேங்காய் சேர்த்து சாதத்துக்கு செய்வேன்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    தேங்காய் சேர்த்தும் செய்யலாம் மாதேவி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு