சனி, 29 செப்டம்பர், 2012

புரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.




புரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும். அவர்களுக்கும்  எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு மிக அழகானது ,ஆழமானது. என் மாமா பெண்ணின் (மதினி) பக்கத்து வீட்டு  இனிய தோழி ,எங்கள் குடும்பத்திற்கும் நட்பானார்கள். என் மதினி  வீட்டுக்கு விடுமுறைக்குப் போகும் போதேல்லாம்  அவர்கள் வீட்டில் தான்  பொழுதைக் கழிப்போம்  நல்ல கை வேலைகள் செய்வார்கள். நானும் என் அக்காவும் நிறைய அவர்களிடம் கற்றுக் கொண்டோம்.


எங்கள் அப்பாவிற்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊருக்கு வருவார்கள்.
அவர்களுடன் அந்த ஊர்க் கோவில்கள் , சினிமா என்று அவர்கள் வந்தால் பொழுது மகிழ்ச்சியாக  போகும்.   அம்மாவிற்கு பின் எங்கள்  சகோதர சகோதரி வீடுகளுக்கும்  அவர்களின் வரவு தொடர்ந்தது.அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் ’உங்கள் வீட்டுக்குப் புரட்டாசி மாதம்  தான் வரவேண்டும், இல்லையென்றால் கத்திரிக்காய் , வாழைக்காய் போட்டு நாக்கு செத்து  விடும் என்பார்கள்.   புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருந்து  தளிகை படைத்து அக்கம் பக்கத்தில் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்து சாப்பிடச் சொல்வார்கள்.

நாங்கள் மதினி வீட்டுக்குப் போனால், அவர்கள் சப்பாத்தி, குருமா, பூரி மசால், புட்டு, ஆப்பம்,   குழிப்பணியாரம் என்று கொண்டு வந்து கொடுத்து அன்பாய் நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து  மகிழ்வார்கள். குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை. ஆனால் இறைவன் அவர்களுக்கு  அருளவில்லை. எப்படி அருள்வான் அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது! நிறைய பக்கத்துவீட்டு குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் அவை தங்களின் அம்மா வந்தவுடன்
இவர்களை விட்டுப்போய்விடுவார்கள். அதனால் அக்கா மனம் சோர்ந்து  போய் வேறு முடிவு எடுத்தார்கள். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் சென்று எந்த குழந்தை தன்னைப் பார்த்து மகிழ்ச்சியாக கையை பிடித்துக்  கொள்கிறதோ அதை எடுத்துவந்து வளர்ப்பது என்று முடிவு செய்து அது போல் தன்னைப்  பார்த்து சிரித்த பெண் குழந்தையை  எடுத்துவந்து வளர்த்தார்கள்.  பெண் குழந்தை வேண்டாம்  என்று பெற்ற  தாய் விட்டுச் சென்ற குழந்தையை எடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம்  வேண்டும்!  அந்தப் பெண்ணைப்  படிக்க வைத்து ,திருமணம் செய்து அவளுக்கு பிறந்த குழந்தைகளை வளர்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்

இறைவன் தன் பக்தைக்கு  பிடித்த மாதத்திலேயே அவர்களை அழைத்துக் கொண்டான்.  போன செப்டம்பரில்,மகிழ்ச்சியாக  தன் மகள் வீட்டுக்கு  கிளம்பி பஸ்ஸுக்கு காத்து இருக்கும் போது காரில் வந்த எமன் அவர்களை அடித்துச் சென்று விட்டான். அவர்கள்   இறந்து விட்டார்கள். அப்போது அவர்களைப் பார்க்க வந்தவர்களில், அவர்கள் வளர்த்த அக்கம் பக்கத்து குழந்தைகள், நட்பு வட்டம் தான் அதிகம்.  அவர்கள் இறந்ததற்கு நான் போனபோது எல்லோரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். மதுரைப் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கோயமுத்தூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? அம்பிகாபுரத்திலிருந்து எல்லோரும் வந்து விட்டார்களா  என்று .   மதுரைப் பிள்ளைகள் எங்கள் குடும்பம்.  குழந்தைகள் இல்லையென்றால் என்ன ?அன்பால் பெற்றுக் கொண்ட  குழந்தைகள் எவ்வளவு? அவர்கள் நினைவுகளில் அவர்கள் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் . போன சனிக்கிழமை அவர்களின் முதல்வருட நினைவு நாள்.

காது கேட்காத குறை இருந்தாலும் அதைக் குறையாக எண்ணாமல் பத்து நாட்களுக்கு  ஒருமுறை ’கோமு எப்படி இருக்கே? தம்பி நல்லாருக்கா? என்று கேட்டுவிடுவார்கள். நீ சொல்வதை இவளிடம் சொல் கேட்டுக் கொள்கிறேன் ”என்று யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிவிடுவார்கள்.
அவர்கள் நட்பு வட்டத்தில் நமக்கும் இடம் உண்டு.  எல்லோரிடமும் நம்மைப்பற்றி சொல்லி அவர்களைப் பற்றி நம்மிடம் சொல்லி    நெடுநாள் பழக்கமானவர்கள் மாதிரி ஆக்கி விடுவார்கள்.  சின்ன டைரியில்  போன் நம்பர் அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டு முகவரி வைத்துக் கொண்டு தனியாக எந்த ஊருக்கும் சென்று விடுவார்கள். முன் பின் தெரியதவர்களும் அவர்களின் அனபான பேச்சால் அவர்கள் வசம் இழுக்கபட்டு விடுவார்கள்.

அன்பு  அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.
அன்பே தெய்வம்!
அன்பே அனைத்தும்.
அன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.



52 கருத்துகள்:


  1. மிகவும் வேண்டியவர்கள் மறைந்து போனாலும் அவர்கள் நினைவுகள் என்றும் தங்கும். உங்கள் நட்பின் ஆழத்தை உங்கள் பதிவு பறை சாற்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் இனிய உறவை, அனுபவத்தை, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... அவர் உங்களிடமே உள்ளார்...

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் பேபி அக்காவை மறக்கவே முடியாதபடி பகிர்ந்து கொண்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு தான் மேன்மை...

    பேபி அக்கா எங்கள் மனதிலும் பதிந்து விட்டார்.

    அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

    பதிலளிநீக்கு
  5. நிச்சயம் அவர்கள் சொர்க்கத்தில்
    குழந்தைகளோடு குழந்தைகளாய்
    குதூகலமாய் இருப்பார்கள்
    மனம் தொட்ட பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி


    பதிலளிநீக்கு
  6. நெஞ்சு நெகிழ வைக்கும் அனுபவம்.
    பேபி அக்கா அங்கள் மனத்திலும் இடம் பிடித்து விட்டார்.
    த.ம. 4

    பதிலளிநீக்கு
  7. //புரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும்.//

    இந்த ஆரம்பமும் சரி--

    //அன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.//

    இந்த முடிப்பும் சரி--

    அவர் மேல் நீங்கள் கொண்டிருந்த அன்பைச் சொல்கிறது. நினைவில் தோய்ந்தவர்கள் நித்தியமானவர்கள்.

    பதிலளிநீக்கு
  8. பேபி அக்கா நிச்சயம் ஒரு அற்புதமான மனுஷிதான்.நெகிழ வைத்த பகிர்வு கோமதியம்மா.

    பதிலளிநீக்கு
  9. மிகவும் வேண்டியவர்கள் மறைந்து போனாலும் அவர்கள் நினைவுகள் என்றும் தங்கும்.//
    வாங்க ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், நீங்கள் சொன்னது உண்மை.
    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  10. எளிமையும் அவங்க அன்பும் ...ம்..
    மறக்கமுடியாதவர்கள் ..அம்மா

    பதிலளிநீக்கு
  11. வாங்க திண்டுக்கல் தனபாலன்,உங்கள் வரவுக்க்ம், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க லக்ஷ்மி அக்கா, அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசியவர்களே அவர்களை மறக்க மாட்டார்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஆதி, நீங்கள் சொல்வது போல் அன்பு தான் மேன்மை.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ரமணி சார், நீங்கள் சொன்ன மாதிரி பேபி அக்கா சொர்க்கத்தில் குழந்தைகளுடன் குழந்தையாக குதுகலமாய் இருக்கட்டும்.
    இனிமையான கருத்துக்கும், உங்கள் வரவுக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  15. டி.என். முரளிதரன், பேபி அக்கா எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடுவார். அது தான் அவர் குணநலன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. நினைவில் தோய்ந்தவர்கள் நித்தியமானவர்கள்.//

    வாங்க ஜீவி சார், நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை.

    நித்தியமாய் என் நினைவில் அவர்கள் ஜீவித்து இருப்பார்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஸாதிகா, பேபி அக்கா நீங்கள் சொன்னது போல் அற்புத மனுஷி தான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  18. கயல்விழி, நீ சொன்னது போல் பேபி அக்காவின் எளிமையும், அவர்கள் அன்பும் மறக்க முடியாதவை தான்.
    கருத்துக்கு நன்றி.

    நீ வளர்ந்த பிறகும் நீ சிறுமியாக இருக்கும் போது சொன்னதை சொல்லி சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.
    கயல்விழி என்ன சாப்பிட்டாய்? என்று அவர்கள் கேட்ட போது தண்ணி என்றாய் எனக்கு என்ன தருவாய் என்று கேட்ட போது தண்ணி என்றாய் (ஏனென்றால் நீ தண்னி குடித்துக் கொண்டு இருந்தாய் அவர்கள் உன்னை கேள்வி கேட்ட போது)
    குழந்தைகள் சிறுவயதில் செய்த குறும்புகளை அவர்களிடம் சொல்லி அவர்களை வெட்க புன்னகை பூக்க வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  19. சிறு பிரச்சனை என்றாலும் அதையே நினைத்து நினைத்து வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் தன் குறைகளை அநாயாசமாக ஒதுக்கிவிட்டு அனைவருடனும் அன்புடன் பழகி ஏராள மனங்களைச் சம்பாதித்த பேபி அக்கா உண்மையில் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. அவரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க கீதமஞ்சரி, நீங்கள் சொல்வது போல் தன் குறைகளுக்காக மற்றவர்கள் பேசிய போதெல்லாம் (குழந்தை இல்லைஎன்பதை சுட்டி காட்டி குறை கூறிய போது) அதைப் பற்றி கவலைபடாமல் இருந்தார்கள்.
    யார் பெற்ற குழந்தையோ எப்படி பட்டவள் பெற்ற குழந்தையோ எடுத்து வந்து வளர்க்கிறாள் என்று கேலி செய்த போதும் அவர்கள் கவலை படவில்லை. புறம் பேசியவர்களே பின்பு அவர்களிடம் நட்பானார்கள்.
    அதுதான் அவர்களின் நல்ல குணம்.
    நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய தான்
    உங்கள் வரவுக்கும், நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  21. அன்பின் சக்தி மனம் நெகிழ வைக்கிறது..எல்லாமே பொய்யான பின் அன்பு மட்டும் எத்தனை வடிவங்களில் உண்மையாகி நிற்கிறது!!

    பதிலளிநீக்கு
  22. , எல்லாமே பொய்யான பின் அன்பு மட்டும் எத்தனை வடிவங்களில் உண்மையாகி நிற்கிறது!! //

    வாங்க பாசமலர்,
    நீங்கள் சொல்வது உண்மை. அன்பு பலவடிவங்களாய் நிரந்தரமாய் நிற்கிறது.
    உங்கள் வரவுக்கும் அருமையான கருத்தை பகிர்ந்து கொண்டதற்கும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  23. //அன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.
    அன்பே தெய்வம்!
    அன்பே அனைத்தும்.
    அன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.//

    உண்மை. உண்மை. உண்மை.

    மிகவும் அழகான பதிவு இது. பேபி அக்காவின் மறைவு, இதைப்படித்த என்னையே கலங்கச் செய்து விட்டது.

    உங்களுக்கெல்லாம் பாவம் ......
    மனது எவ்வளவு கலங்கியிருக்கும்?

    புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமையன்று இதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  24. இப்படிப் பட்ட மனிதர்களைப் பார்ப்பதே அபூர்வம்தான் கோமதி.
    எத்தனை பரந்த மனது இவர்களுக்கு.
    அவர்கள் இறைவனடி சேர்ந்தாலும்
    அத்தனை குழந்தைகளின் இதயத்திலும் வாழ்கிறார்.
    இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்க முடியவில்லையே என்று ஏக்கம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  25. வாங்க வல்லி அக்கா, நீங்கள் சொன்ன மாதிரி அபூர்வமாகத்தான் போய் விட்டது அன்பான மனிதர்களை காண்பது.

    அத்தனை குழந்தைகளின் இதயத்திலும் வாழ்கிறார்.//

    நிச்சியம் எல்லா குழந்தைகளின் இதயத்திலும் வாழ்வார்.
    உங்கள் அழகான மனதை தொடும் பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா.



    பதிலளிநீக்கு
  26. அருமையானதோர் மனுஷியைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி கோமதிம்மா..

    எத்தனை பரந்த மனப்பான்மை அவங்களுக்கு!!.. ஆச்சரியமாருக்கு.

    பதிலளிநீக்கு
  27. நான் சந்திக்க தவறிய அற்புதமான அம்மா பேபி அக்கா....

    தெய்வங்கள் நேரில் வருவதில்லை. பேபி அக்கா போன்றோர் ரூபத்தில் தான் தெய்வமாக அறியப்படுகின்றார்...

    மனிதன் எப்போது எப்படி பிறக்கிறான் என்பது முக்கியமல்ல ஆனால் எப்படி தான் இறந்தப்பின்னரும் அனைவரும் நெஞ்சில் நிலைத்து வாழ்கிறான் என்பது தான் முக்கியம்... பேபி அக்காவும் அது போன்ற ஒரு அற்புதமான தெய்வப்பிறவியாக இருந்துவிட்டதால் தான் இத்தனை சீக்கிரமாக இறைவன் அவரை அழைத்துக்கொண்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது....

    தன் குழந்தைகளுக்கு மட்டும் தாயாக இருப்பதற்கு பேர் தாய்மை இல்லை கண்டிப்பாக.. அன்னை தெரசா உலகத்துக்கே தாயாக அன்னையாக போற்றப்படுவதற்கு காரணமே எல்லா குழந்தைகளையும் தன் குழந்தைகள் போல அன்பு மாறாது அரவணைத்ததால் தான்... பேபி அக்காவும் ஒரு அன்னை தெரசவாக தான் இருந்திருக்கிறார்.... இருக்கிறார்.. என்றும் நம் எல்லோரு மனதிலும் அன்புத்தாயாக, சகோதரியாக, தெய்வமாக, அன்புத்தோழியாக நிலைத்து நிற்பார் என்பதில் எனக்கு ஐயமே இல்லைப்பா...

    உலகம் நம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்பதில் தன் கவனத்தை செலுத்தாமல் எல்லோரிடமும் ஒரேபோல் அன்பு காண்பித்து அரவணைத்து செல்வது என்பது இயலாத காரியம். ஆனால் பேபி அக்கா அப்படி இருந்திருக்கிறார்...

    மனம் நெகிழவைத்த நற்பதிவு கோமதிம்மா....

    நான் சந்திக்கமுடியாமல் போய்விட்டதே இவரை என்று வேதனையுடன் நினைத்துக்கொள்கிறேன்.

    நல்லோர் நினைவுகள் என்றும் நம்மை ஆசி தந்து அன்புடன் வழிநடத்திச்செல்லும் என்ற நம்பிக்கையுடன் இனி புரட்டாசி மாதம் வைகுந்தனை நினைக்கும்போதெல்லாம் அன்புடன் பேபி அக்காவையும் நினைவுகூறுவோம் உங்கள் இந்த பதிவால்....

    அன்புநன்றிகள் கோமதிம்மா முதல் பதிவே என் மனம் நெகிழவைத்த பதிவை வாசிக்க வாய்ப்பு தந்தமைக்கு....

    பதிலளிநீக்கு
  28. வாங்க அமைதிச்சாரல்,நீங்கள் சொன்னது போல் அருமையான மனுஷி தான்.
    நன்றி அமைதிச்சாரல் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  29. வாங்க மஞ்சுபாஷிணி, உங்கள் முதல் வரவுக்கு வாழ்த்துக்கள் .

    //உலகம் நம்மை எந்த கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்பதில் தன் கவனத்தை செலுத்தாமல் எல்லோரிடமும் ஒரேபோல் அன்பு காண்பித்து அரவணைத்து செல்வது என்பது இயலாத காரியம். ஆனால் பேபி அக்கா அப்படி இருந்திருக்கிறார்...//

    உண்மை நீங்கள் சொல்வது.
    பேபி அக்கா உங்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
    அன்பான, அழகான பின்னூட்டம் அளித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி, நன்றி.
    வலைச்சர பொறுப்பிலும் நீண்ட பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  30. வேடிக்கையாக ஆரம்பித்து எவ்வளவு கனமான் செய்திகளை கூறீருக்கிறீர்கள்.
    "ஆன்டவன் அவர்களுக்கு அருளவில்லை".அதனால் என்ன பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
  31. முதலாம் ஆண்டு நினைவுகள்.
    அவர்கள் ஆன்மா சாந்தி அடையிட்டும்

    பதிலளிநீக்கு
  32. புரட்டாசி பவுர்ணமி கழிந்த 15 நாட்கள் "மாளய பட்சம்". அவ்ர்களைப்போன்றவர்கள் இப்பூவுலகிற்கு வருகை தரும் நாட்கள். அவர்கள் நிச்சயம் உங்க நினைவினைப் போற்றுவார்கள்.

    பதிலளிநீக்கு
  33. பேபி அக்கா அவர்கள் அபூர்வமான பெண்மணி. அவரது தாயுள்ளமும் கனிவான நட்பும் பழகியவர்களால் மட்டுமல்ல.., உங்கள் பகிர்வால் எங்களாலும் மறக்க முடியாது.

    பதிலளிநீக்கு


  34. // புரட்டாசி பவுர்ணமி கழிந்த 15 நாட்கள் "மாளய பட்சம்". அவ்ர்களைப்போன்றவர்கள் இப்பூவுலகிற்கு வருகை தரும் நாட்கள். அவர்கள் நிச்சயம் உங்க நினைவினைப் போற்றுவார்கள்.//
    வாங்க சந்திரவம்சம், நீங்கள் சொன்ன மாதிரி அவர்கள் வந்து போற்றட்டும்.
    உங்களின் ஆனமா சாந்தி பிராத்தனைக்கு நன்றி.
    நன்றி சந்திரவம்ச்ம் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் .

    பதிலளிநீக்கு
  35. //
    பேபி அக்கா அவர்கள் அபூர்வமான பெண்மணி. அவரது தாயுள்ளமும் கனிவான நட்பும் பழகியவர்களால் மட்டுமல்ல.., உங்கள் பகிர்வால் எங்களாலும் மறக்க முடியாது.//

    வாங்க ராமலக்ஷ்மி ,நீங்கள் சொல்வது போல் பேபி அக்கா அபூர்வமான பேண்மணி தான்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.



    பதிலளிநீக்கு
  36. உயர்ந்தஉள்ளம் கொண்ட பேபி அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.நெகிழ வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  37. வாங்க இந்திரா, உங்களை காணோமே நினைத்துக் கொண்டு இருந்தேன்.
    நலமா?

    பேபி அக்கா உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தான்.
    அவர்கள் ஆதமா சாந்தி அடைய பிராத்தித்து கொண்டதற்கு நன்றி இந்திரா.

    பதிலளிநீக்கு

  38. பேபி அக்கா என்றதும், உங்களின் மூத்த அக்கா பற்றிய பதிவோ என்று நினைத்தேன்.

    வித்தியாசமானவர்களாய்த்தான் இருக்கீறார்கள். பக்கத்து வீடு என்று பழகினாலும், இறுதிவரை உறவினர்போல பாசமாக இருப்பவர்கள் அரிது.

    //அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது//
    இந்த வரியைப் பார்த்ததும், கொஞ்சம் பகீரென இருந்தது, என்ன ஆச்சோ என்று. நல்ல விஷயம்தான். இதற்கு பரந்த மனம் வேண்டும்.

    //கயல்விழி .. எனக்கு என்ன தருவாய் என்று கேட்ட போது தண்ணி என்றாய்//
    அடேயப்பா, அப்பவே அக்கா அப்படித்தானா!! :-))))

    பதிலளிநீக்கு
  39. தங்களின் உறவுகளை பகிர்ந்தமைக்கு அக்க உங்களின் வளர்ச்சியில் எப்போதும் துணை இருப்பார்

    பதிலளிநீக்கு
  40. வாங்க ஹுஸைனம்மா,//அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது//
    இந்த வரியைப் பார்த்ததும், கொஞ்சம் பகீரென இருந்தது, என்ன ஆச்சோ என்று. நல்ல விஷயம்தான். இதற்கு பரந்த மனம் வேண்டும்.//

    ஆதறவற்ற குழந்தைக்கு அம்மாவாக ஆக வேண்டும் என்று இறைவன் முடிவு செய்து இருக்கும் போது அவருக்கு என்று குழந்தையை கொடுப்பானா என்பது என் எண்ணம் அதை தான் குறிப்பிட்டேன்.


    உறவினர்கள், எதிர்ப்பு நண்பர்களின் கேலி எல்லாவற்றையும் புறம் தள்ளி அவர் அந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தாற்கள்.

    கயல்அக்கா சிறு வயதில் சாப்பிட அடம் தண்ணீர் மட்டுமே பிடித்த உணவு.யார் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டாள் தண்ணீ என்பாள்.
    இப்போதும் சாப்பிட கஷ்டம் தான் அவளுக்கு.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  41. வாங்க mohan.p., உங்கள் முதல் வருகைக்கு வாழ்த்துக்கள்.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  42. அன்புள்ளம் கொண்ட இனியவரின் இழப்பு எம்மையும் துயருற வைக்கின்றது.

    அவருக்கு எனது அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  43. அன்புள்ளவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாது தான் மாதேவி. நம் துயரத்தை பேபி அக்கா விரும்ப மாட்டார்கள் ,அவர்களுக்கு எல்லோரும் ஆனந்தமாய் இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் துயரங்கள் ஏற்பட்ட போது ஓடி வந்து ஆறுதல் சொன்னவர்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  44. அன்பு அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது

    வேறு மொழி தேவையா என்ன !

    அன்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  45. வாங்க ராஜராஜேஸ்வரி, நீங்கள் சொல்வது போல் அன்பு ஒன்றே போதும் வேறு மொழி தேவை இல்லை.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  47. வாங்க இந்திரா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
    அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

    பேரன் வருகை நவராத்திரி கொலு வைக்கும் வேலை இதனால் இணையம் பக்கம் வரமுடியவில்லை.
    அதனால் காலதாமதமாய் பதில் போடுகிறேன். மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  48. தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்
    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_7.html

    நன்றி

    பதிலளிநீக்கு
  49. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  50. வாங்க இந்திரா, நலமா? உங்கள் தீபாவளி வாழ்த்துக்கு மிகவும் நன்றி. தீபாவளி வாழ்த்து பதிவு போட்டு இருக்கிறேன்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவ்ளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க குண்சீலன், வாழக வளமுடன்.
    என் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு