வியாழன், 16 பிப்ரவரி, 2017

தவிப்பு!

காலை தினம் பறவைகளுக்கு தண்ணீரும், உணவும் வைப்பது வழக்கம். மாயவரத்தில் மொட்டை மாடி மதில் சுவற்றில் வைப்பேன். இங்கு மதுரையில்  கீழே மதில் சுவற்றின் மேல் வைப்பேன். அது என்னைவிட  உயரம் என்பதால் எட்டி வைக்கும் போது சில நேரம் தண்ணீர் என் மேல் கொட்டி விடும், உணவு என் மேல் பாதியும்,   மதில் மேல் கொஞ்சமும் கொட்டி  விடும். அதனால் அந்த உணவு, தண்ணீர் வைக்கும் வேலையை  என் கணவரிடம் கொடுத்து விட்டேன்.

இன்று அவர்கள் வெளியில் போய் இருந்தால் நான் வைக்கப் போனேன்,   பெரிய பிளாஸ்டிக் குவளையில் உணவு எடுத்துப் போனேன்.   வைக்கும் போது உணவு, வழக்கம் போல் கொஞ்சம் என் மேலும் கொஞ்சம் மதில் மேலும் விழுந்தது, அதுமட்டும் இல்லாமல் குவளை, மதிலைத் தாண்டி அந்தப் பக்கம் விழுந்து விட்டது. ( நான் எடுத்து போனால் தட்டில் தான் எடுத்து போவேன் , கணவரிடம்  பிளாஸ்டிக் குவளையில்  கொடுத்து விடுவேன்)

அங்கு இருந்த  குடியிருப்பை பார்த்துக் கொள்பவரிடம் பறவைக்கு வைக்கும் தொட்டியில் தண்ணீர் வைத்து விடுங்கள் என்று  சொன்னேன், அவர் உதவி செய்தார், முதலிலேயே அவரிடம் உதவி கேட்டு இருந்தால் உண்வையும் அவரே  வைத்து இருப்பார்.  என் கவனக் குறைவால் பறவைகள், அணில் பட்ட தவிப்பை   ஜன்னல் வழியாகப் பார்த்து மிகவும்  வேதனையாகப் போய் விட்டது.

நடைபாதை உணவை எடுக்கலாமா? வேண்டாமா என்று பறவைகள் மதில் மேலிருந்து எட்டி எட்டி பார்த்தது வேதனை அளித்தது.


தண்ணீரில் ஒருகாலும், கீழ் இருக்கும் உணவை சாப்பிட வெளியே ஒருகாலும் வைத்து ஆயத்தமாகிறது.

எட்டிப்பார்த்து கொண்டு  இருக்கிறது புறா


கீழே வந்து   பயந்து பயந்து உணவைச் சாப்பிட ஆரம்பித்து  விட்டது
 
சுவற்றில் ஒட்டி இருக்கும் பருக்கைகளை  இரண்டு அணில்கள் ஒன்றை ஒன்றை விரட்டி விட்டுச் சாப்பிட்டது.


அணில் மதில் சுவற்றில் ஒட்டி இருந்ததை  கீழே குனிந்து சாப்பிட்ட காட்சி பார்க்கவே மனது கஷ்டப்பட்டது.



அண்டங் காக்கை ஒன்று  மதில் தாண்டி புற்களுக்கு இடையே விழுந்த சோற்றுப் பருக்கைகளை வாயில் அடக்கிக் கொண்டு தன் குஞ்சுகளுக்கு கொடுக்கப் போனது .


காலை நேரம் மட்டும் தான் பறவைகள் உணவு எடுக்க வரும். (காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பதும் அவற்றுக்கும் தெரியும் போல! )
காலையில் குஞ்சுகளுக்குக் கொடுக்கவும் எடுத்துப் போகும்.  வெயில் வந்து விட்டால் மரங்களில் தஞ்சம் அடைந்துவிடும்.

விரத நாட்களில் , விசேச நாட்களில்   அதுக்குத் தெரியும்   அதற்குப் பிடித்த உணவுகள் வைப்பார்கள் , வருந்தி அழைப்பார்கள்   அதனால் வந்துவிடும்.

அணில் காலை முதல்  அது தூங்க போகும் வரை உணவைக் கொறித்துக் கொண்டே இருக்கும்.
கீழே சிதறிய உணவை  உண்ட பின் தண்ணீர் அருந்திச் செல்லும் மைனா.

வெயில் காலம் வருகிறது. பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர் வையுங்கள் என்று பத்திரிக்கைகளிலும் , சமூக வலைத்தளங்களிலும் பகிர ஆரம்பித்து விட்டார்கள்.



அடுப்பில் வைத்த பாலை மறந்து ஜன்னல் வழியாகப் பறவைகளைக் கவனித்ததால், பால் பொங்கி  அடுப்பில் வந்து மணம் மூக்கை தொட்டவுடன்
போய் அடுப்பை அணைத்தேன்.

கீழே இறைந்து கிடக்கும் உணவைச் சேகரித்து வைக்கலாம் என்றால்  கீழே உள்ள மண் ஒட்டி இருக்குமே என்று வைக்கவில்லை.

பறவைகள் மண்  ஒட்டினாலும் உதறி உதறி சாப்பிடுகிறது. காக்கா தண்ணீரில் கழுவி சாப்பிடும் மண் ஒட்டி இருந்தால் .

இன்றைய காலைப் பொழுது தவிப்பும்  வருத்தமுமாய்ப் போச்சு.

                                                வாழ்க வளமுடன்.
                                                        -----------------




27 கருத்துகள்:

  1. தங்களின் இந்தத் தவிப்பினை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

    இருப்பினும் சில பிராணிகளுக்கும், பறவைகளுக்கும், தினமும் கொஞ்சம் உணவும், குடிக்க நீரும் வைத்துக்கொண்டிருக்கும் தங்களின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்கு உரியது. அதுபோலவே தினமும் தொடர்ந்து செய்து வாருங்கள். மிகவும் புண்ணியம் உண்டு.

    ஒரு யானைக்குக் கவளம் கவளமாகக் கொடுக்கப்படும் சாதத்தில் கீழே உதிர்ந்து விழுவது மட்டுமே ஆயிரம் எறும்புகள் உயிர்வாழப் போதும் எனச் சொல்லுவார்கள்.

    தாங்கள் இங்கு காட்டியுள்ள படங்கள் எல்லாமே அழகாக உள்ளன. பாராட்டுகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    உங்களின் பாராட்டுக்கு நன்றி சார். இந்த பழக்கம் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்தது. தினம் காகத்திற்கு உணவு வைக்காமல் சாப்பிட மாட்டார்கள்.

    திருகழுகுன்றத்தில் மதியம் இரண்டு கழுகுகள் வந்து உணவு உண்ண வரும், ஒரே நேரத்தில் அந்த கோவிலில் உணவு வைக்கப்படும்.

    அம்மா சொல்வார்கள் ஒரே நேரத்தில் உணவு வைக்க வேண்டும். காலை பறவைகள் குஞ்சுகளுக்கு உணவு தேடிவரும் அப்போதும் , மதியம் 12 மணிக்கும் தவறாமல் வைப்பார்கள் 12 மணிக்கு ஏன் என்றால் நாம் இறந்தபின் எமதூதர்கள் நம்மை இழுத்து போகும் போது வழியில் உள்ள கற்களை அப்புறபடுத்துமாம். (அவர்களிடம் கிண்டலாக நாம் இறந்தபின் கற்கள் குத்தினால் வலி தெரியுமா? என்று கேட்டு இருக்கிறேன்.)

    //ஒரு யானைக்குக் கவளம் கவளமாகக் கொடுக்கப்படும் சாதத்தில் கீழே உதிர்ந்து விழுவது மட்டுமே ஆயிரம் எறும்புகள் உயிர்வாழப் போதும் எனச் சொல்லுவார்கள்.//

    நீங்கள் சொல்வது போல் பார்த்து இருக்கிறேன் சார். மாயவரத்தில் எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு நிறைய பற்வைகள் வரும், அங்கு பறவைகளுக்கு உணவு கொடுத்த பதிவில்( மெல்ல மெல்ல விடியும் பொழுது) ஒவ்வொரு பறவையாக வந்து சாப்பிட்டு போன பின் கடைசியில் எறும்புகளும் சாப்பிடுவதைப் பகிர்ந்து இருக்கிறேன்.
    படங்கள் அலைபேசியில் எடுக்கப்பட்டது.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.










    பதிலளிநீக்கு
  3. அக்கா உங்கள் அன்பு கடலினும் பெரியது ..அந்த காக்கா அணில் புறாங்க உணவை வேஸ்ட் செய்ய விருப்பமில்லாம தான் எட்டி மேலும் கீழுமா பார்த்திருப்பாங்க .நம்மை விட உணவை கவனமுடன் உண்பார்கள் இவங்க சில காக்காங்க எந்த உணவையும் நீரில் முக்கி ஈரப்படுத்தி சாப்பிடுங்க .வேஸ்ட் செய்யவேணாம்னு தான் எட்டி பார்த்திருக்குங்க ..வருத்தப்பாடாதீங்க ..அவற்றுக்கு உங்க மனசு புரியும்

    பதிலளிநீக்கு
  4. ஊர்ல எங்கம்மாவை தேடி குரங்கு ஒன்னு வரும் அப்புறம் ஒரு காக்கா ..அந்த காக்காக்கு கழுத்தில் முடி இருக்காது கொஞ்சம் மொட்டை தலை பிறகு ஒரு கிங் பிஷர் இவை ரெகுலர்விஸிட்டர்ஸ் ..இவை ஒரு நாள் வரலைன்னாலும் அம்மா அப்செட் ஆகிருவாங்க
    இங்கே எங்க வீட்ல ஜெஸியும் நண்பர்களும் பறவைகளை சீண்டுவதால் பயந்து வருவாங்க உணவை கட்டி தொங்க விட்டாலும் அணில்கள் தூக்கிட்டு ஓடிடுவாங்க :)

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அன்பு ஏஞ்சல், வாழ்க வளமுடன்.
    கீழ் பகுதியில் காலை நடை பயிற்சி செய்வார்கள் , அவர்களை கண்டால் பற்வைகள் பறந்து விடும். சுவற்றின் மேல் என்றால் பயபடாமல் சாப்பிடும்.
    நான் வைத்து கொஞ்ச நேரத்தில் அவ்வளவும் காலியாகி விடும். குயில், காக்கா, மைனா, புறா, தவிட்டுக் குருவி, அணில் தினந்தோறும் வரும் பறவைகள், சிறப்பு பற்வைகள் செண்பக பறவை, வல்லூறு வந்து இருக்கிறது. மாயவரத்தில் புல் புல் பறவை வரும்.


    மீன் கொத்தி, வாலாட்டி குருவி, கொக்கு , கிளி எல்லாம் வரும் ஆனால் இவை நம் சாப்பாடு சாப்பிடாது.

    மகன் வீட்டிலும் உண்வை கட்டி தொங்க விட்டால் குருவிகள், அணில் எல்லாம் வந்து சாப்பிடும் பார்க்க அழகாய் இருக்கும்.

    அணில் வெகு சீக்கிரம் காலி செய்துவிடும்.

    அம்மாவின் விருந்தினர்கள் பகிர்வு அருமை. தினம் வருவது வரவில்லையென்றால் மனம் சஞ்சல படுவது உண்மைதான்.
    உங்க்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் நல்ல மனதிற்கு வணங்குகிறேன் அம்மா...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் நல்லமனதை விடவா? உதவி செய்யும் சிறந்த மனிதர் நீங்கள்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நானும் இந்தப் பணியைத் தினமும்
    செய்து வருவதால் உங்கள் தவிப்பை
    உணரமுடிகிறது
    படங்களுடன் பகிர்வு அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி சார் , வாழ்க வளமுடன்.
      நீங்களும் வைப்பது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  9. படிப்படியான வர்ணிப்பு பரிதாபமாகத் தான் இருந்தது.

    வைத்த உணவை சரியாக வைக்காமல் உண்ண வந்த விருந்தினரை சிரமப்படுத்தி விட்டோமே என்ற பரிதாபம் மேலோங்குவது நல்ல மனங்களின் இயல்பு.

    இருந்தாலும் கீழே விழுந்தது, வெளியே விழுந்தது என்று நாம் தான் பரிதாபப்படுகிறோமே தவிர, பறவைகளுக்கு அதெல்லாம் பழக்கப்பட்ட ஒன்றாகத் தான் இருக்கும் என்று தோன்றியது. கீழே, மேலே, வெளியே என்று இத்தனை நாளும் இல்லாத வழக்கமாய் தாவித் தாவி சாப்பிட்டது ஒருக்கால் குஷியாகவும் இருந்திருக்கலாம். யார் கண்டது?..

    அதனால் மனத்தை வருத்திக் கொள்ளாமல் சகஜமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார். வாழ்க வளமுடன்.
      மதில் மேல் உணவு இல்லாமல் ஏமாற்றம் அடைந்நு சத்தம் கொடுத்து பறந்து போனது ஆண், குயில்.

      காலை நேரம் கார் , இரு சக்கர வண்டிகளை துடைப்பவர் , நடைபயிறசி செய்பவர் என்று உணவு கொட்டிய இடம் நடமாட்டம் அதிகமாய் இருப்பதால் அவை பயப்படும்.
      அதுதான் அந்த தவிப்பு அவற்றிற்கு ஏற்பட்டது.

      உங்கள் அன்பான கருத்துக்கும், ஆறுதலான வார்த்தைக்கும் நன்றி சார்.

      நீக்கு
  10. எம்மை விட மிக அழகான நண்பர்கள் வைத்திருக்கிறீங்க நீங்க... மைனாவும் இருக்கே.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் அழகான நண்பர்கள் தான். மைனா கூட்டமே இருக்கு, அவை விளையாடுவதை, சண்டையிடுவதை பார்க்கலாம் என் மாடி ஜன்னல் வழியாக.
    உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  12. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதினும் பெரிய புண்ணியமில்லை. தங்களைப் போலவே பலரும் முன்வரவேண்டும். வாயில்லாத ஜீவன்களுக்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டியது தார்மீகக் கடமையும் ஆகும்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் இராய செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொன்னது போல் அந்தக்காலத்தில் வழிபோக்கர்கள் தண்ணீர் குடிக்க என்று
    எல்லோர் வீட்டு வாசலிலும் தண்ணீர் பானை இருக்கும். கால்நடைகள் தண்ணீர் அருந்த மண் தொட்டி இருக்கும். அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தவுடன் அவை காலப்போக்கில் குறைந்து விட்டது.

    சில இடங்களில் இன்னும் கடைபிடித்து வருகிறார்கள். மதுரை பக்கம் கிராமங்களில் பார்த்தேன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு


  14. படிக்கும் போதே மனதிற்கு ஒரு இதம் வருகிறது அம்மா...உங்கள் அன்பான பணியை எண்ணி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன். சிறு வயதிலிருந்து பழக்கம், ஆனால் இப்போது பறவைகளை கவனிப்பதும் அதைப் பார்த்து மகிழ்வதும் ஒரு நாளின் அங்கமாகி விட்டது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. எங்கள் வீட்டில் பின் புற மதிலில் வைக்கப்படும் உணவு வைத்தவுடன் பறவைகளோ அணில்களோ வருவதில்லை . ஆனால் சிறிது கழிந்து போய்ப் பார்த்தால் ஒன்றும் இருக்காது யாராவது இருந்தால் அவை வர தயங்குகின்றன போலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      யாரும் இருந்தால் அவை வர தயங்குவது உண்மைதான் சார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. தினசரி கடமைகளில் ஒன்றாக இதை மாற்றிக் கொண்டு விட்டீர்கள் போல. பாராட்டுகள். நான் தண்ணீர் மட்டும் வைக்கிறேன். ஒன்றிரண்டு புதிய பறவைகள் விஜயம். அதில் ஒன்று ஏதோ ஜோக் கேட்டாற்போல சிரித்துக் கொண்டே இருக்கிறது. அதாவது சிரிப்பது போல கத்துகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஶ்ரீராம், வாழ்க வளமுடன்.
      சிறுவயதில் ஏற்பட்ட பழக்கம். சார் கல்லூரிக்கு குழந்தைகள் பள்ளி செல்லும் போது எனக்கு பறவைகளை கவனிக்க நேரம் இல்லை.

      இப்போது நேரமும் இருக்கிறது.

      குழந்தைகள் பிறக்கும் முன் தென்னை மர பொந்திலிருந்த கிளிகுஞ்சை காக்கா கொத்தி கீழே தள்ளியதை எடுத்து வளர்த்தேன், புதிதாக வாங்கிய வெங்காய கம்பி கூடையில் வைத்து வளர்த்தேன், நானும் சாரும் சேர்த்து பறக்க சொல்லிக் கொடுத்தோம், பின் நாங்கள் வெளியே போய் இருக்கும் போது பறந்து விட்டது.

      அப்புறம் தேன்சிட்டு எங்கள் வீட்டு கொடியில் கூடு கட்டி இருந்தது, அதில் ஒரு குஞ்சு கீழே விழுந்து விட்டது. கூட்டின் வாய் சிறிதாக இருக்கும் மீண்டும் குஞ்சை உள்ளே வைக்க முடியவில்லை .

      பின் எங்கள் டிரான்ஸ்சிஸடர் கவரை அதற்கு கொடுத்து தினமும் தேன் கொடுப்பேன்.

      அது வளர்ந்ததும் பறக்க சொல்லி கொடுத்து வெளியே பறக்க விட்டோம் , தாய் பறவையும் வந்து பறக்க சொல்லிக் கொடுத்து பறந்து போனது மகிழ்ச்சியாய்.

      இன்னொரு பறவை அடைகலமாய் வந்தும் இரண்டு நாட்களுக்கு மேல் உயிருடன் இல்லை .

      அதை மண்ணில் புதைத்தேன், அத்துடன் பறவைகளை தூரத்திலிருந்து ரசிப்பதுடன் வைத்துக் கொண்டேன்.

      புதிய பறவைகளை படம் எடுக்க முடிந்தால் படம் எடுத்து போடுங்கள்.
      உங்கள் பின்னூட்டம் சமர்த்தாய்
      மெயில் பாக்ஸ் வந்து விட்டது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது தொடர்புடையவர்கள் தங்கள் செயலின் உன்னதத்தை உறுதிப் படுத்திக் கொண்டு மகிழ்கிறார்கள். புதிதாக அறிபவர்கள் பாராட்டுவதோடு தாமும் கடைபிடிக்க விழைகிறார்கள். மகிழ்வான வாழ்த்துக்கள் தங்களுக்கு! வாழ்க வளமுடன்!

    தினசரி எங்கள் வீட்டு வாசல் கட்டையில் வைக்கப்படும் அரிசிக்கும், சாப்பிடும் முன் வைக்கும் சாதத்துக்கும் காக்கைகள், தவிட்டுக் குருவிகள், அணில்கள் எனப் பல அபிமானிகள் வருகை உண்டு. வடித்து நிமிர்த்தியவுடன் அன்னவட்டியில் எடுத்து ஓட்டின் மேல் (வீட்டு மேற்கூரை) வைக்கும் எங்க அம்மாவிடமிருந்து வந்த பழக்கம். என் மகள் கல்லூரி விடுதியில் தினம் மேரி பிஸ்கெட் இரண்டு வைத்து சில காக்கைகளை நட்பாக்கி வைத்திருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் நிலாமகள், வாழ்க வளமுடன்.
    உங்கள் பின்னூட்டம். மகிழ்வை தருகிறது.
    சமைத்தவுடன் முதல் உண்வு காக்கைக்கு என்று அம்மாக்கள் வைத்து வழி, வழியாக கடைபிடிக்க வைத்தார்கள்.
    உங்கள் மகளும் பிஸ்கட் வைத்து காக்கைகளுடன் நட்பு வைத்து இருப்பது மகிழ்ச்சி, மகள் வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. சற்றே உடல் நலக்குறைவால் வலைத்தளத்திற்கு வரமுடியாமற்போனது..

    படங்களைப் பார்க்கும் போதே - மனம் மகிழ்கின்றது..நெகிழ்கின்றது..

    தங்களுடைய நல்ல உள்ளத்திற்கு என்றும் துணையாக அன்னை அபிராமி அருள்வாளாக!..

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் துரைசெல்வரஜூ சார், வாழ்க வளமுடன்.
    இப்போது பூரண நலம் பெற்று இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.அன்னை அபிராமி
    எல்லோருக்கும் நலமே அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  21. ’உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ என்ற கொள்கை நல்ல எண்ணம்தான். இவ்வளவு கஷ்டப்பட்டு தண்ணீரும், உணவும் மதில்மேல் வைப்பதைவிட, ஒரு ஏணி அல்லது ஒரு ஸ்டூல் வைத்து, அதன் மீது ஏறி நின்று வைப்பது சுலபமாயிற்றே?

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
    நான் குள்ளமாய் இருப்பதால் மதில் கொஞ்ச்சம் எட்டவில்லை, சார் இருந்தால் வைத்து விடுவார். கீழ் வீடாய் இருந்தால் அப்படி செய்யலாம், நான் இரண்டாவது மாடியில் குடியிருக்கிறேன் அங்கிருந்து ஸ்டூல், ஏணி எடுத்து வர முடியாது. வயதான பின் அதில் ஏற வீட்டில் சம்மத்திக்க மாட்டார்கள்.

    இன்னும் கொஞ்ச நாளில் வேறு வீடு மாற போகிறேன். அங்கு போய் எப்படி என்று பார்க்க வேண்டும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு