ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்,கொழும்பு

ஐந்து நிலைக்கோபுரம்



உள் மண்டபத்தில் விழாக்கோலம்


பஞ்சமூர்த்திகள் உலா


சோமாஸ்கந்தர்,முருகன்,வள்ளி,தெய்வானை


தீச்சட்டி எடுத்து வரல்


வடக்கு வெளிப்பிரகாரம்




திருவருள் துணையுடன் நாங்கள் சென்னையிலிருந்து 10.03.2011 அன்று இரவு விமானம் மூலம் கொழும்பு சென்றோம்.

நாங்கள் இலங்கை சென்ற உடன் முதலில் போன கோயில் பொன்னம்பலேஸ்வரர் கோயில் ஆகும். கோயிலில் 1960களில் மார்கழி மாத திருவெம்பாவை உற்சவத்தின்போது பூசை நிகழ்ச்சிகளையும் அந்த கோயில் ஓதுவார் பாடுவதையும் இலங்கை வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்வார்கள் என்று என் கணவர் சொன்னார்கள். அதேபோல் சிவராத்திரியின் போது நான்கு கால பூசைகளையும் நேரடி ஒலிபரப்பு செய்வார்களாம்.

கோவில் அழகாக படு சுத்தமாக இருந்தது. தூணில் உள்ள ரிஷபாரூடருக்குக்கூட வெள்ளி கிரீடம் சூட்டி இருந்தார்கள். உமைக்கு வெள்ளிகிரிடம், ரிஷபத்தின் கொம்புக்கு வெள்ளிப் பூண். என்று அழகூட்டி இருந்தார்கள். பொன்னம்பலவாணேஸ்வரர், சிவகாமி அம்மன், நடராசர், விநாயகர், முருகன், நவக்கிரகங்கள் உள்ளன. பைரவர் இத்திருக்கோயிலில் மனைவியுடன் எழுந்தருளியிருக்கிறார்.

நாங்கள் சென்றிருந்த சமயம் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்ற திருவிழா நடந்து கொண்டிருந்தது. பஞ்சமூர்த்திகள், கோயில் வெளிப் பிரகாரத்தில் உலா வந்து கொண்டு இருந்தார்கள். ஓதுவார்கள் திருமுறைகள் பாடிக்கொண்டு இருந்தார்கள். அடியார்களின் கூட்டம் நிறைந்திருந்தது. பஞ்சமூர்த்திகளின் பின்புறம் உருள்வலம் வந்தார் ஒரு பக்தர். அக்னிக் கொப்பரை ஏந்தி வந்த பெண்கள் பஞ்சமூர்த்திகளை வலம் வந்தார்கள். கோயிலுக்குள் மூர்த்திகள் போன பின் பலவிதமான தூப,தீபங்கள் காட்டப்பட்டன. கோவில் முழுவதும் அலங்கார தொம்பைகள் கட்டப்பட்டு இருந்தன. எல்லா இறைவன் திரு உருவங்களுக்கும் வெள்ளி கவசம் சாற்றி இருந்தார்கள்.குட்டியாய் சின்ன மண்டபத்தில் பஞ்சலிங்கங்கள் இருந்தன.அதற்கு பட்டுகள் சாற்றி அலங்கரித்து இருந்தனர்.

மேற்கு நுழைவாயில் உபயோகத்தில் உள்ளது, கிழக்கு நுழைவாயில் உபயோகத்தில் இல்லை. மேற்கு நுழைவாயில் அருகில் பசுமடம் உள்ளது.கிழக்கு வாயிலருகில் உயரமான தேர் மண்டபம் உள்ளது. கோவில், கருங்கல்லால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. ஐந்து நிலைக் கோபுரம்.

அழகிய நந்தி மணடபம், கொடிமரம் எல்லாம் உள்ளன .

அடுத்து நாங்கள் சென்றது,முன்னேஸ்வரம் கோயில்.
விவரம் அடுத்த பதிவில்.






15 கருத்துகள்:

  1. கோவில்.. வழிபாடு பற்றிய உங்கள் பதிவுகள் சிறப்பாக இருக்கிறது..
    தொடர்ந்து சொல்லுங்கள், மேலும்.. மேலும்..

    // ஓதுவார்கள் திருமுறைகள் பாடிக்கொண்டு இருந்தார்கள். அடியார்களின் கூட்டம் நிறைந்திருந்தது. //

    தமிழ் இலக்கியப் படைப்புகளான
    திருவாசகம், திரு மந்திரம் போன்ற சைவ சமயப் பாடல்களும்....
    திவ்யப் பிரபந்தம் போன்ற வைஷ்ணவ சமயப் பாடல்களும்.. சிறப்பான படைப்புகளாகும்..
    அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையாகும்..
    --- செய்வோமா ?.. செய்ய வேண்டும்..

    பதிலளிநீக்கு
  2. பைரவர் மனைவியுடன்!! ஓ!
    உலா மிக அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. கொழும்பு செல்லாமலே கோவில்தரிசனம் செய்யவைத்ததற்கு நன்றி. இப்போ இலங்கை சென்றுவருவதில் பிரச்சனை எதுவுமில்லையா?

    பதிலளிநீக்கு
  4. ஆஹா..கொலும்பு போனீங்களா.. வாவ்.. அப்போ எழுத ரொம்ப இருக்கும்...அருமை அருமை...

    பதிலளிநீக்கு
  5. அழகான பயணக்கட்டுரை. பகிர்வுக்கு நன்றிமா.

    பதிலளிநீக்கு
  6. வாங்க மாதவன், நாம் திருவாசகம்,திருமந்திரம், திவ்யப்பிரபந்த பாடல்களை பாடிவந்தாலே நம் குழந்தைகள் தெரிந்து கொள்வார்கள்.

    என் மாமியார்(60 ஆண்டுகளாய்) பன்னிரு திருமுறைகள், திருவாசகத்தை சித்திரை முதல் ஆரம்பித்து அடுத்த சித்திரைக்குள் முடிப்பார்கள். அதைப்பார்த்து என் கணவரும் படிப்பார்கள்.

    கதிர்காமம் கோவில் பதிவு படித்தீர்களா?
    கொழும்பு கோவில்கள் பற்றி தொடர்ந்து சொல்ல நினைத்து இருக்கிறேன்,இறைவன் திருவருள் துணையுடன் .

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சொர்ண பைரவர் மனைவியுடன் இருக்கிறார், தனியாக பைரவரும் இருக்கிறார்.
    நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  8. இலங்கை சென்று வருவதில் பிரச்சனை ஒன்றும் இல்லை. லக்ஷ்மி அக்கா.

    உங்கள் தொடர் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. மங்கை வாங்க எங்கே வெகு நாட்களாய் காணோம்? நலமா?

    நிறைய செய்திகள் இருக்கு. போனபதிவில் கதிர்காமம் கோயில் பற்றி எழுதி இருந்தேன்.

    வருகைக்கு நன்றி மங்கை.

    பதிலளிநீக்கு
  10. ஆதி, பயணத்தில் தொடர்ந்து வருவதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. படங்களுடன் பகிர்வு அருமை. கோபுரம் அழகு.

    முன்னேஸ்வரம் கோயில் தரிசனத்துக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராமலக்ஷ்மி, உங்கள் காத்திருப்புக்கு நன்றி .

    இடையில் வேறு பதிவு வருகிறது, அதன் பின் முன்னேஸ்வரம்.

    பதிலளிநீக்கு
  13. நன்றி அம்மா. எங்களை போன்று வெளியூர் செல்ல இயலாதவர்களுக்கு உங்களைப் போன்றோரின் பதிவுகள்தான் வழி. இங்க இருந்தே தரிசனம் செய்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  14. எல்.கே ஏன் போகமுடியாது ! நீங்களும் போகலாம்.

    உங்களுக்கு இன்னும் காலங்கள் இருக்கு.

    இப்போது நிறைய வசதிகள் இருக்கு.
    உலகம் முழுவதும் சென்று வரலாம்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. கொழும்பில் உள்ள பிரசித்தமான அழகிய கோயில் இது.

    படங்களுடன் நன்றாக பதிந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு