Wednesday, February 11, 2015

புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்

மலைக்கோவில்
இரண்டு பக்கம் நாகங்களுடன்   சித்தி விநாயகர்

பாலதண்டாயுதபாணி
ஆறு தாமரைகளில் ஆறு முருகன்
மூன்று தூவாரங்களிலும் குரங்கு எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது. நான்  போட்டோ எடுக்கப் போகும்போது ஒன்று மட்டும்- அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது.


மதுரைக்கு பஸ்ஸில் போகும் போதெல்லாம் இந்தக் கோவிலைப் பார்ப்போம்.
இந்த முறை காரில் மதுரை போனதால்  மதுரையிலிருந்து மயிலாடுதுறை திரும்பும் போது இறங்கி முருகனைக் கும்பிட்டு வந்தோம். 

40 படிகள் கொண்ட சிறிய கோவில். நடுவில் பாலதண்டாயுதபாணி, அவருக்கு வலது பக்கம்  சித்தி விநாயகர் இருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லை குரங்குகளின் இருப்பிடமாய் இருக்கிறது. கோவிலுக்கு வெளியே அமர்ந்து இருப்பவரிடம் குரங்குகள் தொந்திரவு செய்யுமா? குச்சி ஏதாவது எடுத்துப் போக வேண்டுமா ? என்று  என் கணவர் கேட்டபோது, ஒன்றும் செய்யாது போங்கள் என்றார்.


படிகளில் அமர்ந்து இருந்த குட்டிக் குரங்கு ஒன்று நாங்கள் படி ஏறியதைப்பார்த்து  முறைத்து விட்டு  மதில் மேல் இருந்து உற்றுப்பார்த்தது. 

பூட்டிய கம்பிக் கதவுக்குள் முருகனைக் கண்டோம். கண்மலர் , ராஜகிரீடம் அணிந்து, எலுமிச்சை மாலையுடன் இருந்தார் சிறிய அழகிய முருகர்.  முந்திய நாள் தைப்பூசத்திற்குச் செய்த அலங்காரம் கலைக்கப்படாமல் இருந்தது. பக்கத்திலிருந்த  சித்திவிநாயகரையும்  பூட்டிய கம்பிக் கதவு வழியாகத் தரிசனம் செய்து விட்டு நிமிர்ந்தால்  தாயும் சேயும் இரண்டு குரங்குகள் கொஞ்சிக் கொண்டு இருந்தன. மல்லாந்த நிலையில் குட்டி, அதன் வயிற்றில் வாயை வைத்து அதைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தது, தாய்க் குரங்கு.
 அழகிய காட்சி எடுக்கப் போனபோது கணவர், ”மேலே வந்து விழுந்து காமிராவைப் பிடுங்கப் போகிறது வா” என்று அழைத்தவுடன் வேகமாய் எடுத்த காரணத்தால் தெளிவில்லாத தாய், சேய் படம்.
என் கணவர் கூப்பிட்ட சத்தம் கேட்டு குட்டி குரங்கு என்னை திரும்பி பார்த்தது.

இருந்தாலும் அதையும் விடாமல்   பதிவில் இடம்பெறச் செய்து விட்டேன்.  விளையாடுவது அழகாய் இருக்கிறது அல்லவா?

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். இப்படி சிறிய குன்றில் முருகன் கோவில் கட்டியது மகிழ்ச்சியான விஷயம். அந்த மலை பிழைத்தது. இப்படி மலை மீது கோவிலை கட்டினால் மலைகள் கால காலமாய் இருக்கும். 
                                                             வாழ்க வளமுடன்.
--------------------------------------------------

36 comments:

KILLERGEE Devakottai said...


புகைப்பட தரிசனம் கண்டேன் விளக்கவுரைகள் அருமை
நமது மூதாதையினரை காண்பித்தது சிறப்பு.
தமிழ் மணம் 1

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
முதலில் வந்து கருத்துச் சொல்லி, தமிழ் மணம் வாக்கு அளித்தமைக்கு நன்றி.

RAMVI said...

சிறப்பான தரிசனம். படங்கள் மிக அருமை.

ரூபன் said...

வணக்கம்
அம்மா.

மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் எல்லாம் மிக மிக அழகு இறை தரிசனம் கிடைத்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜீவி said...

//நான் போட்டோ எடுக்கப் போகும்போது ஒன்று மட்டும்- அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது. //

ஹஹ்ஹஹ்ஹா..

ஜீவி said...

//அந்த மலை பிழைத்தது! //

அதானே! இடுக்கில் வந்த ஆழ்ந்த நகைச்சுவை!

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான படங்கள்...

நல்லவேளை காமிரா தப்பித்தது...

R.Umayal Gayathri said...

நல்ல விளக்கமும், அழகான புகைப்படங்களும்..அருமை.
மலை மீது கோவிலைக் கட்டியதால் மலை பிழைத்ததுன்னு நீங்க சொன்னது முற்றிலும் சரி...நிறைய மலைக்கோவில்கள் கட்டிருந்திருந்தால்...மலைகள் இருந்து இருக்குமேன்னு நினைக்க தோணுது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. குரங்கு பற்றிச் சொல்லியுள்ள வேடிக்கைகளும் ரசிக்க வைத்தன.

நான் ஒருமுறை சோளிங்கர் பெருமாள் கோயிலுக்கும் அருகேயுள்ள ஹனுமார் கோயிலுக்கும் சுமார் 1500 + 500 = 2000 படிகள் ஏறிப்போய் வந்தேன்.

படிக்கு பத்து குரங்குகள் வீதம் சுமார் 20000 குரங்குகள் இருந்தன. Walking Stick அங்கேயே வாடகைக்குத் தருகிறார்கள்.

அதைத் தட்டிக்கொண்டே செல்ல வேண்டி இருந்தது.

கையில் எது வைத்திருந்தாலும் அவை உரிமையுடன் அவற்றைப் பிடிங்கிக்கொள்ளும். ஏனோ அந்த ஞாபகம் வந்தது. :)

Dr B Jambulingam said...

இதுவரை நாங்கள் செல்லாத கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வோம். அண்மையில் வேதாரண்யம் அருகே ராமர் பாதம் சென்றிருந்தோம். அங்கேயும் குரங்குகள் தொல்லை இருந்தது. புகைப்படங்கள் அருமை.

கோமதி அரசு said...

வணக்கம் ரமாரவி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
ஒரு காட்சி நன்றாக இருக்கிறது என்று போட்டோ எடுக்க போகும் போது அது மாறி விட்டால் ஏற்படும் ஏமாற்றம் எண்ணிப்பார்க்கும் போது சிரிப்புதான்.

மதுரைக்கு போகும் போதெல்லாம் மலைகளை பார்க்கும் போது ஏற்படும் எண்ணம், முன்பு பார்த்த நிறைய மலைகள் இப்போது காணவில்லை.
மக்களின் வாழ்க்கை தேவைகள் பெருக பெருக மலைகள் அழிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

காமிராவும், நானும் தப்பித்தேன்.
உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் உமையாள் , வாழ்க வளமுடன்.

நிறைய மலைகள் இப்போது இல்லை. அதை பார்த்து எழுந்த எண்ணம் தான் உமையாள்.
ரோடு போட, வீடுகட்ட, மற்றும் பல தேவைகளுக்கு மலைகள் அழிந்து வருகிறது. பலகாலமாய் உருவான மலைகள் விஞ்ஞான வளர்ச்சியால் நொடியில் அழிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்கு நன்றி உமையாள்.

கோமதி அரசு said...

வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

சோளிங்கர் பெருமாள் கோவில் போனது இல்லை.

சொல்வார்கள் அங்கு குரங்குகள் அதிகமாய் இருக்கும் என்று.

திருகழுகுன்றம் போய் இருந்த போது குரங்குகள் அர்ச்சனை சாமான்களை பறித்து சென்ற காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.
எல்லோரும் கம்புகளுடன் தான் படி ஏறுவார்கள்.

உங்கள் அனுப கருத்துக்களுக்கு நன்றி.

துரை செல்வராஜூ said...

//நான் போட்டோ எடுக்கப் போகும் போது ஒன்று மட்டும் - அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது..//

ரொம்ப வெட்கம் போலிருக்கின்றது!..

அழகான படங்களுடன் - புழுதிப்பட்டி ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமியைத் தரிசனம் செய்து வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..

Anuradha Prem said...

முருகன் துணை ...அழகான படங்கள்...

Anonymous said...

படங்களும்
விரித்தலும் நன்று.
இனிய நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள். மூதாதையர்களையும் ரசித்தேன். குமரக்கடவுளையும் தரிசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. நல்ல தரிசனம்.

தாய்க் குரங்கு கொஞ்சும் காட்சி மிக அழகு. குட்டிக் குரங்கு குழந்தை போலச் சிரித்த அழகைக் கற்பனையில் ரசிக்க முடிந்தது.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.

வேதாரணயம்த்தில் உள்ள ஸ்ரீராமர் பாதம் இருக்கும் இடம் காடு மாதிரி இருக்குமே முன்பு போய் இருக்கிறேன்.
அங்கு குரங்குள் அதிகமாய் இருக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

பரிவை சே.குமார் said...

படங்களும் பகிர்வும் அருமை அம்மா..

கோமதி அரசு said...

வணக்கம் வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
மூதாதையர்களையும் ரசித்தேன்//
”குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”
பாடல் நினைவுக்கு வந்து விட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
அந்த குரங்கு கொஞ்சும் காட்சியை தூரத்திலிருந்து எடுக்கும் வசதி இருந்து இருந்தால் வீடியோவும் எடுத்து இருப்பேன், ஆனால் அது தடுப்புக்குள் இருந்தது. பக்கத்தில் தான் எடுக்க முடியும்.
அதனால் நீங்கள் கற்பனையில் மகிழ்ந்த காட்சியை கொடுக்க முடியவில்லை.(அவசரத்தில்படமும் சரியாக வரவில்லை)
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கே. பி. ஜனா... said...

படங்கள் சிற்ப்பாக... நல்ல தரிசனம்.

வெங்கட் நாகராஜ் said...

கோவில் இருப்பதால் மலை பிழைத்தது..... உண்மை தான்..

குரங்குகள் படமும் மற்றவையும் அழகு..... அவை விளையாடுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான ஒரு கோயில் பற்றிய தகவல்! ம்ம்ம் எங்கு சென்றாலும் நம்மவர் அங்கு வந்துவிடுவார்கள் நம்மை மகிழ்விக்க!!!

இன்றுதான் உங்கள் தளத்தில் இணைய முடிந்தது. இதற்கு முன் பல முறை முயன்று இணைய முடியாமல் போனது.....தொடர்கின்றோம்...சகோதரி!

கோமதி அரசு said...

வணக்கம் ஜனா சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் வந்து தரிசனம் செய்தமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
உங்கள் இருவர் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மகிழ்ச்சி இணைந்தமைக்கு.

yathavan nambi said...

அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com