திங்கள், 6 ஜனவரி, 2020

வைகுண்ட ஏகாதசி


வைகுண்ட ஏகாதசிக்குப் பெருமாள் தரிசனம்.


எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அய்யனார் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடந்தது.
முன் வாசலில் சங்கும் சக்கரமும் மலர்ந்து இருந்தது   போன பதிவில் போட்ட குழந்தைகள் கை வண்ணத்தில்
மேல் திண்ணையில் அழகிய தீபக் கோலம்
இன்று காலையில் பொதிகை தொலைக்காட்சியில்  திருவரங்கம், திருவல்லிக்கேணி, செம்பூர் ஆகிய இடங்களில் சொர்க்கவாசல் திறப்புக் காட்சியை நேரடியாக ஒளிபரப்பியதைக் கண்டு களித்தோம். அப்புறம்   அய்யனார் கோவிலில் 6.30க்கு  சொர்க்கவாசல் திறப்பைக் கண்டோம்.


நின்ற கோலத்தில் உள்ள கருப்பண்ணசாமி திருப்பதி வெங்கடேசப் பெருமாளாய்க் காட்சி கொடுத்தார் இன்று.

அவருக்கு எதிரில் உள்ள  வடக்குப்பார்த்த வாசல்  பரமபத வாசலாக பாவிக்கப்பட்டது. படி மெழுகி பரமபத வாசல் முன் அழகிய கோலம் போடும் பெண்கள்

அரச மரத்திற்கு பக்கத்தில்  ஒரு குழந்தை போட்ட கோலத்திற்கு நானும் அவர்களுடன் வண்ணம் கொடுத்தேன். நீல கலர் கொடுத்தேன். அந்தப் பெண் மற்ற  வண்ணங்களைப் போட்டாள்.

இந்தக் குழந்தைகளால் கோவில் சுற்றுப்புறமும் தூய்மை ஆச்சு.



பரமபத வாசலுக்கு பூஜை செய்யப்பட்டது, அதன் பின் பெருமாளுக்கு பூஜை ஆனது. எல்லோரும் பரமபதவாசல் வழியே சென்று மீண்டும் உள்ளே வந்தோம். எல்லோரும்  நலமாக இருக்க வேண்டிக் கொண்டேன் 


இலையில் கல்கண்டு சாதம், புளியோதரை


திருப்பதியில் தினம் பிரசாதம் மண்பானையில் படைக்கப்படுவது போல் இங்கும் மண்பானையில் தயிர்சாதம் படைக்கப்பட்டது

பிரசாதமாக கல்கண்டு பொங்கல், புளியோதரை  வடை கொடுத்தார்கள்.


அனுமனுக்கு வடை மாலை சாற்றப்பட்டது. கூட்டம் நிறைய இருப்பதால் எல்லோருக்கும்  பேப்பர் தட்டில் புளியோதரை, கல்கண்டு சாதம், தயிர் சாதம் ,  பாதி வடை கொடுத்தார்கள்  .

பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு பெருமாளை மீண்டும் பார்த்து வந்தோம்.பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல அவ்வளவு அழகாய் அலங்காரம் செய்து இருந்தார்கள். 

இன்று எங்கள் வீட்டில் போட்ட  கோலம்

பதிவை இறைவன் அருளால் நினைவுகளில் இருந்து மீட்டு இருக்கிறேன். முன்பு போட்ட பதிவு எப்படியோ டெலிட் ஆகி விட்டது.தேவகோட்டை ஜி    கீதா சாம்பசிவம்,  இருவரும் பின்னூட்டம் கொடுத்து இருந்தார்கள்.

வாழ்க வளமுடன்.

36 கருத்துகள்:

  1. கோலங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது சகோ.

    படங்களும் தெளிவு வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான தரிசனம். எல்லாமே அழகு. கல்கண்டு சாதம் கண்ணையும் மனதையும் கவர்ந்து இழுக்கிறது. புளியோதரை ஸ்ரீராமை நினைவூட்டுகிறது. பார்க்கவும் நன்றாக இருக்கிறது. இங்கே இன்று தான் நாங்க வைகுண்ட ஏகாதசி விரதம் வைத்துக் கொள்கிறோம். கோயில்களுக்கு எல்லாம் நினைச்ச மாதிரி போக முடியாதே! மனசில் நினைச்சுக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்

      //கல்கண்டு சாதம் கண்ணையும் மனதையும் கவர்ந்து இழுக்கிறது. புளியோதரை ஸ்ரீராமை நினைவூட்டுகிறது.//
      நானும் நினைத்துக் கொண்டேன்.

      //கோயில்களுக்கு எல்லாம் நினைச்ச மாதிரி போக முடியாதே! மனசில் நினைச்சுக்க வேண்டியது தான்//
      ஆமாம் , அங்கு நாம் நினைப்பது போல் கோவில் போக முடியாது தான்.
      மனதால் வணங்குவது மிகவும் சிறப்பு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. அழகான கோலங்கள் மா...

    வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் உங்கள் மூலமாக எங்களுக்கும். நன்றிம்மா...

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      கோலங்கள் அழகு கோவில் முழுவதும் போட்டு இருந்தார்கள்.
      ஆதி ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்துவிட்டு எங்களையும் தரிசனம் செய்ய வைத்து விட்டார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  5. அழகான கோலங்கள் அக்கா. கோவிலின் தூய்மை மனதை கவர்கிறது. கடந்த வருடம் இலங்கைஇல் சொர்க்கவாசல் தரிசனம் செய்தேன். இன்று அதை நினைத்துக்கொண்டேன். நன்றி அக்கா பகிர்விற்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
      கோவில் எப்போதும் தூய்மையாக இருக்கும். இந்த குழந்தைகள் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து இருக்கிறார்கள்.
      உங்கள் ஊர் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

      நீக்கு
  6. வைகுண்ட ஏகாதசி சிறப்புப் படங்களை ரசித்தேன்.  உங்கள் கைவண்ணமும் இன்று கலந்தது போல...   அவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் உங்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      ஆமாம், என் கைவண்ணமும். அம்மா, அக்கா என்று அழைத்து அழகாய் கலர் போடுகிறீகள் என்ற பாராட்டுக்கள் மனதுக்கு மகிழ்ச்சி கொடுத்தது உண்மை.
      உங்கள் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  7. கல்கண்டு சாதமும், புளியோதரையும் கவர்ந்திழுக்கிறது!  உங்கள் வீட்டுக்கோலம் எளிமை, இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கண்டு சாதமும், புளியோதரையும் கவர்ந்திழுக்கிறதா? கீதா உங்களை நினைத்து கொண்டது போல நானும் நினைத்துக் கொண்டேன். சாருக்கும் புளியோதரை பிடிக்கும்.
      எங்கள் வீட்டு கோலத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  8. இந்த மார்கழியில் உங்களுக்கு நிறைய தோழிகள் கிடைத்திருப்பார்கள்.  உங்கள் அன்பால் அவர்களைக் கவர்ந்திருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மார்கழியில் நிறைய நட்புகள் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம் தான்.
      கோவில் இருக்கும் இடம் கிராமம் போல் இருக்கும். கிராமத்து மக்கள் எப்படி அன்புடன் எல்லோரிடமும் அன்புடன் பழகுவார்களோ அப்படியே பழகி அன்பு செலுத்துகிறார்கள்.

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. நின்ற கோலத்தில் உள்ள கருப்பண்ணசாமி திருப்பதி வெங்கடேசப் பெருமாளாய்க் காட்சி கொடுத்தார் ...

    அருமையான அலங்காரம் மனதை கவர்ந்துவிட்டது அம்மா ..


    கோலங்கள் எல்லாம் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      அலங்காரத்தை மிக சிரத்தையுடன் செய்கிறார்கள்.
      எல்லோர் மனதையும் கவர்ந்து விட்டார் பெருமாள்.
      கோலங்களையும், பதிவையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி பிரேம்.

      நீக்கு
  10. மிகவும் வருந்திக் கிடந்த மனது தங்களது பதிவு கண்டு நெகிழ்ந்தது...

    பாரம்பர்ய நிகழ்வுகள் தொடர்வதில் மகிழ்ச்சி....

    பெருமாள் அனைவருக்கும் நல்லருள் புரிவாராக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      வருந்திய நெஞ்சத்திற்கு பெருமாள் ஆறுதல் அளிப்பார்.
      உங்கள் சகோதரி வாழ்க்கைதுணையை இழந்து தவிப்பது அறிந்தேன்.அவருக்கும் அவர்கள் குடும்பத்திர்களுக்கும் இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தர பிரார்த்திக்கிறேன்.

      பெருமாள் அனைவருக்கும் நல்லருள் புரிவார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. அன்பு கோமதி, அற்புதமான அலங்காரம். செய்பவர்களின் பக்தி சிரத்தையைக் காண்பிக்கிறது.
    குழந்தைகளின் கோலங்கள் சூழ்னிலையை மேம்படுத்துகிறது.

    இந்த இடமே புண்ணிய பூமியாகிறது.
    அதன் அருகில் வீடு இருப்பதும் கொடுப்பினைதான். மதுரையின்
    தெய்வ நம்பிக்கை மிளிருகிறது.
    நேற்றே பார்க்க நினைத்தால் வலைத்தளம் திறக்கவில்லை மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      நேற்று என் பதிவு காணாமல் போய் விட்டது மீட்க முடியவில்லை.
      வேறு எழுதினேன். அதுதான் நீங்கள் போட்ட போது வரவில்லை.
      குழந்தைகள் போடும் கோலங்கள் அந்த இடத்தை அழகு படுத்துகிறது.
      மாயவரத்தை விட்டு வந்த போது கவலை பட்டது மனது. இந்த கோவில் தான் எனக்கு நிம்மதியும், மனநிறைவும் கிடைத்தது.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  12. படங்கள் அருமை.

    எளிய குழந்தைகளின் பக்தி மனதை நெகிழ வைக்கிறது.

    சர்க்கரைப் பொங்கலை கல்கண்டு பொங்கல்னு சொல்றீங்களே... அது வெள்ளை நிறத்தில்னா இருக்கும்?

    ஐயனார் கோவிலின் வைகுண்ட ஏகாதசி அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      இந்த குழந்தைகளின் பக்தி , நம்பிக்கை அளவிடமுடியாது.
      போன பதிவு படிக்கவில்லையே ! நீங்கள் அவர்கள் செய்யும் தொண்டைப்பற்றி எழுதி இருந்தேன்.

      சர்க்கரை பொங்கல் இல்லை தமிழன் வெள்ளை கலர் தான் புளியோதரை பக்கம் இருப்பதால் உங்களுக்கு மஞ்சளாக தெரிகிறதோ!
      வேறு ஏதாவது கோவிலுக்கு போகலாம் என்று நினைத்தார்கள் அப்புறம் இந்த கோவிலில் பெருமாள் தரிசனம், சொர்க்கவாசல் திறப்பு பார்த்தவுடன் மனம் நிறைந்து விட்டது எங்கும் போக எண்ணம் இல்லை.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      உங்களின் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. நான் பார்த்தது தவறு. இடது பக்கம் தயிர் சாதம் வலது பக்கம் சர்க்கரைப் பொங்கல்னு புரிந்துகொண்டேன்

      நீக்கு
    3. இது என்ன? ஏன் இந்த பதில்?
      புரியவில்லையே!

      இடது பக்கம் கல்கண்டு சாதம், வலது பக்கம் புளியோதரை. குழைவாய் இருக்கிறது புளியோதரை.

      நீக்கு
  13. குறை நினைக்காதீங்கோ கோமதி அக்கா.. வருவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா வாழ்க வளமுடன்
      அதெல்லாம் நினைக்கவில்லை அதிரா. வாங்க நேரம் கிடைக்கும் போது.
      அதிரா ஊருக்கு போய் இருப்பார் போல! அது தான் காணவில்லை என்று நினைத்தேன்.

      நீக்கு
  14. வைகுண்ட ஏகாதசிக்கு, ஐயனார் கோயில் மிக அழகு. உங்கள் வீட்டுக்கு அருகிலோ ஐயனார் இருக்கிறார் கோமதி அக்கா, படங்களில் ஊர்களை விட்டு வெளியே ஊர் எல்லையில்தானே காவலுக்கு இருப்பதைப்போலக் காட்டுவார்கள் ஐயனாரை.

    அந்தக் கருப்பசாமி... தங்கமாக மின்னுகிறாரே.. இவருக்கு எப்படிக் கருப்புசாமி எனப் பெயர் வச்சார்கள் ஹா ஹா ஹா.. கடவுளே கறுப்பசாமி என்னைக் காப்பாத்துங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் இருப்பது ஊருக்கு வெளியேதான். அந்தக்காலம் கோவில் மட்டும் தான் இருந்து இருக்கும். இப்போதுதான் கிடைக்கும் இடத்தில் எல்லாம் அடுக்குமாடி வீடுகள் கட்டி விடுகிறார்களே! கோவிலும் கொஞ்சம் கொஞ்சமாய் பழமை மாறி வருகிறது.
      கருப்பசாமி காவல் தெய்வம். ஊர்மக்களை காப்பவர்.

      கருப்பசாமி, குதிரையில் வருவது போல் அலங்காரம் செய்வார்கள் சில நாள்.
      கையில் அரிவாளுடன் உருட்டும் கண்களுடன், கையில் வாள் ஏந்தி துஷ்டர்களை அடுக்க வந்தவராக அலங்காரம் செய்வார்கள்.
      உங்களை மட்டும் அல்ல வனைவரையும் காப்பாத்துவார் கருப்பசாமி.

      நீக்கு
  15. பல எலி சேர்ந்தால் புத்தெடுக்காது எனும் பழமொழி பொய்த்து விட்டதே இங்கு:).. பல பெண்கள் சேர்ந்து போட்ட கோலம் மிக அழகாக இருக்கு..

    ஆஆஆ நீல வண்ணம் கோமதி அக்காவின் கை வண்ணமோ.. அழகு.. மரங்களையும் மண்ணையும் பார்க்க ஆசையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பழமொழி கேட்டதே இல்லை. கோலம் ஒரு பெண் போட்டாள் கலர் எல்லோரும் போட்டார்கள். மார்கழி முழுவதும் எல்லோரும் எல்லா சன்னதியிலும் மகிழ்ச்சியாக கோலம் போடுகிறார்கள்.
      என் கை வண்ணத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      அரசமரத்தை காலையில் சுற்றி வருகிறார்கள்.

      நீக்கு
  16. அது கற்கண்டுப் புக்கையும் புளியோதரையுமோ.. பார்க்க அதுவும் சக்கரைப்புக்கைபோல தளதளவென இருக்குது.

    அனுமரின் மாலையில் இருந்த வடையோ அது, அதனாலதான் பிச்சுத் தந்தார்களோ வட்டமாக இல்லாமல்.

    ஊர்க்கோயிலும் படங்களும் பார்க்க மனதுக்கு இதமாக இருக்குது. நீங்கள் போட்ட குட்டிக் கோலமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளியோதரை உதிரி உதிரியாக செய்ய மாட்டார்கள் இந்த கோவிலில் கொஞ்சம் குழைவாய் தான் இருக்கும். ருசி நன்றாக இருக்கும்.
      அனுமனுக்கு மாலையாக இருந்த வடை தான். கட்டளைக்கு பணம் கொடுத்தவர்களுக்கு முழு வடையாக கிடைக்கும் . கூட்டம் குறைவாக இருந்தால் முழுதாக எல்லோருக்கும் கொடுப்பார்கள். கூட்டம் அதிகம் என்றதால் பாதி பாதியாக கொடுத்தார்கள்.
      அனுமன் ஜெயந்தி அன்று நிறைய வடை மாலை. அனுமன் ஜெயந்திக்கு பண்ம கொடுத்ததால் நிறைய வடை கொடுத்தார்கள். கோவிலுக்கு வந்த அனைவருக்கும் முழுவடை கொடுத்தார்கள். பிரசாதம் கோவிலுக்கு வந்தவர் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் அல்லவா?

      இந்த கோவிலில் நடக்கும் விழாக்களை நிறைய பதிவு போட்டு இருக்கிறேன்.
      நான் 'சின்னச் சின்ன கோலங்கள்' என்ற பதிவு போட்டு இருக்கிறேன்.
      'அய்யன் கோவில் வாசலிலே' என்று குழந்தைகள் போட்ட கோலம் போட்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்த்து படித்து கருத்து சொல்லுங்கள்.

      நீக்கு
    2. சின்னச் சின்ன கோலம் பார்த்து விட்டீர்கள். அய்யன் கோவில் வாசலிலே ! மட்டும் தான் பார்க்க வேண்டும் அதிரா.

      நீக்கு
  17. எனக்கொரு டவுட் கோமதி அக்கா, எங்கட அம்மம்மாவும் வைகுண்ட ஏகாதசி எனச் சொல்லி உணவில்லாமல் விரதமிருந்து அடுத்தநாள்தான் சமைச்சுச் சாப்பிடுவா, ஆனா அம்மா பிடிப்பதில்லை, அதனால நாங்களும் பழகவில்லை.

    பொதுவாக வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருந்தால், வைகுண்டம்[சொர்க்கம்] போகலாம் என்கிறார்கள்.. அதுதான் இவ்விரதத்தின் பலனோ? அல்லது வேறு ஏதும் காரணம் இருக்கோ.. நான் கொஞ்சம் வித்தியாசமாகவே எப்பவும் சிந்திப்பேன், கண்ணை மூடியபின் நமக்கு என்ன தெரியப்போகிறது என நினைச்சே இபடியானவற்றை நம்புவதில்லை நான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் அம்மா மட்டும் விரதம் இருப்பார்கள் எங்களுக்கு பலகார விரதம்.
      வித விதமாய் மூன்று வேளையும் அடை, சேவை இனிப்பு சேவை, புளிகாய்ச்சல் போட சேவை என்று செய்து தருவார்கள். சாதம் சாப்பிட வேண்டாம். அதுவே பெரிய் மகிழ்ச்சியாக இருக்கும் சிறு வயதில். கண் விழித்து விளையாட அனுமதி உண்டு.
      தாயகட்டம், பல்லாங்குழி, டிரேட், சீட்டு கட்டு எல்லாம் விளையாடுவோம். இடை இடையே கோவிந்தா, கோபாலா, என்று அம்மா சொல்ல சொல்லுவதை சொல்வோம்.

      இறைவனை நாள் முழுவதும் நினைத்துக் கொண்டு இருந்தால் நல்ல கதி கிடைக்கும் என்பதுதான் உண்மை. விரதம் இருப்பதால் மன உறுதி, எது என்றாலும் இறைவன் பார்த்துக் கொள்வான் நம்மை என்ற நம்பிக்கையும் தான் நன்மைகள்.


      ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானித்து, பக்தி செலுத்துவதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம் எனப்படும் .
      விரதம்!

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு