வெள்ளி, 6 நவம்பர், 2015

குன்றத்தூர் முருகன் கோயில்

சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரில் சிறிய மலையின் மீது  இருக்கும்   முருகன் கோவிலுக்கு சென்றமாதம் சென்று இருந்தோம். (தம்பி மகள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு மாங்காடு சென்று இருந்தோம் ) அப்படியே முருகன் தரிசனம்.

பழைய சினிமா படங்களில் எல்லாம் இந்தக் கோவில் கண்டிப்பாய் இடம்பெறும். பலவருடங்களாய் பார்க்க நினைத்த கோவிலை என் மருமகள்  கல்யாணநிச்சயத்தால் பார்க்க முடிந்தது.

இவ்வூர் பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழார் சுவாமிகள் பிறந்த ஊர். இந்த ஊரில் அவருக்கு தனிக் கோவில் உண்டு.

மாங்காட்டிலிருந்து இவ்வூர் நாலு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
அழகிய வடக்கு நோக்கிய இராஜகோபுரம், படி ஏறுவதற்கு முன் அழகான மண்டபம். 

கோவில் வரலாறு சொல்லும் அறிவிப்புப்பலகை கூறும் கதை:-

திருப்போருரில் அசுரர்களை வென்று வந்த முருகன், இந்தக் குன்றத்தூர் குன்றில் தங்கிச்  சென்றதால்  இத்தலத்திற்கு தென் திருத்தணி என்ற பெயரும், , இங்குள்ள குன்றின் மீது முருகன் அமர்ந்ததால் குன்றத்தூர் என்ற பெயரும்   ஏற்பட்டது.

சோழ அரசர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. முருகன் தங்கி இருந்து பூஜை செய்த சிவனுக்குக்  கட்டிய கோவில் மலையடிவாரத்தில் இருக்கிறது.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ச்செல்லும்படியாகத் தடுப்பு கட்டி இருக்கிறார்கள் . தடுப்புக்கு அப்பால் வள்ளி தெய்வானையுடன்  உற்சவ முருகன் மிக அழகாய்  காட்சி தருகிறார். உற்சவ மூர்த்திக்கு முதலில்  ஆரத்தி  செய்து  காட்டி விட்டு மூலஸ்தானத்திற்கு அழைத்து செல்கிறார் குருக்கள். முருகன் மிக அழகாய் விபூதி அலங்காரத்தில் அவர் மட்டுமே காட்சி தருவார் நேரே பார்த்தால். ஒரு புறம் இருந்து வள்ளியும் மற்றொருபுறம் இருந்து தெய்வானையையும் பார்க்க வேண்டும்.

முருகன் சன்னதியில் தட்சிணாமூர்த்தியும், விஷ்ணு துர்க்கையும் இருக்கிறார்கள், பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள், பைரவர் இருக்கிறார்கள்.




தூண்களில் அழகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 
கிளி சோதிடம் பார்ப்பவர்,  யாசிப்பவர்கள் படிகளில்
படியேறி முருகனைத் தரிசனம் செய்யப் போகும் போது  ஒரு  குட்டி தேவதை தன் பெற்றோர்களுக்குப் போட்டோ எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

படியேறி வருகிறோம், எங்கள் மனக்குறைகளைப்  படிப்படியாகக் குறைத்துவிடப்பா!

கோவிலுக்குப் போகும் பாதை
கோவில் வரலாறு சொல்லும் அறிவிப்புப் பலகை

படியேறிச் சென்றவுடன் முதலில் வருவது வலம்சுழி விநாயகர் சன்னிதி

பிள்ளையாரின் பின் புறத்திலிருந்து பார்த்தால்  அழகான இயற்கைக் காட்சி தெரிகிறது.

குன்றத்தூர் முருகன் குறைகளை தீர்ப்பார் என்று  சொல்கிறது வரலாறு, மனக்குறைகளைப்  போக்கி மன ஆறுதலைத் தரவேண்டும் குன்றத்தூர் முருகன் அனைவருக்கும்.

அப்படியே எல்லோருக்கும் இனியதீபாவளி நல் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன். 
வாழ்க வளமுடன்.